2006-ல் அஸ்ட்ரோவில் வெளிவந்த குற்றப்பத்திரிகை நிகழ்ச்சிக்கு உரைநடை எழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. அதன் முதல் பாகத்திலேயே வட்டி முதலைகளைப் பற்றிய பிரச்சனைதான் பாடுபொருளாக இருந்தது.
கோலாலும்பூர் மற்றும் சிரம்பான் பகுதியில் வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பு அமைந்தது. அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்டபோது ஒன்று புரிந்தது. பெரும்பாலோருக்குப் பணத்தை கையாளும் விதமும் அறிவும் மிகவும் கீழான நிலையில் உள்ளதை அறிய முடிந்தது.
சிரம்பானில் வட்டி முதலைகளால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டை ஒன்று பார்த்தோம். கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி கிடந்தன. சிவப்பு சாயம் வீட்டின் சுவர் முழுவதும் ஊற்றப்பட்டிருந்தது. மழை நீர் ஒழுகி வீடே வெளுத்திருந்தது. வீட்டின் உரிமையாளரின் திருமணப்படம் கண்ணாடி உடைந்து இன்றோ நாளையோ விழும் நிலையில் இருந்தது. குழந்தைகள் விளையாடும் சாமான்கள் வீடெங்கும் சிதறி கிடந்தன. அவர்களும் அது போல எங்கோ சிதறி கிடப்பார்கள் என நினைத்தபோது மனதை வருத்தியது.
மாதத்திற்கு ஒருமுறையாவது வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் செய்தியை நாளிதழ்களில் காணலாம். உண்மையில் இவை வெளிவராத ஆயிரக்கணக்கான வட்டி முதலைகளின் பிரச்சனையில் ஒரு சிறு கடுகுதான். இன்னும் வெளிவராத துன்பச் சம்பவங்கள் ஏராளம். வட்டி முதலைகளை போல் சட்டவிரோதமானவர்களால் மட்டுமல்ல சட்டபூர்வமான வங்கியில் கடன் அட்டை வாங்கியவர்கள் கூடத்தான் கடன் சுமை தாங்காமல் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை இருக்கிறது. கைக்கு அடக்கமாக இருக்க வேண்டிய கடன்கள் இன்று கை மீறி போவதால் மிக இளைய வயதிலேயே பெரும் கடனாளிகளாக ஆகி வருகின்றனர்.
நானே என் தனிப்பட்ட வாழ்வில் கடன் அட்டையை முறையாகப் பயன்படுத்தாது சில வருடங்கள் துன்பப்பட்டிருக்கிறேன். என்னுடைய அறிவியல் படிப்பு எந்த வகையிலும் பொருளாதார அறிவுக்கு துணைப்புரியவில்லை. எல்லா அடிகளையும் வாங்கி எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறேன். இதில் என்னை மூழ்கிவிடாமல் காத்தது என் சிக்கன வாழ்வுதான். சேமிப்பு இல்லாதவர்கள் கடன் வாங்கவே தகுதி இல்லாதவர்கள் என்பது நான் இதில் இருந்து கற்றப்பாடம். நிறைய பணத்தை வைத்திருப்பவர்களின் பாதுகாப்புக்காக உண்டாக்கப்பட்ட கடன் அட்டை நடுத்த மக்களிடமும் இருப்பது வரவுக்கு மீறி செலவு செய்ய அரசே தூண்டுவது போலதான் இருக்கிறது.
இன்று கூட வட்டி முதலைகளால் நெருக்கப்பட்ட தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவரின் மகள் இன்று யு.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமரும் காலையில் நடந்துள்ளது. அதற்கு முன் தினமே வட்டி முதலைகள் அவரை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். நாளை பணம் தராவிட்டால் குடும்பத்தை எரித்து விடுவோமென மிரட்டியுள்ளனர். காலை வரை பணத்திற்கு அல்லாடியுள்ள அவர் பணம் கிடைக்காமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணம் என்பதே மனிதன் கண்டுப்பிடித்ததுதான். ஆனால் அதுவே அவனுக்கு எமனாக மாறுகிறது என்றால் எங்கே தவறு இருக்கிறது?
நிச்சயமாக முதலாளித்துவ சூழல் அதன் முக்கியமான காரணம்தான். வாழ்வின் அனைத்து வழிகளும் பணத்தை கொண்டு இணைக்க முயலும் அதன் இராட்சச கரங்களில் சிக்குண்டு எளியவர்கள் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது.
உடனடியாக அதை மாற்றும் வலிமையை நாம் கொண்டிருக்கவில்லைதான். ஆனால் இச்சூழலை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் கற்று கொண்டு வெற்றிக்கரமாக நீந்த நம்மால் நிச்சயம் முடியும். அதற்கான பொருளாதாரக் கல்வியை இன்றைய தலைமுறை நிச்சயம் கற்க வேண்டும். கற்பிக்கப்பட வேண்டும்.
அறிவியல், கணிதம் போல பொருளாதரமும் கட்டாயமாக அனைவரும் கற்க வேண்டிய பாடமாக உள்ளது. இக்கல்வியும் அறிவும் முழுமையாகக் காக்குமா என தெரியவில்லை ? ஆனால் நம்மை கடனில் மூழ்கிவிடாமல் நிச்சயம் காக்கும் என மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
-U-
வாங்கும் போது சுகம்,செலுத்தும் போது சுமை.தகுதி அரிந்தே கடன் கொடுக்கின்றனர் ஆனால் வாங்கியவரை விட்டு சம்மந்தமில்லா குடும்பத்தாரை சீன்டுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.அந்த வூர் டோனை போடவேண்டும் முதலில்.சொத்தை விற்றாவது ரிவேன்ச் செய்யவேணும்,ஒருவரையும் விடகூடாது.வாழ்க நாராயண நாமம்.