ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைய கண்டனம்; சட்டக்கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்தும், முகாமில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரியும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு புகையிரத நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து 04.09.2012 அன்று மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர்.

இதேவேளை, இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சிங்கள விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது. எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுக-வின் கோரிக்கையும் அதுதான். இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும், இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று. எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.