அரசாங்கம் 2013ல் வலுவான வளர்ச்சியையும் குறைவான வரவு செலவுப் பற்றாக்குறையையும் எதிர்பார்க்கிறது

அடுத்த ஆண்டு வலுவான உள்நாட்டுத் தேவைகள் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் பலவீனமான ஏற்றுமதித் துறையால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்து வரவு செலவுப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இயலும் என அது நம்புகின்றது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகும் வேளையில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு கண்டு அரசாங்கச் செலவுகள் குறைக்கப்பட்டு வரவு செலவுப் பற்றாக்குறை தொடர்ந்து குறையும் என 2013ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அது 2012ல் ஆரூடம் கூறப்பட்ட 4.5 விழுக்காடு முதல் 5.0 விழுக்காடு வரையிலான வளர்ச்சியை விட சற்று அதிகமாகும்.

வளர்ச்சி வலுவாக இருக்கும் போது வருமானம் கூடும். அதனால் வரவு செலவுப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டு 4.0 விழுக்காட்டுக்கு குறைக்க முடியும். இவ்வாண்டுக்கு எதிர்பார்க்கப்பட்ட பற்றாக்குறை 4.5 விழுக்காடு ஆகும். அரசாங்கம் ஏற்கனவே 2012க்கு 4.7 விழுக்காடு இடைவெளியை ஆரூடமாகக் கூறியிருந்தது.

2015க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவுப் பற்றாக்குறையை மூன்று விழுக்காடாகக் குறைக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.