குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன?
கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை.
நமது நாட்டு மக்களில் 70% குடும்பங்களின் மாத வருமானம் 3,500 வெள்ளிக்கும் குறைவானது. ஆனால் நாட்டின் மொத்த வருடாந்தர பட்டுவாடா செய்யப்படும் பணம் 1,000,000,000,000 வெள்ளியாகும். அதாவது சராசரி ஒவ்வொரு குடும்பமும் வருடம் சுமார் 1,200,000 வெள்ளியை அல்லது மாதம் 100,000 வெள்ளியை வரவு-செலவில் காட்ட வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இருக்காது. காரணம் நாட்டு மக்களுக்கு பட்டுவாடாவுக்கு தேவைப்படும் வளங்கள் சொந்தமானது கிடையாது. நாடு நமக்கு சொந்தம் என்றாலும் சொத்து என்பதும் பணம் சம்பாதிக்கும் வளங்களும் பெரும்பான்மையான மக்களின் கையில் இல்லை.
ஒரு குத்துமதிப்பாக சொன்னால், நாட்டின் 80% வளங்கல் சுமார் 10% மக்களின் கையில் உள்ளது எனலாம். இந்த 10% மக்கள்தான் 90% மக்களின் வாழ்கையை தீர்மானம் செய்கிறார்கள். இவர்கள்தான் முதலாளிகள். நமது நாடு இவர்கள் சொல்வதைத்தான் கேட்கும். இவர்களின் ஆதிக்கம்தான் அரசியல்வாதிகள் வழி அரசாங்க கொள்கைகளையும் உருவாக்கும்.
உதாரணமாக, நார்வே நாட்டில் குப்பை கூட்டும் ஒரு தொழிலாளிக்கு மாதச்சம்பளம் 12,000 வெள்ளியாகும். ஆனால் மலேசியாவில் அது போன்ற வேலைக்கு சுமார் 600 – 800 வெள்ளி கிடைக்கும். காரணம், நார்வேயின் நாட்டு மக்கள் தேர்வு செய்யும் அரசியல்வாதிகள் மக்களின் நலன் கருதி கொள்கையை வகுக்கிறார்கள். அதில் வரவு-செலவு என்பது மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பிணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நமது நாட்டில் மக்களை பிழிந்தெடுத்து கொள்ளையடித்து மீண்டும் ஆட்சிக்கு வர வரவு-செலவு திட்டம் போட்டு லஞ்சம் கொடுக்கிறார்கள். அரசியல் என்பது ஒர் அரசாங்கம் அமைத்து மக்களை வழி நடத்துவது ஆகும். அதில் நாட்டின் வளம் மக்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு அப்படி நடப்பது கிடையாது. அரசியல் என்பது எப்படி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை கைப்பற்றுவது, அதன் வழி கிடைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி எப்படி நாட்டின் வளத்தை சுரண்டுவது, தட்டிக்கேற்பவர்களை எப்படி ஒழிப்பது, மக்களை எப்படி அரசு இயந்திரங்களை கொண்டு ஆட்டு மந்தை போல் வைத்திருப்பது என்பதுதான் நடைமுறையகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு, மக்களை கட்டுப்படுத்த இயலாது என்பதால், பல வகையான ஜால வித்தைகள் அரங்கேற்றம் காண்கின்றன.
இன்று பிரதமர் சமர்பித்த பட்ஜெட் மிகவும் பிரமாதம் என்றால், கடந்த 54 ஆண்டுகளாக போட்ட பட்ஜெட் ஏன் பிரமாதமாக இல்லை. இன்று அல்லல் படும் பெரும்பான்மையான மக்கள் ஏதாவது ஒரு வகையில் கடனில்தான் வாழ்கிறார்கள், அவர்கள் பெறும் குறைந்த வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்க இயலாது. கார் கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன், காப்புறுதி இப்படி பலவகையில் மக்கள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைக்கு மூச்சிவிடும் அளவில் ஒரு சிறு உதவி கிடைத்தாலே போதும் என்ற நிலையிலும் உள்ளனர்.
அவர்களது இக்கட்டான பலவீனமே அரசியல்வாதிகளுக்கு பலமாக அமைந்து விடுகிறது. பிச்சை போடுவதுபோல் “இந்தா உனக்கு”, “இதோ இது இனாம்”, “அவருக்கு அது இனாம்” என்று அள்ளி வீசுகிறார்கள்.
இவையெல்லாம் என்ன இவர்கள் உழைத்து நமக்கு கொடுக்கிறார்களா? இல்லவே இல்லை. நாட்டின் வளத்தை அவர்கள் மீண்டும் அனுபவிக்க நாம் அவர்களை தேர்வு செய்ய வேண்டுமாம். நல்ல நாடகம்தான் இந்த பட்ஜெட். மாற்றம் கண்டுவரும் நாட்டு மக்களை கருத்தில் கொண்ட கோமாளியின் பார்வைக்கு பிரதமர் காமெடியனாக காட்சியளிக்கிறார்.
எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை??
500 பில்லின் கடனில் மலேசியா? வெட்ககேடு!!!