பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு ஷா அலாமில் நிதி திரட்டும் விருந்து நிகழ்வை நடத்தினார்கள். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களவையில் மாலையில் சமர்பித்த 2013 வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பிரதமர் தமது பட்ஜெட் உரையில் பக்காத்தான் தலைவர்களைத் தாக்கிப் பேசியதைக் குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அது விரக்தியால் வந்தது என வெளிப்படையாகவே சொன்னார்.
“அது பட்ஜெட் உரை அல்ல. பிரச்சார உரை என்பது 14வயதுச் சிறுவனுக்குக் கூடத் தெரியும்.”
பக்காத்தான் மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பலவீனமாக இருப்பதாகவும் மோசமாக நிர்வாகம் செய்யப்படுவதாகவும் நஜிப் குற்றம் சாட்டியதை லிம் சாடினார்.
“இந்த நாட்டில் அந்நிய முதலீடுகளில் பெரும்பகுதி அந்த மாநிலங்களில் இருப்பதை நஜிப்புக்கு நினைவுபடுத்திய அவர், அந்த மாநிலங்கள் இல்லாவிட்டால் வெளிநாட்டு மூலதனங்கள் குறைவாகவே இருக்கும் என்றார்.
முதலீட்டாளர்கள் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கு வந்து கொண்டிருப்பது, பக்காத்தான் மாநிலங்கள் நல்ல முறையில் நிர்வகிக்கப்படுவதற்குத் தக்க சான்று என்றார் அவர். பிஎன் அவதூறுகளை அள்ளி வீசுகிறது என்றும் லிம் குறிப்பிட்டார்.
“இப்போது தேர்தல் காலம். அவதூறுகள் காலம். பக்காத்தான் தலைவர்கள் அவற்றைத் தாங்கிக் கொள்வர்.”
“அதனை ஏற்கத்தான் வேண்டும். என் நண்பர் மாட் சாபு (பாஸ் துணைத் தலைவர்) சொல்வது போல நீங்கள் நல்ல மனிதராக இருப்பதால் தான் உங்கள் மீது அவதூறுகள் வீசப்படுகின்றன.”
“நல்ல மனிதர் மீதுதான் அவதூறுகள் கூறப்படும். கெட்ட மனிதரை நோக்கி அல்ல.”
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தமது உரையில் பிஎன் வழி நடத்தும் அரசாங்கத்தின் “Janji Ditepati” (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) சுலோகத்தைச் சாடினார்.
பெரிய பெரிய திட்டங்கள் வழங்குவதின் மூலம் ஒருவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டும் போதாது. எப்படி அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
வாக்குறுதிகளும் இடிந்து விழும் கட்டுமானங்களும்
“விளையாட்டு அரங்குகளைக் கட்டி அவை பின்னர் சரிந்து விழுவதும் போதாது. பாலங்களைக் கட்டி அவை இடிந்து விழுவதும் போதாது.”
இரண்டு உலகப் போர்களில் தோல்வி கண்டு போரால் சீரழிந்த ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரில் நாசமாகி விட்ட ஜப்பானும் இடிபாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு உலகப் பொருளாதார வல்லரசுகளாக மாறியுள்ளன.
அது போன்ற போர் அழிவுகளைச் சந்திக்காத மலேசியா அமைதியாகவும் வளப்பமாக இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டு கால பிஎன் ஆட்சியில் ஜப்பானிய ஜெர்மானிய நிலையை நாம் அடையவில்லை எனக் குறிப்பிட்ட அப்துல் ஹாடி “ஏதோ கோளாறு உள்ளது” என்றார்.
ஆகவே மக்கள் இப்போதைய அரசாங்கத்தை நியாயமாக மதீப்பிடு செய்து மாற்று அரசாங்கத்திற்கு வாக்களிப்பர் என அவர் நம்புகிறார்.
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கடைசியாகப் பேசினார்.
தேசிய வரவு செலவுத் திட்டம் தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்க வருமாறு அவர் நஜிப்புக்கு மீண்டும் சவால் விடுத்தார்.
எதிர்க்கட்சிகளைக் குறை கூறும் நஜிப் தம்முடன் முழு விவாதத்திற்குத் துணிச்சலாக முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்களைத் தெரிவிப்பதும் அவற்றைத் தற்காப்பதும் அடிப்படை தலைமைத்துவக் கோட்பாடு ஆகும்.
“வரவு செலவுத் திட்ட உரைகளுக்கு பின்னால் மறைந்து கொள்ளக் கூடாது. ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது.”
பிடிபிடிஎன் கடன், ஊழல், ஏகபோக உரிமைகள் போன்ற பக்காத்தான் முக்கியமான விஷயங்களாகக் கருதும் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் நஜிப் தமது உரையின் போது பக்காத்தான் மாநிலங்களைத் தாக்கிப் பேசியுள்ளதாக அன்வார் வருத்தமுடன் குறிப்பிட்டார்.
மரியாதை காட்டுமாறு வேண்டுகோள்
உண்மைகளை பிரதமர் ஏற்றுக் கொள்ள மறுப்பது அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது அதிகார ஆணவமாக இருக்க வேண்டும்.”
அந்த வரவு செலவுத் திட்டம் மீது எதிர்த்தரப்புத் தலைவருடைய கருத்துக்களை அறிந்து கொள்ள திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அவர் நஜிப்புக்கு அறிவுரை கூறினார். அவ்வாறு நஜிப் கலந்து கொள்வது மரியாதை அளிக்கும் விஷயமுமாகும்.
“நான் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் எதிர்த்தரப்புத் தலைவருடைய வரவு செலவுத் திட்ட எண்ணங்களை நான் செவிமடுக்கத் தவறுவது இல்லை. நான் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை எதிர்த்தரப்புத் தலைவர் செவிமடுத்ததைப் போல நானும் செவிமடுப்பது பொருத்தமானது என நான் கருதினேன்.”
“கேட்பது எளிதான விஷயமல்ல. உங்களுக்கு காது வலிக்கலாம். என்னுடைய காலத்தில் டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் எதிர்த்தரப்புத் தலைவராக இருந்தார். ஆனால் நான் அவருக்கு செவி சாய்க்க வேண்டியிருந்தது. அவருடைய வார்த்தைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நான் எழுதுவதும் போலவும் வாசிப்பது போலவும் பாசாங்கு செய்தாலும் நான் அதனைச் செய்தேன்.”
2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான தங்கள் கவலைகளையும் பிரச்னைகளையும் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவம் திங்கட்கிழமையன்று வெளியிடும் என்றும் அன்வார் அறிவித்தார்.
நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைகின்றது. அதனால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டைச் சந்திப்பதற்கு ஆளும் பிஎன் கூட்டணி தயாராகி வருகின்றது. அரசியல் மதிப்பெண்களைப் பெறுவதற்கு வரவு செலவுத் திட்டம் புதிய போர்க்களமாக மாறியுள்ளது.