அந்நியத் தொழிலாளர் பதிவும் அரைஞாண் கயிறு கட்டியவர்களும்!

(சீ.அருண், கிள்ளான்)

சட்டப் பதிவுடைய அந்நியத் தொழிலாளர், சட்டப் பதிவற்ற அந்நியத் தொழிலாளர் முதலியோரைக்  கைவிரல் ரேகை பதிவு (Biometrik) என்னும் தொழில்நுட்பம் வாயிலாகப் பதிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது நம் அரசு. அந்நியத் தொழிலாளர்களைப் பதிவு செய்வது, சட்டப் பதிவற்றவர்களைச் சட்டப்பூர்வ தொழிலாளர் ஆக்குவது, பொது மன்னிப்பு வழங்குதல், கண்காணித்தல், செயலாக்கத்தை மேற்கொள்ளுதல், வெளியேற்றுதல் ஆகிய ஆறு நடவடிக்கைகளைக் கைவிரல் ரேகை பதிவின் வாயிலாக மேற்கொள்ளவுள்ளது அரசு. அந்நியத் தொழிலாளர்களால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இஃது உதவும் என்னும் நம்பிக்கையில் செயல்படுகின்றது அரசு.

கடந்த 13.7.2011-இல் தொடங்கிய பதிவு நடவடிக்கையின் வாயிலாக 590,000 (8.8.2011 பதிவு எண்ணிக்கை) தொழிலாளர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சட்டத்திற்கு முரணாக இந்நாட்டில் தங்கியுள்ள அந்நியத் தொழிலாளர்களைப் பதிவு செய்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். அந்நியத் தொழிலாளர்கள் மீது நம் அரசு கொண்டுள்ள அக்கறைக்கும் பரிவுக்கும் இஃதொரு சான்றாகும். இந்நாட்டில் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் எந்தவோர் உரிமையும் இல்லாதவர்கள் மீது அரசு கொண்டிருக்கும் அன்புணர்வினை எண்ணி மகிழ்கின்றோம்.  

அதேவேளையில், இந்நாட்டுக் குடிமக்களாகிய தமிழர்கள் மீதும் அரசு அக்கறையும் பரிவும் கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். இந்நாட்டில் சற்றேரத்தாழ 450,000 தமிழர்கள் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையுமின்றி வாழ்கின்றார்கள். இவர்களுள் 150, 000 பேர் தமிழ்ச் சிறுவர்களாவர்.

(சான்று : மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்களுக்கு இண்ட்ராப் அமைப்பினர் விடுத்த கோரிக்கை: 27.7.2011)

இவர்கள் அனைவரும் இந்நாட்டுக் குடிமக்கள் என்பதை அரசுக்கு நினைவுறுத்த வேண்டியுள்ளது. நாடு விடுதலை பெற்று 54 ஆண்டுகளாகியும் நிலை இவ்வாறு உள்ளது என்னும் செய்தி வேதனையைக் கொடுக்கின்றது. இவர்களுள் பெரும்பாலோர் ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையினராக இந்நாட்டில் வாழ்கின்றனர்.

விடுதலைக்குப் பின் இந்நாட்டில் பிறந்த குடிமக்களுக்குப் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் கொடுப்பது அரசின் கடமையாகும். கூட்டரசு அரசமைப்புச் சட்டம் 14(1)(a) பிரிவின் அடிப்படையில் விடுதலைக்குப் பின்பு இந்நாட்டில் பிறந்த அனைவரும் மலேசியக் குடிமக்களாவர். மலேசிய மக்களுக்குக் குடியுரிமை வழங்காமலிருப்பது சட்டப்படி குற்றமாகும் என்னும் கூற்றினை இச்சட்டப் பிரிவு  உணர்த்துகின்றது.

பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை சிக்கல்களுக்குப் பொதுமக்களும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழர்களிடையே நிலவும் பல்வகைக் குறைபாடுகளால் இத்தகைய நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் அக்கறையின்மை, பொறுப்பின்மை தன்மைகளால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் கவனக்குறைவால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறான செய்தியாகும்.

தேசியப் பதிவகத்தாரின் பொறுப்பற்ற தன்மையும் இதற்குரிய காரணமாக உள்ளது. தேசியப் பதிவகத்தாரை நாடும் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் கொடுக்கும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பதிவு நடவடிக்கையினை மேற்கொள்ள முனைவதில்லை போன்றவை பதிவகத்தாரின் செயலாக உள்ளது. பொதுமக்கள் குறிப்பிடும் தகவல்கள் அனைத்தையும் ஐயத்திற்குரியதாக எண்ணுவதால் இத்தகைய நிலை தொடர்கின்றது. இதற்குப் பல நூறு சான்றுகள் உள்ளன. அவற்றுள் சில :

குடியுரிமைக்காகப் பத்து முறை விண்ணப்பம் செய்து நேர்காணலில் தோல்வி என்று பதில் கடிதம் அனுப்பப்படுகின்றது. காரணம் கேட்டால் சொல்ல முடியாது என்று பதில் சொல்வதாக குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்த வருதப்பன் த/பெ வருதப்பன் (வயது 63) தெரிவித்தார்.

(சான்று : மக்கள் ஓசை  : 7.8.2011)

பதினோர் ஆண்டுகள் அகவையுடைய தர்சினி என்னும் சிறுமிக்குப் பிறப்புச் சான்றிதழைக் கொடுப்பதற்கு மறுத்துள்ளது தேசியப் பதிவகம். குழந்தை பிறந்து நாற்பத்திரண்டு நாள்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். தர்சினியின் தந்தை பினாங்கில் பளுவுந்து ஓட்டுநராக வேலை செய்கின்றார். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பிறப்புச் சான்றிதழ் பதிவினை மேற்கொள்ள இயலவில்லை. காலம் கடந்த பின்னர், பல முறை தேசியப் பதிவகத்தை நாடியுள்ளனர். இருப்பினும், தர்சினிக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளனர் தேசியப் பதிவகத்தார். 

 

(சான்று : Malaysiakini.com : 23.1.2009)

 

 தர்சினியின் தந்தை செய்தது சட்டப்படி குற்றம் என்பது உண்மையாகும். பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு மிகத் தெளிவான விதிமுறைகள் இருப்பினும் இவற்றினை மீறியுள்ளார் தர்சினியின் தந்தை. இக்குற்றத்திற்குரிய தண்டம் விதித்து, தர்சினியின் பிறப்புச் சான்றிதழ் பதிவினை மேற்கொண்டிருக்க வேண்டும் தேசியப் பதிவகம்.  ஆனால், நிலை அவ்வாறில்லை, தந்தையைத் தண்டிக்க வேண்டுமென்னும் நோக்கில் தர்சினியின் வாழ்வியல் உரிமையைச் சிதைத்துள்ளது தேசியப் பதிவகம். அந்நியத் தொழிலாளர்களின் குற்றங்களை மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் அணியமாக உள்ள அரசுக்குத் தம் குடிமக்களின் குற்றங்களை மன்னிக்க இயலாதா?

இந்நாட்டுத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கலைக் களைவதற்குப் பல தரப்பினர் பாடுபடுகின்றனர். அவற்றுள் இண்ட்ராப் அமைப்பினரும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழர்கள் எதிர்கொண்டுள்ள பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை சிக்கலைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டது. கடந்த 5.9.2010-இல் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நாற்பது பேரைப் பினாங்கு தேசியப் பதிவகத்திற்குக் கொண்டு சென்றனர் இண்ட்ராப் அமைப்பினர். அவர்களின் விவரங்களுள் சில :

15 ஆண்டு அகவையுடைய சித்ராதுரை என்பவர் அலோர் ஸ்டார் சிறையில் பிறந்தார். இவரின் தாய் இறந்துவிட்டார்; தந்தை எங்கோ ஓடிவிட்டார். இந்நிலையில் உறவினர் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டுள்ளார் சித்ரா. இவருக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுப்பதற்கு மறுத்துள்ளது தேசியப் பதிவகம்.

பிறக்கும்போது தந்தை சிறையில் இருந்ததற்காக தேவிஸ்ரீக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டது தேசியப் பதிவகம். 

சரோஜாவிற்கு 58 ஆண்டு அகவை ஆகின்றது; இவருக்குச் சிவப்பு அடையாள அட்டை மட்டுமே கொடுக்கப்படுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 57 ஆண்டு அகவை உடைய  கிருஷ்ணவாணி மணியம், 66  ஆண்டு அகவை கொண்ட சீத்தா மணியம் ஆகியோருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

பதினோர் ஆண்டு அகவையைக் கொண்ட நவேந்திரன், ஒன்பது ஆண்டு அகவையைக் கொண்ட வள்ளியம்மா ஆகிய இருவரும் லோகேஸ்வரியின் பிள்ளைகளாவர். லோகேஸ்வரிக்கு அடையாள அட்டை இல்லாததால் இவ்விரண்டு பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் அம்மாவின் பெயர் குறிக்கப்படவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்கு தேசியப் பதிவகம் ஒத்துழைக்கவில்லை.  

பிரபு ஆறு மாத குழந்தையாகும்; இக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் பெயர் குறிக்கப்படவில்லை. தந்தை இறந்துவிட்டார், தாயாருக்கு அடையாள அட்டை இல்லாததே இதற்குரிய காரணமென தேசியப் பதிவகம் கூறுகின்றது. தந்தையின் இறப்புச் சான்றிதழைத் தேசியப் பதிவகம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கத் தகவலாகும்.

இருபது ஆண்டு அகவையைக் கொண்ட மாலா என்பவர் மீனாட்சியின் மகளாவார். இப்பெண்ணுக்குப் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் இல்லை. இவரின் தாயார் இஸ்லாம் சமயத்தைச் சார்ந்த ஆடவரைத் திருமணம் செய்து கொண்டு தன் சமயத்தை மாற்றாமல் இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும். 

பெற்றோர் விட்டுச் சென்றதால் ரேணுகா குப்புசாமி தன் சின்னம்மாவுடன் வாழ்கின்றார். 15 ஆண்டு அகவையான ரேணுகாவிற்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. பெற்றோரைப்பற்றிய தகவல் ஏதும் தெரியாத காரணத்தை முன்னிட்டு ரேணுகாவிற்குப் பிறப்புச் சான்றிதழைக் கொடுக்க மறுக்கின்றது தேசியப் பதிவகம். 

விஷ்ணு பரணி என்பவருக்குப் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் இல்லை. பரணி குமரனும் தேவி கண்ணையாவும் விஷ்ணுவின் பெற்றோர் ஆவர். பரணி குமரன் சிறையில் இருக்கின்றார். இவரின் அடையாள அட்டை தொலைந்துவிட்டது. தேவி கண்ணையாவிற்கும் அடையாள அட்டை இல்லை. இக்காரணங்களை முன்னிட்டு விஷ்ணு பரணிக்குப் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் கொடுக்கப்படவில்லை. தேசியப் பதிவகத்தாரிடம் பல முறை முறையீடு செய்தும் இவருக்குப் பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் கொடுக்கவில்லை.

யாக்கோப் த/பெ பாக்கியநாதன் என்பவர் 27.3.1951-இல் கிள்ளான் பெரிய மருத்துவமனையில்  பிறந்தார். இவருக்குச் சிவப்பு அடையாள அட்டை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் அடையாள அட்டை தொலைந்துவிட்டது. பிரிக்பீல்ஸ்ட் காவல் நிலையத்தில் இதனைப்பற்றி புகார் செய்துள்ளார். பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை முதலியவற்றிற்கான கோரிக்கையைத் தேசியப் பதிவகத்தாரிடம் விடுத்துள்ளார். இவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது தேசியப் பதிவகம்.

இந்து சமயத்தைச் சார்ந்த ராணி த/பெ கந்தசாமி ( பிறப்புச் சான்றிதழில் ஜமிலா பின்தி அப்துல் காடிர் – Jamilah binti Abdul Kadir எனக் குறிக்கப்பட்டுள்ளது) பிறப்புச் சான்றிதழ் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். தம் குடும்பத்திலுள்ள ஆறு பேரின் பிறப்புச் சான்றிதழில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ள பெயர், சமயம் முதலியவற்றினை மாற்றுவதற்குரிய மனுவைக் கொடுத்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்றவற்றினைப் பெறுவதற்கு மலேசியத் தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தமிழர்களின் பொறுப்பற்ற தன்மையும் தேசியப் பதிவகத்தாரின் பொருட்படுத்தாத போக்கும் இதற்குரிய காரணங்களாகும்.

அந்நியத் தொழிலாளர்களிடம் நம் அரசு கொண்டிருக்கும் அக்கறையும் பரிவும் அளப்பரியதாகும்.   இதே போன்ற நிலையினை மலேசியத் தமிழரிடமும் நம் அரசு கொண்டிருக்க வேண்டும். சின்னச் சின்னக் குறைகளை முன்னிட்டு மலேசியத் தமிழ்ரகளைப் பேரளவில் தண்டிப்பது அறமாகாது. மலேசியத் தமிழர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை போன்றவற்றினைக் கொடுப்பதற்குத் தயக்கம் எதனையும் அரசு கொள்ள வேண்டியதில்லை. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களையும் பதிவேடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பது பொறுப்புள்ள அரசின் கடமையாகும். இதற்குக் கீழுள்ள சட்டப் பிரிவுகள் வழிவகுக்கின்றன:

கூட்டரசு மாநில சட்டப் பிரிவு (11), (11)(1) ( சமய உரிமை )  அடிப்படையில் ‘மலேசியக் குடிமக்கள் அனைவரும் தம் சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை உண்டு’.

கூட்டரசு மாநில சட்டப் பிரிவு (14), (14)(2) (குடியுரிமை)  அடிப்படையில் ‘மலேசியக் குடியுரிமைப் பெற்றவர்கள், கூட்டரசில் நிரந்தரமாக வாழ்பவர் முதலிய பெற்றோருக்குப் பிறந்தவர்கள் யாவரும் மலேசியக் குடிமக்களாவர்’.

சட்டப் பிரிவு (7) சிறுவர் உரிமை (1955-இல் மலேசியா ஏற்றுக் கொண்டது) அடிப்படையில் ‘பிறந்த குழந்தைகளைப் பதிவு செய்திட வேண்டும். இக்குழந்தைகள் விரும்பிய பெயரினை இட்டுக் கொள்வதற்கும் குடியுரிமைப் பெறுவதற்கும் உரிமை உண்டு. மலேசியக் குடிமக்கள் அனைவரும் தம் சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை உண்டு’.

அந்நியத் தொழிலாளர்களுக்குப் பல்வகை வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசு புதிய புதிய சட்டங்களை உருவாக்குகின்றது. அந்நியத் தொழிலாளர்களின் உரிமை, நலன் முதலியவற்றின்பால் அரசு கொண்டிருக்கும் அக்கறையினை மதிக்கின்றோம்; அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம். ஆனால், இந்நாட்டுக் குடிமக்களுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை முதலியவற்றினைக் கொடுப்பதில் இத்தகைய சுணக்கம் ஏன்?