என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நாள் முதல் வாழ்கையில் முன்னேற வேண்டும் அதுவும் நேர்மையான முறையில் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
எனது முயற்சிக்கு உறவினர், நண்பர்கள் பணம் கொடுத்து உதவி செய்தனர். அந்த பணத்தில் ஒரு நிலத்தை அடையாளம் கண்டு சிவப்பு மிளகாய் பயிர் செய்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்து ஓரளவு வருமானம் பெற்றேன். அதில் 2011-ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக ரி.ம 850.00 செலுத்தியிருக்கிறேன். மிகவும் குறைந்த முதலீட்டில் குறைந்த அளவே வருமானம் ஈட்ட முடிந்தது. 10 ஏக்கர் நிலத்தில் 3 எக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
என் விவசாய தொழிலை தொடர்ந்து கொண்டு செல்லவும் விரிவுபடுத்தவும் நான் ஏறி இறங்காத வங்கிகளே இல்லை. எல்லா வங்கிகளிலும் புறக்கணிக்கப்பட்டேன். விவசாயத் துறை, அரசியல் தலைவர்கள் என அனைவரையும் பார்த்தாகி விட்டது.
MyNadi அரசு சாரா நிறுவனம் பலருக்கு பண உதவி செய்வதை அறிந்து அவர்களையும் தொடர்பு கொண்டேன். என் தோட்டத்தை நேரில் வந்து பார்த்து விட்டு உடனே உதவிகள் செய்வதாக கூறிவிட்டுச் சென்றனர். மிக பெரிய நம்பிக்கையோடு நாள் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுப்பட்டேன். செடிகள் பெரிதாகி விட்டன. ஆனால் இதுவரை எந்த பதிலுமில்லை. என் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் வசதி இல்லாமல் 10 ஆயிரம் செடிகள் என் கண்முன்னே அழிந்து போவதை பார்த்து பார்த்து நான் கண்ணீர் வடிப்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.
என் நிலையை மிகவும் தெளிவாக தமிழ் நாளிதழ்கள் பிரசுரித்திருந்தது. நம் தலைவர்கள் தமிழ் நாளிதழ்கள் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் என் நிலை யாருக்கும் தெரியவில்லை. பல தலைவர்கள் வாய் கிழிய நம் இந்திய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை பற்றி பேசுகிறார்கள். சிறைசாலைகளில் நம் இனத்தவர் அதிகம் என்று புள்ளி விவரத்துடன் கூறுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு யாருக்காவது சிறையிலிருந்து வெளியில் வந்து என்னை போல் வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களின் புள்ளி விவரம் தெரியுமா? சமுதாயத்திலும் குடும்பத்திலும் ஓரங்கட்டபட்ட நாங்கள் இனி எப்பொழுதும் இருட்டில் மட்டும் தான் வாழ வேண்டுமா?
என் மகள் பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றதை நான் பார்த்ததே இல்லை. 5 ஆம் படிவம் முடித்திருக்கும் என் மகளை என் உழைப்பிலேயே மேல் படிப்புக்கு அனுப்ப வேண்டும் என்று அயராது உழைக்கும் ஒரு தந்தை நான். நான் தவறு செய்த போது என்னை தண்டிக்க எல்லா உரிமைகளையும் கொண்ட இந்த அரசாங்கத்திற்கு என் மறு வாழ்வுக்கு துணை புரிய உரிமையும் அக்கறையும் இல்லாமல் போனது ஏன்? எனது இந்த கேள்விக்கு பதில் சொல்ல போவது யார்? இரண்டு ஆண்டுகள் நான் படும் பாடு, பட்டு உழைத்த உழைப்பு , என் மிளகாய் தோட்டத்தை இனியும் நடத்த முடியுமா என்ற போராட்டதில் நான் தோற்று கொண்டே வருகிறேன். தாழ்வு மனப்பான்மை என்னை தடம் புரள செய்கிறது.
நான் யாருடைய சொத்திலிருந்தும் பங்கு கேட்க வில்லை. அரசாங்கம் இந்திய சிறு தொழில் வியாபாரிகளுக்கு ஒதுக்கியிருக்கும் 18 கோடியிலிருந்து ஒரு சிறு தொகையைக் கடனாக மட்டும்தான் கேட்கிறேன். உதவி செய்கிறேன் என்று சொல்லி தொலைபேசி எண்களை கொடுத்து விட்டு செல்கிறார்கள். 100 முறை தொடர்பு கொண்டாலும் தொலைபேசியை எடுத்து பேச மறுக்கும் யாரையும் இனி நான் நம்பத் தயாராக இல்லை. அவர்களின் பெயரை இங்கு எழுதி யாரையும் சிறுமைப்படுத்தும் அநாகரிகமானவன் அல்ல நான். நேர்மையாக வாழத் துடிக்கும் ஒரு சாதரண மலேசியக் குடிமகன். திருந்தி வாழ நினைக்கும் என்னை போன்றவர்களை தயவு செய்து புறக்கணிக்காதீர்.
– பாலசந்திரன்
தொலைபேசி – 016 980 9270