[அண. பாக்கியநாதன்]
கடந்த செவ்வாய்க்கிழமை 27-9-2011இல் ரோட்டில் போகும் முனுசாமிகளின் கருத்துகளெல்லாம் செய்தியாக தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியிடுவதாகத் துணை அமைச்சர் சரவணன் குறைப்பட்டிருப்பது, மாண்புமிகுவாக இல்லாதவர்களின் செய்திகள் வெளியிடப்படக்கூடாது என்ற நோக்கில் கூறப்பட்ட கருத்தாக உள்ளது.
கடந்த தேர்தல் வரை சாலையில் செல்லும் குப்பனாக, சுப்பனாக, முனுசாமியாக இருந்தவர்தான் இன்று துணையமைச்சராகவுள்ள சரவணன் என்பதனை மறந்து, துணையமைச்சர் என்ற போதையில் பிதற்றியுள்ளார் மஇகாவின் தேசிய உதவித்தலைவர்.
சாலையில் செல்லும் பல குப்பனும், சுப்பனும், முனுசாமியும் சேர்ந்து போட்ட வாக்கு பிச்சையில் வந்த துணை அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு, அவர்களையே ஏலனப்படுத்து கூடாது.
ஆடு மேய்ப்பவர் அமெரிக்காவின் அதிபராகவும் வரலாம் என்ற நீதியினை எடுத்தரைத்து மாணவர்களை உற்சாக படுத்த வேண்டிய கூட்டத்திற்குச் சென்று அங்கே அப்பன் தொழிலே பிள்ளைக்குச் சொந்தம் எண்ணும் ஆரியக் காணம் பாடக்கூடாது என்ற தெளிவினை முதலில் இவர் பெற வேண்டும்.
அன்றையக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பி.எம்.ஆர் மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களும் இன்றைய நிலையில், சரவணன் பாணியில் எடுத்துக்கொண்டால் சாலையில் செல்லும் குப்பனும், சுப்பனும், முனுசாமியுந்தான். ஆனால் அவர்களுக்கு அவரவர் குடும்பத்துக்கு அப்பால் இந்நாட்டைப் பற்றி, சமுதாயத்தைப் பற்றி, சிந்திக்க, பேச, எழுதவுள்ள உரிமையை, பகுத்தறிவை ஏளனப் படுத்தக் கூடாது.
உண்மை. இந்தியர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல. ஆனால் சரவணை போன்ற பிற்போக்குவாதிகளின் நாட்டாமையால், செயலால், இதுபோன்ற பிரச்சாரத்தால் கடந்த 54 ஆண்டுக்காலமாக இந்தியர்கள் இந்நாட்டில் இளிச்சவாயர்களாக்கப்பட்டனர். இந்திய சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு மஇகாவின் கையில் ஒப்படைத்து பாரிசானின் வாயிலாக தீர்வுப்பிறக்கும் எனக் காத்திருந்ததால் இந்தியர்கள் இன்று இளிச்சவாயர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
சுதந்திரத்திற்கு முன் அரசாங்க வேலைகளில் 63 விழுக்காடாக இருந்த நமது நிலை இன்று 3.7 விழுக்காடாகவும், உயர்கல்வியில் 34 விழுக்காடாக இருந்த நிலை மாறி இன்று 0.9 விழுக்காடாகவும், நில உடமைகளில் 37 விழுக்காடாக இருந்தது இன்று 0.8 விழுக்காடாக சரிவுக்கண்டதை எல்லாம் தமிழ் நாளேடுகள் பட்டியலிடுவதில்லை. காரணம், சரவணன் போன்றவர்களின் கோமாளித்தனத்தை, வீரத்தை, விவேகத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டிப் பகைமையைத் தேடிக்கொள்ள அவை விரும்புவதில்லை. அதனால் மறைமுகமாகச் சாலையில் செல்லும் குப்பன், சுப்பன், முனுசாமியின் உள்ளக் குமுறல்களை அறிக்கைகளாக வெளியிடுகின்றன.
இன்று மஇகாவின் 2 அமைச்சர்கள் முதல் தாய்மொழிப்பள்ளிக்கு அறிவிக்கப்பட்ட ரிம10 கோடிவரை சாலையில் செல்லும் குப்பனும், சுப்பனும், முனுசாமியும் சாதித்ததுதான் என்ற உண்மையைக்கூட சரவணன் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் மக்கள்சக்தி என்ன என்பதைச் சமூகம் நன்றாக உணர்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் மக்கள் செய்த சிறிய மாற்றமே, அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை இன்று இச்சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது தொடர வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் ஏற்படத்தியுள்ள மாற்றத்தை இன்னும் பெரிய அளவில் நிகழ்த்திக்காட்ட நாம் தயாராக வேண்டும்.
நாளை இம்மண்ணில் நம் பிள்ளைகள் சமத்துவமான மலேசியர்களாக பவனி வரவேண்டும் என்ற வேட்கைகொண்ட சிங்கமாக நம்மினம் ஒளிர வேண்டும். எல்லா மக்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு மலேசியாவை காணப் புறப்படும் வேளையில் ஆந்தைகளின் அலறலா நம்மைத் தடுக்கும். அலட்சியப்படுத்த வேண்டிய அற்ப ஓசையது.