இறுதிப் போரின் பின்னரும், நலன்புரி நிலையத்தில் இருந்த போதும் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஓர் ஆண்டு புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 313 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பலானோர் நீதிமன்ற உத்தரவையடுத்து புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் இதுவரையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருபவர்களில், 430 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
எனினும், இப்படியான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பயனைத்தருகின்றன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள 4 யாழ் பகல்கலைக்கழக மாணவர்களுக்கும் தனியாக புனர்வாழ்வுப் பயற்சியளிக்கப்பட்டு வருவதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்ததிருக்கின்றார்.
பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இன்னும் விடுதலை செய்யய்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம், அவர்கள் தங்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்திக் கொள்வதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுத்திருப்பதாகவும், அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் அவர்களுக்கு சிங்கள மொழி போதிக்கப்படுவதாகவும், வேறு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.