அன்பு வேதமூர்த்திக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்!

hindraf_hunger_viratham_06உங்களுடைய உண்ணாவிரதம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் தளர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. நீங்கள் சொல்ல வந்ததை  கடந்த 21 நாட்களில் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.. இப்பொழுது இந்திய மக்கள் உங்களின் உன்னத நோக்கத்தையும் நீங்கள் யாருக்காக, போராடுகின்றீர்கள் என்பதனையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

சீக்கிரம் நீங்கள் பழைய நிலைமைக்கு திரும்பவேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய சேவைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. நீங்கள் எங்களை விட்டு பிரிந்து போக நேர்ந்திருந்தால் இவ்வளவு நாட்கள் இந்த இந்திய சமூகத்திற்காக உங்களால்  செய்யப்பட்ட சேவைகளுக்கு  ஓர் அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அன்று 3 லட்சம் இந்தியர்களை வீதிக்கு கொண்டு வந்து ஆட்சி மாற்றத்திற்கு ஆணி வேராய் இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்று தனிமரமாய் நின்று இந்தியர்களின் தலை எழுத்தை  மாற்ற எத்தனித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் தியாகத்திற்கு மக்கள் மதிப்பளிக்கின்றார்கள், தலை வணங்குகின்றார்கள்.

நீங்கள் பிறந்த சமுதாயாத்திற்காக உயிரையும் பணையம் வைக்கத் துணிந்த உங்களின் தியாகம் மற்ற இந்தியத் தலைவர்களையெல்லாம் தலை குனிய வைக்க வல்லது. இருந்த போதும் இன்றும் நீங்கள் செய்வது ஒரு நாடகம் என்று கூறுபவர்களும் இருக்கின்றார்கள். உங்களைப் பற்றிய செய்திகள் மலாய் ஆங்கிலப் பத்திரிகைகளில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

நீங்கள் மீண்டு வந்து இவர்களுக்கெல்லாம் உங்களின் இந்த 22 நாள் விரதம் ஒதுக்கப்பட்ட சமுதாயத்தின் ஓலங்களை வெளிக் கொணர நீங்கள் நடத்திய வேள்வியின் முதற் கட்டமென புரிய வைக்கவேண்டும்.

ஆனால் உண்ணாவிரதப் போராட்டம் என்பது மிகக் கடுமையானதும் கொடுமையானதும் கூட. அதையே நீங்கள் உங்களின் கடைசிப் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்த முயன்றது எங்களைப் போன்ற  நடுத்தர வர்கத்தினரை நிலை குலைய வைத்துவிட்டது.

இந்தியர்களின் போரட்டத்திற்கு உங்களின் தலைமைத்துவம்  மிகவும் தேவை. உங்களின் உண்ணாவிரதம் இந்தியர்களின் குமுறல்களை வெளிக்கொணர ஒரு மார்க்கமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய அதுவே உங்களின் உயிருக்கு எமனாக மாறக்கூடாது.

இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்தைத் தொடவேண்டும். எந்த ஆட்சி அமைந்தாலும் அதனை தட்டி இந்தியர்களின் நலனுக்காக குரல் கொடுக்க நீங்கள் இருக்க வேண்டும். செவிசாய்க்காத அரசுக்கு எதிராக உங்கள் பின்னால் மீண்டும் தெருவுக்கு வர இந்நாட்டு இந்தியர்கள் எப்பொழுதும் தயாராகவே இருப்பார்கள்.

ஆளும் கட்சியும் ஆளக் காத்திருக்கும் கட்சியும் பிடி கொடுத்து பேசாத இந்த சமயத்தில் நீங்கள் பிடிவாதமாக இருந்து ஏதாவது ஒரு கட்சி உங்களின் கோரிக்கையை ஏற்றால்தான் விரதத்தை கைவிடுவேன் என்று அடம் பிடிப்பது சிறந்த வியூகமாகக் கொள்ள முடியாது.

Hindraf-Waytha faintsஒரு வேளை உங்களுக்கு ஆகக்கூடாத ஒன்று ஆகியிருந்தால் இந்த இரு அரசியல் கட்சிகளும் ஒரு வகையில் சந்தோஷப்படுவார்களேயன்றி உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றிவிடுவார்கள் என்று  நினைக்க வேண்டாம்.

ஆரம்ப முதல் இந்தியர்களின் வாழ்க்கை இந்த நாட்டில் ஒரு போராட்டமாகவேதான் இருந்து கொண்டு வந்திருக்கின்றது. அதை ஒரு பேனாவின் மையைக்கொண்டு ஒரு நொடியில் மாற்ற முடியாது. போராடித்தான் பெறவேண்டும் என்பது நாம் வாங்கி வந்த தலை எழுத்து.. அதே வேளையில் நாட்டின் துரித வளர்ச்சியும் இந்திய சமுதாயத்தினரின் அதிகமான விழிப்புணர்வும் இந்த மற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை.

இந்தியர்களின் ஓட்டு பயன்படுத்தப் பட்டால் மட்டுமே ஆட்சியை மாற்றவும் அல்லது பழைய ஆட்சியை நிலை நிறுத்தவும் முடியுமே தவிர, அவர்கள் அந்த உரிமையை பயன்படுத்த தவறி விட்டால் எந்த ஒரு அரசியல் மாற்றத்திற்கும், 2008ல் ஏற்பட்டதுபோல், அவர்கள் காரண கர்த்தாவாக இருக்கமுடியாது. இந்தியர்கள் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடக்கூடாது என்பது  போன்ற அறிவிப்பை தாங்கள் வெளியிட்டால் அதில் குளிர் காயப்போவது இந்த இரண்டு பெரும் கட்சிகளும்தான். ஏனெனில் , இந்தியர்கள் வாக்கு இல்லையென்ற பட்சத்தில் அவர்களின் கவனம் மற்ற இரன்டு பெரிய இனங்களைக் கவர செலுத்தப்படும்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நம்மை அவர்கள் கவனிக்கப் போவதில்லை. நமது தேர்தல் புறக்கணிப்பை ஒரு காரணமாகக் கொண்டு நம் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மாட்டார்கள். ஆகவே , தயவு செய்து உங்கள் கொள்கையில் சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் போரட்டத்திற்கு தயாராகுங்கள். இந்தியர்களை தங்கள் உணர்வுக்கும்  மனசாட்சிக்கும் ஏற்ப ஓட்டுப் போட வேண்டுகோள் விடுங்கள். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்தியர் நலனுக்காக அரசியலில் நுழையாமலேயே வெளியிலிருந்து  தொடர்ந்து போராடுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார்கள்.

இப்படிக்கு
உங்கள் நலம் விரும்பி
கோவிந்தசாமி அண்ணாமலை

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272