அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால் புலிகள் அமைப்பை தடைசெய்யததுபோல மேற்குறிப்பிட்ட முஸ்லீம் அமைப்புகளையும் இலங்கை தடைசெய்துள்ளது.
1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல் கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சேவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அல்கய்தா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இன் நடவடிக்கை மூலமாக இலங்கை அரசு 2 மாங்காயை கல்லெறிந்து விழுததப்பார்க்கிறது. ஒன்று இதனூடாக அமெரிக்காவை தாஜா பண்ண முயல்கிறது. அடுத்தது என்னவென்றால் உள் நாட்டில் அரசுக்கு எதிராகச் செயற்படும் முஸ்லீம்களை இனி சிறையில் அடைக்க , அவர்களுக்கும் அல்கைதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுவார் கோட்டபாய !
இதற்கும் இனி முஸ்லீம் சகோதரர்கள் தயாராக இருக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நாவின் மற்றுமொரு மனித உரிமை கூட்டம் இருக்கிறது. அதற்கு முன்னதாக அமெரிக்காவை குளிரவைக்கவேண்டும் ! அதனை இலங்கை படு சூசகமாகச் செய்து வருகிறது.