இராணுவத்திடம் சரணடைந்தவர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்

eelam16713cஇலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் காட்ட வேண்டும் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன.

இதன்போது, காணாமல்போயுள்ள உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தினர் வவுனியா நீதிமன்றத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளையும் கணவன்மாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு நீதிமன்றமே தஞ்சம் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் காணாமல் போனோரின் உறவினர்கள் ஊர்வலமாக வந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு எதிரில் பிரதான வீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

கொழும்பில் இருந்து செயற்படுகின்ற, காணாமல்போன உறவுகளைத் தேடும் சங்கத்தின் முக்கியஸ்தர்களான பிரிட்டோ, அருட்தந்தை சரத் இதமல்கொட ஆகியோருடன் மன்னார் பிரஜைகள் குழுவினரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோரும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பாக அவர்களது குடும்ப உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று நடந்தன.

இதன்போது, எதிர்த்தரப்பினர் தமது விளக்கத்தைத் தருவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் கோரினர்.

அதேநேரம் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைளில் ஆஜராவதற்கு விசேட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த தவணை முதல் அவரே இந்த வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அரச தரப்பினர் தமது விளக்கங்களை தெரிவிப்பதற்கு அடுத்த தவணையே இறுதி சந்தர்ப்பம் என்று கூறியுள்ள நீதிபதி, வழக்கு விசாரணகளை எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். -BBC

TAGS: