பொதுமண்டபத்திற்கு போராட மஇகா-வுக்கு காமாட்சி அழைப்பு!

Kamache_dapபல தவணைகள் மஇகா-வின் இரும்புக் கோட்டையாக இருந்த காராக் நகரில் ஒரு பொது மண்டபம் கிடையாது. இங்கு வாழும் மக்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு பொது மண்டபம் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள். வருடத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருமணங்கள் காராக்கில் நடக்கின்றன. அவை சீனப் பள்ளி மண்டபம் மற்றும் சீனக் கோவில் மண்டபத்தில் தான் நடந்து வருகிறது. இப்படி வருந்தும் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, அதற்காக போராடவும் ஒரு மண்டபத்தை நிறுவவும் மஇகா-வுடன் இணைந்து செயலாற்ற தயார் என தமது பத்திரிக்கை செய்தியில் கூறுகிறார்.

கடந்த பொது தேர்தலின் போது மஇகா-வை பிரதி நிதித்து போட்டியிட்ட திரு குணா அவர்கள் தான் வெற்றிப்பெற்றால் இங்கு நிச்சயமாக ஒரு பொது மண்டபம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்தார். அவர் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் தமிழர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்திருப்பதற்கு காரணம் அவரின் வாக்குறுதியும் அவர் மீது தமிழர்கள் கொண்டுள்ள மதிப்பும் காரணமாகும். மந்திரி பெசாரின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அவர் காராக் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு அதிகம் இருப்பதாக கூறுகிறார் தமிழச்சி என்ற உணர்வுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் காமாட்சி.

“சபாய் சட்டமன்ற உறுப்பினராக நான் எதிர்க்கட்சி அணியில் இருந்தாலும் காராக் மக்கள் நெடு நாட்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் ஒரு மண்டபம் அமைய வேண்டும் என்பதற்காக நான் ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார். இதற்காக காராக்கில் வாழும் பல முக்கியமானவர்களிடம் இது பற்றி பேச்சு வார்த்தை நடத்திய போது, இங்கு மண்டபம் அமைக்க இட வசதி இல்லை என்றாலும் நகராண்மை கழக மண்டபம்  (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்) காலியாக இருக்கிறது. அங்கேயே ஒரு பொது மண்டபம் எழுப்பினால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்ற தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர். இது மிகவும் சிறந்த யோசனையாக இருப்பதால் இதை திரு குணா அவர்கள் கருத்தில் கொள்வார் என்று நான் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக காமாட்சி கூறுகிறார்.

காராக்கில் பொது மண்டபம் அமைய வேண்டும் என்பது மக்களின் மிக நியாயமான கோரிக்கை. அது காலத்தின் கட்டாயம். பகாங் மாநிலத்தின் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா  தேசிய தலைவருமான  டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் அவர்களுக்கு தான் இந்த பணிவான வேண்டுகோளை விடுப்பதாக தனது அறிக்கையில் கூறுகிறார்.

காராக்கில் பொது மண்டபம் அமைய உங்களோடு பணியில் ஈடுபட தான் தயார் என்கிறார் தமிழச்சி காமாட்சி துரைராஜு.