இலங்கை சிங்கள இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீன உளவாளிகள்!

chinese_army_paradeதமிழக கடற்க்கரைப் பகுதிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம், சிங்கள இராணுவத்தில் ஊடுருவியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீன உளவாளிகள்தான்! என அதிரடி கிளப்புகிறார், ஈழக் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன்.

யாழ்பாணத்தில் பிறந்தவரான ஜெயபாலன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகக் கருதப்பட்டவர்.

நோர்வே அரசுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுகளில் “ஆடுகளம்” படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

அண்மைக் காலமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நம்மிடம் பேசினார் ஜெயபாலன்.

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலானா தமிழக கடலோரப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது குறித்து 2006-ம் ஆண்டு ‘குமுதம் தீராநதிக்கு நான் அளித்த பேட்டியிலேயே கூறியிருந்தேன். அதைத்தான் இப்போது இந்திய அரசின் உளவுத்துறையும் குறிப்பிட்டிருக்கிறது.

தமிழக கடற்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் ரோந்து அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக அறிகிறேன். இது அவசியம்தான்! ஆனால் இதைவிட இந்த அச்சுறுத்தலுக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்பதுதான் மிக முக்கியம்.

கடந்த 2004-ம் ஆண்டு இலங்கையில் சுனாமி ஏற்பட்டபோதுதான் “நிவாரணப்பணிகள்” என்ற பெயரில் முதல்முறையாக பாகிஸ்தான் இராணுவத்தினர் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த வாய்ப்பை பயன்படுத்துக்கொண்டு பாகிஸ்தான் உளவாளிகள் இலங்கை இராணுவத்தில் ஊடுருவிவிட்டனர்.

இதேபோல 2009-ம் புலிகளின் வீழச்சிக்கு பிறகு சீன இராணுவத்தினர் ஆதிக்கமும் அங்கு அதிகமாகிவிட்டது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவின் ஸ்திரத் தன்மையை அசைத்துப் பார்ப்பதில் எப்போதுமே ஆர்வம் உண்டு.

இவ்வளவு காலமும் இந்தியாவின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு திசைகளில் மட்டும் அவர்களது அச்சுறுத்தல் இருந்தது.

தற்போது தெற்கேயும் அச்சுறுத்தலைக் கிளப்புவதன் மூலமாக இந்திய இராணுவத்தின் கவனத்தைச் சிதறடிக்க நினைக்கிறார்கள்.

சிங்களவர்களைப் பொறுத்தவரை, வரலாற்று ரீதியாக அவர்கள் இந்தியாவை ஓருபோதும் நண்பர்களாக ஏற்றுக்கொண்டதில்லை.

எனவே, தங்கள் இராணுவத்தில் சீன, பாகிஸ்தான் ஊடுருவலை அவர்கள் தடுக்க விரும்புவதில்லை.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களிலும்கூட சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகளின் பங்கு உண்டு.

இதைச் செய்வதன் மூலமாக இந்திய அரசு மீது தமிழக மீனவர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறார்கள்.

மீனவர்களுக்கு இந்திய அரசு மீது வெறுப்பு உருவாகிவிட்டால், அதை சாதகமாக்கி கடலோரப் பகுதிகள் வழியாக ஊடுருவல் நடத்துவதுதான் உளவாளிகளின் திட்டம்.

இதையெல்லாம் உணர்ந்துதான், இலங்கையில் வடபகுதியில் உள்ள தமிழர்களின் நலனில் இந்திராகாந்தி அதீக அக்கறை காட்டினார்.

அதாவது, காங்கேசந்துறை முதல் அம்பாந்தோட்டை மாவட்ட கடற்கரை வரையிலான தமிழ்ப் பகுதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்.

அங்கு தமிழர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றிருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு பாதுகாப்பு.

ஆனால், இந்தியாவின் காலத்திற்குப் பிறகு வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர்சிங், இலங்கை தூதராக இருந்த தீட்சித போன்றவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது.

அதுதான் இன்று பாதுகாப்பு அச்சுறுத்தலாக வினைந்திருக்கிறது. இதில் எங்கள் பக்கம் உள்ள தவறுகளையும் நான் மறுக்கவில்லை எங்கள் இளைஞர்களுக்கும் வீரம் இருந்த அளவுக்கு விவேகம் இல்லாமல் போய்விட்டது.

அதேசமயம், இந்தியா இனியாவது தனது பாதுகாப்புக்கு, ஈழத்தமிழர் நலன் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அங்கிருந்து அகற்ற சர்வதேச நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவின் ஸ்திரத் தன்மையை அசைத்துப் பார்ப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு.

அதேபோல் தமிழக மீனவர்களின் நம்பிக்கையைப்பெறும் விதமாக எடுக்க வேண்டியது மிக அவசியம்.

இன்றளவும் சாதாரண வள்ளங்களில் கச்சத்தீவுப் பகுதிகளில் போய் மீன் பிடிப்பதால்தான் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஆழ்கடலில் போய் மீன்பிடிக்க வசதியாக பெரிய விசைப்படகுகள் அல்லது கப்பல்களை அரசாங்கமே கடனாகவோ, மானியமாகவோ வழங்கலாம். அப்படிச் செய்தால் தமிழக மீனவர்கள் அவுஸ்திரேலியக் கடற்கரை வரை போய் மீன் பிடிக்க முடியும். மீனவர்கள் இந்திய அரசு மீது முழு நம்பிக்கை வைத்து உஷாராக இருக்கும்பட்சத்தில், அந்நிய சக்திகள் ஊடுருவ வாய்ப்பே இல்லை” என்று அடித்துச் சொல்கிறார்.

இந்திய மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துக்கள் இவை!

TAGS: