உலகக் கிண்ண கால்பந்து: ‘குராக்கோ’ தீவு தந்த பாடம்

இராகவன் கருப்பையா- அண்மையில் நிறைவடைந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்ற குராக்கோ(Curacao) எனும் ஒரு சிறிய நாடு  பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று ஸ்பெய்ன் முத்திரை படைத்துள்ள போதிலும் இரு சிறிய நாடுகள் வியக்கத்தக்க வகையில் படைத்துள்ள சாதனைகளை நாம் புறம்தள்ளிவிட முடியாது.

உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கேப் வெர்டே,’ மற்றொன்று ஒரு குட்டிக் தீவான இந்த குராக்கோ. இச்சிறிய நாடு தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதி பெருநிலத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் கடல் தூரத்தில் அமைந்துள்ளது.

இதன் பரப்பளவு சுமார் 444 சதுர கிலோ மீட்டர்தான். அதாவது ஏறத்தாழ நமது சிலாங்கூர் மாநிலத்தின் புகழ்பெற்ற கடலோரப் பட்டினமான கோலசிலாங்கூரை விட சற்று சிறியது என்று கூட சொல்லலாம்.

சுமார் 150,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக் கொண்ட குராக்கோவின் கால்பந்துச் சங்கம், உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு 26 பேர் கொண்ட ஒரு குழுவை தேர்வு செய்வதில் பெரும் சவாலை எதிர்நோக்கியது.

ஏனெனில் தேர்வுக்கு வந்த அவ்வளவு பேரும் திறமை படைத்த, ஒழுக்கம் மிக்க, மன உறுதியும், உயரிய தன்னம்பிக்கையுடையவர்களாகவும் இருந்தனர்.

இரண்டு கால்பந்து அரங்குகளை மட்டுமே கொண்டுள்ள குராக்கோவில் சாதாரணமாக விளையாடுவதற்கோ பயிற்சிகளை மேற்கொள்வதற்கோ அதிகமானத் திடல்கள் கூட இல்லை. அவ்விரு அரங்குகளிலும் 10,000திலிருந்து 15,000 பேர் மட்டுமே அமர முடியும்.

இத்தகையச் சூழலில், இவற்றையெல்லாம் ஒரு குறையாக பொருட்படுத்தாமல், தேர்வு செய்யப்பட்ட அந்த 26 ஆட்டக்காரர்களும் மிகுந்த உற்சாகத்தோடு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அந்நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் கடலைச் சார்ந்த சுற்றுப் பயணத்துறைதான். மதக் கட்டுப்பாடின்றி பரந்த கொள்கையுடையவர்களாக உலக சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் அவர்களில் 94 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்.

மொத்தம் 9 பேரை மட்டுமே அமைச்சர்களாகக் கொண்டு, ஊழலின்றி நிர்வாகம் செய்யப்படும் குராக்கோ நாட்டில் ஒரேயொரு விமான நிலையம்தான் உள்ளது.

உலகக் கிண்ண போட்டிகளின் முதல் சுற்றில் இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்டு ஒரு ஆட்டத்தில் கோல் ஏதும் போடாமல் சம நிலை கண்டதால் அந்நாடு அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற இயலவில்லை.

ஜெர்மனியுடனான அதன் முதல் ஆட்டத்தில் குராக்கோ 1 – 7 எனும் கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது. இருந்த போதிலும் 4 முறை கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனிக்கு ஏதிராக ஒரு கோல் புகுத்தியது அவர்களுக்கு மாபெரும் சாதனையாகும்.

உலக தர வரிசையில் மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளை பின்தள்ளி 82ஆவது இடத்தில் இருக்கும் குராக்கோ மிகுந்த பாராட்டுக்கு தகுதியுடையது.