கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பழனிவேல் இராஜிநாமா செய்ய வேண்டும்!

palanivelநடந்து முடிந்த 13-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் மஇகா-வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல்.

இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுத்து வாக்குகளைப் பெற்றாரென இத்தொகுதியைச் சேர்ந்த ஜைனால் காப்ராட், நோர்மான் கோங் என்பவர்கள், பெர்சே அமைத்த ‘மக்கள் பஞ்சாயத்தில்’ சாட்சியம் கூறியுள்ளனர்.

ஒரு வாக்குக்கு 100 வெள்ளி தருவதாக ஒப்புக்கொண்ட இந்த தேசிய முன்னணி வேட்பாளர், இதுவரை 20 வெள்ளி மட்டுமே கொடுத்துள்ளதாகவும், மீதியுள்ள 80 வெள்ளியை இன்னும் கொடுக்கவில்லை எனவும் புகார் கொடுத்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்டோர், கண்டிப்பாக அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர்கள் இடங்களுக்கு, சாலை, சுகாதாரம், கல்வி போன்ற வசதிகள் செய்துத் தரப்படமாட்டாது என அவ்வேட்பாளர் தங்களை மிரட்டியதாக அவ்விருவரும் சாட்சியமளித்துள்ளனர்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என சென்ற மாதம் வழக்குத் தொடுத்தோம்.

ஆனால் எங்களது மனு செலவுத் தொகையுடன் தேர்தல் நீதிமன்றத்தில்(Elections Court) நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு நடந்திருக்குமேயானால், மேற்சொன்ன இவ்விவகாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கும் வாய்ப்புகள் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் சரவா மாநில தேர்தலில், ஒரு தொகுதியில் வெற்றிப் பெற்றிருந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு கையூட்டாக 10 வெள்ளி கொடுத்தார் என்பதற்காக, அவரது வெற்றி நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ஒரு இடைத்தேர்தலுக்கு வழி வகுத்தது நீதிமன்றம்.

ஆனால் கேமரன் மலை தொகுதியில், அத்தகையதொரு வழக்கினை நீதிமன்றம், எங்களுக்கு ஏற்படுத்தித் தராததால், தான் புரிந்தச் செயலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று, இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து, மீண்டுமொரு தேர்தலுக்கு பழனிவேல் வழிவிட வேண்டும்.

– ஜே.சிம்மாதிரி,
ஜ.செ.க முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்.