பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் பொருத்தமற்றவர்களா?

Indian crowdநான் அப்படி சொல்லவில்லை. நமது தமிழ்ப் பத்திரிக்கை உலகம் அப்படித்தான் நம்புகிறது.

காரணங்கள் தெரியவில்லை.  கோளாறு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை.

ஒரு வேளை நமது  தோட்டுப்புற சூழ்நிலை தான் காரணமோ? தமிழ்ப் பத்திரிக்கைகளில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் தோட்டுப்புறங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை  மறுப்பதற்கில்லை.

தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள், கோவில்கள் என்று இந்தத் தோட்ட சூழலிருந்து பத்திரிக்கைத் துறைக்கு வந்தவர்கள் அதனை விட முடியாமல் அதனையே பத்திரிக்கைகளில் பிரதிபலிக்கின்றனரா?

அவர்களும் மாறவில்லை. வாசகர்களையும் மாற விடவில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

தமிழுக்குப் பொருளாதார மதிப்பு உண்டு என்று தெனாலி என்னும் வாசகர்  சொன்னதில் உண்மை உண்டு. இல்லாவிட்டால் இன்று ஆறு  தமிழ்  நாளிதழ்கள் வெளி வர வாய்ப்பில்லை.

எல்லாவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு உண்டு. பணம் போட்டு பத்திரிக்கை நடத்தும் முதாலாளிகளுக்கு இது தெரியாதா, என்ன?  அதற்குத் தமிழ்ப்பத்திரிக்கைத் துறையினரும் விதி விலக்கல்ல. ஆனால் வர்த்தக செய்திகளுக்கு மட்டும் ஏன் ஒரு சிறிய அளவு கூட நிதி ஒதுக்குவதில்லை?

உள்ளூர் அடாவடி அரசியல் செய்திகள், தமிழ் நாட்டு தடாலடி அரசியல் செய்திகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புக்கள் அத்தோடு இனப்பற்று என்று சொல்லிக்கொள்ள தமிழ்ப்பள்ளிகள், கோவில்கள் –தமிழனுக்கு இது  போதும்,இது தான் தேவை என்று நீங்களே எப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?

அதற்கு மேல் பொருளாதாரம் என்று  ஒன்று இருக்கிறது அல்லவா. அது  மட்டும் ஏன் உங்களின் கவனத்திற்கு வரவில்லை? பணிபுரியும் நீங்களும் பெரிய அளவில் வளரவில்லை! அந்த அளவிற்கு உங்களுக்குப் பொருளாதார அறிவு இல்லை. ஏழைத் தமிழனும் வளரவில்லை! நீங்களும் வளரவில்லை.அதனால் தமிழனும் வளரக்கூடாது என்பது  தான் உங்களின் உயரிய நோக்கமோ! அதனால் தான் உங்கள்  அளவிலேயே எங்களையும் வைத்திருக்கிறீர்களோ! முதலாளிகள் வளருவதால் தமிழர்கள் வளருவதாக அர்த்தம் ஆகாதே!

நிச்சயமாக யாராக இருந்தாலும் முதாலாளிகளாவதை நான் வரவேற்கிறேன்.

ஏழைத்தமிழன்என்று அடைமொழியிட்டு அழைப்பதை நான் விரும்பவில்லை! எத்தனை  ஆண்டுகள் தான் நாம் ஏழைகளாகவே இருக்கப் போகிறோம்?

சரித்திரம் இல்லாத – நேற்று தோன்றிய இனம் – இன்று நம்மைப் பார்த்து நகைக்கின்றதே!

நீங்கள் ம.இ.கா.வை  பக்கம் பக்கமாக குறை கூறுகிறீர்கள். அவர்கள் ஏழைத் தமிழனை பொருளாதாரத்தில் படுகுழிக்கு இழுத்துச் சென்று விட்டதாகக்  குறை கூறுகிறீர்கள். நீங்களும் அதைத் தானே  செய்கிறீர்கள். நீங்கள்  எங்களை உயர்த்த வேண்டும் என்று என்ன முயற்சி எடுத்தீர்கள்? தமிழனின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் உந்து சக்தியாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.

எந்த ஒர் உந்து சக்தியும் இல்லை, பொருளாதார அறிவும்  இல்லை. அதனால் தானே தங்கத்தில் முதலீடு, அட்டை வளர்ப்பில் முதலீடு என்று எவன் எவனோ இந்த சமுதாயத்தை ஏமாற்றுகிறான்! வேறு வழி தெரியாத தால் தானே நாமும் ஏமாறுகிறோம். மைக்கா ஹோல்டிங்ஸ் என்னும் பெயரில் நம்மை மக்கிப்போக வைத்தார்களே மொக்கைகள்அப்போதே அல்லவா பத்திரிக்கைத் துறையினர் நம்மை விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அதனை வைத்து அரசியல் அல்லவா நடத்திக் கொண்டிருந்தோம்! இப்போதும் நடத்திக் கொண்டு தானே இருக்கிறோம்.

நீங்கள் அரசியல் அடாவடித்தனங்களுக்கும், அடிவருடித்தங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுப்பதால் தானே எங்களுக்கும் அதே அடாவடித்தனம் அடிவருடித்தனம் என்னும் நிலைமை எங்களுக்குள் வந்து விட்டதே!  அதைத் தானே அனுதினமும் படிக்கிறோம். அதைத்தானே நாங்களும் செய்வோம்! .நேற்று முளைத்த இளம் அரசியல்வாதிகூட என்னாமாய் இந்த சமுதாயத்தை ஏமாற்றுகிறான்! அந்த அளவுக்கு அவனுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தது யார்? நீங்கள் கொடுக்கின்ற அடாவடிச் செய்திகள் தானே. நீங்கள் கொடுக்கும் ஆதரவு தானே.

நமது அரசியல்வாதிகள் நம்மிடம் எதனைக் குறி வைக்கிறார்கள்? பணத்தைத் தானே! ஏழைச் சமுதாயம் என்று சொல்லுகிறோம். ஆனால் இந்த இழிபிறவிகளான அரசியல்வாதிகள் நம்மிடம் பறித்து அவர்களை உயர்த்திக் கொள்ளுகிறார்களே!

அப்படியானால் உங்களது கடமை என்ன? நல்ல பொருளாதார அறிவை ஊட்டி வாசகர்களை உயர்த்தும் கடமை உங்களுக்கு அதிகமாகவே இருகின்றது அல்லவா!

ஆனால் நீங்கள் செய்வது என்ன? கருணாநிதி – ஜெயலலிதா – சாமிவேலு – வேள்பாரி என்று சமுதாயத்திற்குத் தேவையற்றவர்களின் செய்திகள் தானே!

எனினும் காலம் கடந்து விடவில்லை.  இனி மேலும் தமிழர்களை இளிச்சவாயர்களாக நோக்கும் போக்கு எடுபடக்கூடாது.  நீங்கள் மாற வேண்டும். உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வெறும் அரசியலை  வைத்தே  மக்களைக் குழப்புவதும், மக்களை ஏமாற்றுவதும் நிறுத்தப்பட  வேண்டும். அரசியல்வாதிகளின் கொடுக்கல் வாங்களுக்கேற்ப அரசியல் விளையாட்டு விளையாடுவதை இனி ஏற்க முடியாது. இதில் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் இலாபமே தவிர காசு போட்டு வாங்கிப் படிக்கிறானே வாசகன் அவனுக்கு  எந்த இலாபமும் இல்லை.

ஒரு முப்பது காசு பெறாத பத்திரிக்கையை ஒரு வெள்ளி முப்பது காசு போட்டு வாங்கிப்படிக்க எங்களுக்கு என்ன தலை எழுத்தா! உங்களால் தமிழும் வாழவில்லை. தமிழனும் வளரவில்லை. ஒரு முப்பது காசு விலையில் விற்கும் ஆங்கில நாளிதழில் கூட தொழில் சார்ந்த செய்திகளைப் போடுகிறார்களே! ஏன், உங்களால் முடியாது?

பொருளாதார மாற்றத்திற்குத் தமிழன் இன்னும் பொருத்தமற்றவன் என்று நீங்கள் நினைத்தால் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பொருந்தாத உங்களை ஓரங்கட்ட வேண்டி வரும்!ஓரங்கட்ட வேண்டும். தவறில்லையே?

இப்போதைய  இளைய  சமுதாயம் முன்னேறத் துடிக்கிறது. அவர்களை உங்களுடைய ஒழுக்கமற்ற அரசியல் பக்கம் இழுக்காதீர்கள். ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவதில் இந்த  வாசகனுக்கு என்ன பயன்?

ஒவ்வொரு தமிழனும் பொருளாதாரத்தில் உயர வேண்டும். அவர்களுக்குத் துணையாக இருங்கள் என்பதே பத்திரிக்கையாளர்களுக்கு நாங்கள் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள்!

 – கோடிசுவரன்