தமிழ்ப்பள்ளிகளில் ஏன் இந்த நிலை? ………………(கோடிசுவரன்)

srk lauderdale 5தமிழ்ப்பள்ளிகளில் ஒரு தேக்கநிலை இப்போது உருவாகியிருக்கிறது.

கல்வி தேர்ச்சி நிலை சிறப்பாகவே இருக்கின்றது. . மாணவர்களின் தேர்ச்சி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது.  மாணவர்களிடம் நல்ல கட்டொழுங்கு இருக்கின்றது. நமது பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படுகின்றது. மாணவர்களிடம் பண்பாட்டுக் கூறுகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. சமய நெறிகள் போதிக்கப்படுகின்றன.

இதனையே தேசியப்பள்ளிகளில் உள்ள நமது மாணவர்களின் நிலை என்ன? பெருமைப்படுகின்ற அளவுக்கோ, சொல்லிக் கொள்ளுகின்ற அளவுக்கோ ஒன்றுமில்லை!

பெருமைப்படுகின்ற அளவுக்கு ஒன்றும் இல்லை என்று நாம் சொன்னாலும் இப்போதைய இளம் பெற்றோர்களின் அப்படி என்னதான் நினைக்கிறார்கள்?

இந்த இளம் பெற்றோர்கள் நம் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள்:

 1)      தமிழ் படிப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

2)      எனது குழந்தை மூன்று மொழிகள் படிப்பது கடினம்.

3)      மேற்கல்வி என்று போகும் போது தமிழ் தேவைப்படாது.

4)      பள்ளிக்கட்டங்களைப் பார்க்கும் போது பிள்ளைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

5)      அது தோட்டப்புற மொழி என்பதால் அதனை நான் விரும்பவில்லை.

முன்னேறிய மனிதர்கள் – அவர்கள் குடும்பங்களிலிருந்து – பிள்ளைகள் எவரும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் போவதில்லை.

தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்கள் அமைச்சர்களாக ஆகி இருக்கின்றனர். பெருமை தான். ஆனால் அந்த அமைச்சர்கள் யாரும் அந்தப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவில்லையே!   எந்த அமைச்சர் தனது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினார்?

முன்னேறிய யாழ்ப்பாணத் தமிழர்களைப் பாருங்கள். பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழை “கூலிக்காரன் மொழி” என்று முத்திரைக்குத்தி விட்டனர். அத்தோடு அவர்கள் விடவில்லை. அவர்கள் நடத்தி வந்த தமிழ்ப்பள்ளிகளையும்இழுத்து மூடிவிட்டனர். அவர்களின் பிள்ளைகளும் தமிழ் படிப்பதை விரும்புவதில்லை.

நமது தோட்டப்புற நிர்வாகத்தரப்பில் வேலை செய்த எந்தத் தமிழனாவது தனது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியிருப்பனா? அவன் தமிழ்ப்பள்ளிகளை மூட சொல்லவில்லையே அதற்காகப் பெருமைப்படலாம்.

பட்டணப்புறங்களில் இருந்த தரமான கட்டடங்களைக் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளிகளையே  புறக்கணித்தனர் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஆயாக்கொட்டைகளில் வகுப்புக்களைக் கொண்டிருந்த தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளுக்குஆதரவு கொடுப்பது கௌரவக் குறைச்சல் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தானே!

அதனால் தான் தமிழ் “கூலிக்காரன் மொழி” என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

ஆனாலும் தமிழனுக்கு மொழிப்பற்று இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அப்படி ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. ஏதோ சில அரைகுறைகளை வைத்து நமக்கு மொழிப்பற்றே இல்லை என்பது தவறு.

இன்று தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல வகைகளில் எதிராக இருப்பது அதன் கட்டடங்கள் என்பதும்பல காரணங்களில் ஒன்று.

கல்வியில் நல்ல தரம் உண்டு. தேர்ச்சி விகிதம் குறை சொல்லுவதற்கு இல்லை. நமது பண்பாடுகள் காக்கப்படுகின்றன. நாம் தமிழர்கள் என்னும் உணர்வு ஒங்கி நிற்கின்றது.

இவைகள்  அனைத்தும் நமக்குச் சார்பாக இருந்தாலும் பள்ளிக்கூடக் கட்டடங்கள்  என்னவோ நமது பெற்றோர்களை ஒரங்கட்ட வைக்கின்றன!

தோட்டப்புறங்களில் தரமான கட்டடங்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் இருந்தால் – இருந்திருந்தால் –அங்கு வேலை செய்கின்ற அனைத்துத் தரப்பினருமே தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு மரியாதைக் கொடுத்திருப்பார்கள்.

இன்றைய நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. இன்னும் பழைய ஞாபகங்கள் இன்றைய நிலையிலும் இருக்கவே செய்கின்றன.

நல்ல, கவர்ச்சியானப்  பள்ளிக்கட்டடங்கள் மக்களை ஏன்? மாணவர்களையும் ஈர்க்கின்றன என்பது உண்மையே. ஆயக்கொட்டைகளும், பழைய கள்ளுக்கடைகளும், பழைய பங்களாக்களும் படிக்கின்ற பிள்ளைகளைச் சோர்வடையச் செய்கின்றன.

ஓர் உண்மைச் சம்பவம். ஒரு தோட்டப்பாட்டாளியின் பெண் குழந்தை அங்குள்ள தோட்டப்பள்ளியில் படிக்க மறுத்து விட்டாள். அவருடைய மற்றக் குழந்தைகள் அதே பள்ளியில் தான் படிக்கிறார்கள். ஏனோ இந்தக் குழந்தை விரும்பவில்லை. அதனால் அருகே உள்ள பட்டணத்தில் வேறு பள்ளியில் சேர்த்து விட்டார் அவளின் தந்தை.

இப்படி ஓர் சம்பவம் ஏன் நடைப்பெற்றது? இப்படி எத்தனையொ குழந்தைகள் தாங்கள் விரும்பாமலேயே தமிழ்ப்பள்ளிகளில் திணிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது தானே!

பள்ளிச்சூழல், பள்ளிக்கட்டடம் விளையாட்டுத் திடல்என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியம்.

பள்ளிகள் என்பது அறிவுக்கூடங்கள். அவைகள் பார்வைக்குக் கம்பீரமாக இருக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் இருக்கின்ற தமிழ்ப்பள்ளிகள் அனைத்து வசதிகளோடும் அதே சமயத்தில் கண்ணைக் கவர்கின்ற கட்டடங்களோடும் இருந்தால் நமது பெற்றோர்கள், அவர்கள் டாக்டர் ஆனாலும் சரி, வழக்கறிஞர் ஆனாலும் சரி,தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிக்க மாட்டர்கள். தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்கள். அதிலே எந்த ஐயமும் வேண்டாம்.

இன்னும் ஒரு தலையாயக் காரணமும் உண்டு.

இன்றைய தமிழ்ப்பள்ளிகளில் அரசியல்வாதிகளின் ஊடுருவல் அதிகமாகிவிட்டது. தலமை ஆசிரியர் ஒரு பக்கம். மற்ற ஆசிரியர்கள் ஒருபக்கம். பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஒரு பக்கம்.  இவர்களிடையே அடி பிடி சண்டை.. கற்றல் கற்பித்தல் என்பதையெல்லாம் ஒரு  பக்கம் ஒதுக்கிவிட்டு இவர்களுடைய சண்டையே மாணவர்களின் முன்னேற்றத்திற்குப் பாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டது.தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு தவறான தோற்றத்தைக் கொடுத்துவிட்டது.

எதற்கு எடுத்தாலும் தலமைத்துவப் போராட்டம். ஒரு சிறிய சமூகத்தில் நினைத்தவனெல்லாம் தலைவனாக வேண்டும் என்று நினைக்கிறான்.அரசியலில் இடமில்லையா உடனே பள்ளிகளுக்கு ஓடி வருகிறான். இடமில்லையா? கலகத்தை ஏற்படுத்துகிறான்!

இப்படி ஆர்ப்பாட்டம், போராட்டம் ஒரு பக்கம். தலமை ஆசிரியர் மாற்றலா. உடனே ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிடுகிறார் தலமை ஆசிரியர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவருடன் பிரச்சனையா தலமை ஆசிரியர் மாற்றப்பட வேண்டும் என்று போராடுகிறார் சங்கத்தலைவர்!

தமிழ்ப்பள்ளீகளில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது பெற்றோர்களின் நிலை என்ன?

“போங்கடா! போங்க! நீங்களும் உங்க பள்ளிக்கூடமும்! நீங்க திருந்தவே மாட்டிங்க! எப்படியோ அடிச்சிட்டுச் சாகுங்க! எங்கள விட்டுடுங்க!” என்பதுதான் அவர்கள் நிலை!

கடைசியாக, ஒரே வார்த்தை. தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இனமான, மொழி உணர்வு உள்ளவர்களாக, பொதுநல நோக்கம் உள்ளவர்களாக இருந்தால் தமிழ்ப்பள்ளிகள் தலை நிமிர்ந்து நிற்கும்!

– கோடிசுவரன்