ம.இ.கா.வில் ஏன் இந்த அடிதடி?

micம.இ.கா.வைப் பற்றி இந்தியர்கள் என்ன  நினைக்கிறார்கள், ம.இ.கா. இன்னும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமா,  இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா. வின் பக்கம் திரும்பி இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

பொதுவாக ம.இ.கா.வைப் பற்றி இந்தியர்கள் என்ன தான் நினைக்கிறார்கள் என்று கேட்டால் ம.இ.கா. தேவை இல்லாத ஒரு கட்சி என்பதே பொதுவான அபிப்பிராயம். இந்தக் கருத்து பெரும்பாலும் படித்தவர்களிடையே காணப்படுகிறது. ம.இ.கா.வின் மூலம் நாம் இழந்தது தான் அதிகம் என்பது தான் இவர்களது வாதம்.

இன்று இந்தியர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் ம.இ.கா. தலைவர்களின் அசட்டையினாலும், அலட்சியத்தினாலும் செயற்கையாக ஏற்படுத்தப் பட்டவை என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள் பதவியில் இருந்த போது அவர் யாராலும் அசைக்க முடியாத ஒரு தலைவராக இருந்தார். அவர் கேட்டால் கிடைக்கும். மறுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனால் அவர் தனது பதவியைக் குறிவைத்தே தனது முப்பது ஆண்டு கால அரசியல் பயணத்தை மேற்கொண்டார் என்பதே அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அவர் உதவவில்லை. இன்று உள்ள பிறப்புப் பத்திரங்கள், அடையாளக்கார்டு பிரச்சனைகள் அனைத்தும் அவர் காலத்தில் தலை தூக்கிய போது அவைகளைத் தீர்ப்பதற்கான எந்த தீவிரத்தையும் அவர் காட்டவில்லை. பல்கலைக்கழகங்களில் இடங்கள் மறுக்கப்பட்ட போது அதைப்பூசி மெழுகினாரே தவிற ஆக்ககரமாக எதனையும் செய்யவில்லை. தொழிற்திறன் பயிற்சி பெற எந்த தொழிற்நுட்ப கல்லூரிகளும் கதவைத் திறக்காத போது அந்தக் கல்லுரிகளின் கதவை உடைத்தெறிந்திருக்க வேண்டும். அந்த ஆற்றல் அவரிடமிருந்தது. ஆனால் அதனையும் செய்யவில்லை. அரசாங்க அங்கீகாரமில்லாத ஒரு கல்லூரியைத் திறந்தது தான் அவரது சாதனை.

வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஊகித்து அறிந்து அதற்கு ஏற்றாற் போல் செயல் ஆற்றுவது தான் தலைமைத்துவப் பண்பு.. அந்தப் பண்பு அவரிடமில்லை. இன்று இந்தியர்கள் – குறிப்பாகத் தமிழர்களில் பலர் – மிகக் கேவலமான ஒரு நிலையை அடைந்ததற்கு சாமிவேலுவே காரணம் என்றாலும் அது ம.இ.கா.வையே பாதிக்கிறது.

இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வின்  பக்கம்  திரும்புகிறது என்று எதை வைத்து சொல்லுவது? சென்ற தேர்தலில் இந்தியர்கள் பாரிசானுக்கு வாக்களித்தார்கள் என்பது உண்மையா? ம.இ.கா. தலைவரே, தான் பூர்வீகக்குடிகளின் ஆதரவில் வெற்றிப் பெற்றதாக சொன்னாரே!

ஆதரவு கூடியிருக்கிறது என்று ஏற்றுக் கொண்டாலும் அப்படி என்ன தீடீர் ஆதரவு? வழக்கம் போல் ம.இ.கா. கைக்கூலிகள் அப்பாவி இந்தியர்கள் மேல் தங்களது கை வரிசையைக் காட்டினார்கள் என்பது தான் உண்மை! பயமுறுத்தல்கள் பல இடங்களில் அரங்கேறின. பள்ளி ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கைகள்!

இப்படி எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ம.இ.கா. விற்கு ஆதரவு என்பது மன நிறைவாக இல்லை. இந்த நிலையில் ம.இ.கா. வின் உள்ள அங்கத்தினர்கள் என்ன நினைக்கிறார்கள்? இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அங்கத்தினர்கள் பலருக்குத் தாங்கள் அங்கத்தினர்கள் என்று கூட அவர்களுக்கே தெரியாது!  கிளைகளின் ஆண்டுச் சந்தா கட்டுபவர்கள் கிளைத் தலைவர்கள் அல்லது மாநிலத்தலைவர்கள் அல்லது சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள்! ஒரு முறை ஒருவர் உறுப்பினர் ஆகிவிட்டால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது!

இன்று ம.இ.கா.வில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் கிளைத்தலைவர்களும், செயலாளர்களும் தான். இவர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது. “இந்தியர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன! கட்சி இருந்தால் என்ன! போனால் என்ன! எனக்கென்ன கிடைக்கும்?” என்னும் வெறித்தனத்தோடு இயங்குபவர்கள் தான் இந்தத் தலைவர்களும், செயலாளர்களும்!

இன்று ம.இ.கா. வில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இவர்களே காரணம்.

ம.இ.கா. வில் ஒரு கிளையின் தலவராக/செயளாலராக இருந்தால் டத்தோ, டான்ஸ்ரீ போன்ற விருதுகள் கிடைக்கும். அரசாங்கக் குத்தைகைகள் கிடைக்கும். செனட்டர் பதவி கிடைக்கும். சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும். அப்படியே தோற்று விட்டாலும் செனட்டர் பதவி கிடைக்கும். அதன் மூலம் அமைச்சர் பதவி கிடைக்கும். அப்படியே தோற்றுவிட்டாலும் மந்திரிபெசார் அலுவலுகத்தில் இந்தியர்களின் பிரதிநிதி என்று பெயர் போடலாம். அல்லது ஏதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உதவியாளாரப் போகலாம்.  இந்தியர்களுக்கென ஏதேனும் நிதி ஒதுக்கீடுகள் என்று வரும்போது அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 2000  ஏக்கர் நிலம் ஒதுக்கினால் அந்த நிலம் அவர்கள் கட்டுப்பாட்டில்.அந்த 2000 ஏக்கர் நிலத்தைத் துண்டு போட்டு விற்றால் அடுத்த மலேசிய பணக்காரர்களில் ஒருவர். தமிழ்ப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் உடனே குத்தகையாளராகப் பதவி உயர்வு பெறலாம்!

அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் வருகிறதா? உடனே தங்கள் பிள்ளைகள், தங்கள் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கே அந்த வேலை வாய்ப்புக்கள். மற்றவர்களுக்குத் தெரியாமலே ரகசியமாக அனைத்தும் நடைபெறும். பல்கலைக்கழகங்களின் இடமா? எங்கள்  வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் முதலிடம். அப்புறம் நாங்கள் ஏன்  வாய்த் திறக்கவேண்டும்?

இப்படி ஏகப்பட்ட வாய்ப்புக்கள்! ம.இ.கா. தங்க முட்டை இடும் வாத்து! அது ஒரு தங்கச்சுரங்கம்! அதை விட்டுப் போவதற்கு யாருக்கு மனசு வரும்?

ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் வாங்க வேண்டும். அங்கயே பிள்ளைகள் தங்கிப் படிக்க சொந்த வீடு வாங்க வேண்டும். அப்படியே அவன் படிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலியா “போய் வந்தவன்” என்னும் பெயராவது இருக்கும்.

இதற்கெல்லாம் எந்த இளிச்சவாயன் பணம் கொடுக்கப்போகிறான்? பொது மக்களிடமிருந்து இனி பணம் வசூல் பண்ண வழியில்லை. ம.இ.கா. ஏன் பாரிசானில் இருக்கவேண்டும் என்று இப்போது புரிகிறதா? படித்தவன், குண்டர் கும்பல் தலைவன் – இவர்களுக்கெல்லாம் ஏன் ம.இ.கா. தேவைப்படுகிறது என்று விளங்குகிறதா! ம.இ.கா  ஏன் நமக்குத் தேவை என்று புரிகிறதா?

இப்போது ம.இ.கா.வில் ஏன் இந்த அடிதடி என்று புரிந்து கொண்டிருப்பீர்களே! ஒருவன் பிழைப்பதற்குப் பத்துப் பேர் செத்தால் பாதகமில்லை என்பது தான் ம.இ.கா.வின் புதிய கொள்கை! சாமிவேலு அவர்களால் புதிய பொருளாதார கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை இப்போதும் பீடுநடை போடுகிறது என்பது தான் உண்மை!

ஏதோ இந்தக் குட்டித்தலைவர்களும், மட்டித்தலைவர்களும் வாழவாவது ம.இ.கா. தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் தலைவர்களின் ஆசை!

(கோடிசுவரன்)