தனியார்க் கல்லூரிகளா…….தமிழர்களுக்குக் கண்ணிகளா….?

KOLEJ SWASTAசொல்லுவதற்கு வேதனைதான். ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நமது பிள்ளைகளின் கல்விக்காக நம்மைப் போன்று செலவு செய்வது நாட்டில் வேறு யாரும் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பிள்ளைகளின் கல்விக்காக வீடுகளை விற்பது, நிலங்களை விற்பது, நமது பணசேமிப்புக்களை காலியாக்குவது, ஆயுள் சேமிப்பான பண்டு காசை செலவழிப்பது – இப்படி நமது சொத்துக்களையும் நமது குடும்ப வருமானங்களையும் அனைத்தையும் தொலைத்து நமது பிள்ளைகளின் வளமான வருங்காலத்துக்காகத் தியாகங்கள் செய்வது நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

ஆனால் நமது பிள்ளைகளின் வளமான வருங்காலம் என்று நினைத்து செலவழித்தப் பணம் கடைசியில் திருட்டுத்தனம் பன்னும் தனியார் கல்லூரிகளிடம் சென்று சேருவதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. கல்வியாளர்கள் என்னும் போர்வையில் இன உணர்வே இல்லாத, மொழி உணர்வே இல்லாத இந்தச் சதிகாரக் கூட்டத்திடம் நமது இனம் மிகவும் எளிதாக மாட்டிக்கொள்ளுகிறதே என்று நினைக்கும் போது இரத்தக் கண்ணீர்  வடிக்கத் தோன்றுகிறது.

ஒரு ஏழை சமுதாயம். உழைத்துச் சிறுக சிறுகச் சேர்த்து வைத்தப் பணம். இப்படிக் கல்வியாளர் என்னும் போர்வையில் கருங்காலிகள் நாசமாக்குகிறார்களே அப்படி என்ன தான் இந்த சமுதாயம் இவர்களுக்குக் கேடு விளைவித்தது?

கல்வியாளர்களை நான் குறைச் சொல்லக் கூடாது என்று நினைத்தாலும் அரசியல்வாதிகளின் பின்னால் அவர்கள் ஒளிந்து கொண்டு செயல்படுகிறார்களே அதனை நினைக்கும் போது நாம் எப்படி இவர்களைக் கல்வியாளர்களாக ஏற்றுக் கொள்ளுவது?

அரசியல்வாதிகளைப் பற்றிய நமது அபிப்பிராயம் வேறுபட்டவை.  ஆனால் பெரும்பாலும் அவர்கள் கொள்ளையர்கள் என்பதை எந்தக் கருத்து வேறுபாடின்றி நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்.

இந்தத்  தனியார் கலலூரிகளின் பின்ணணியில் இருந்து செயல்படுபவர்கள் நமக்குத் தெரிந்த,  நமக்கு வேண்டிய அரசியல்வாதிகள்தான். மீண்டும் மீண்டும் ம.இ.கா. அரசியல்வாதிகளையே நாம் குறை சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம் என்பதை நினைக்கும் போது மனம் கனக்கிறது.

இந்தியர்கள் நடத்துகின்ற பெரும்பாலான கல்லுரிகளின் பின்னால் இந்த அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது. இதன் மூலம் இவர்களுக்குப் பணம் கொட்டுகிறது.

தனியார்கள் நடுத்துகின்ற இந்தக் கல்லுரிகளுக்கு அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. அவர்களுக்கு உரிமம் தேவை. தகுதியற்ற விரிவுரையாளர்கள் தேவை. தில்லைமுல்லுகளைக் கண்டு கொள்ளாத கல்வி அமைச்சு தேவை. அரசாங்கத்திலிருந்து கல்விக்கடன் பெறுவதற்கு அந்த அமைச்சின் அதிகாரிகள் தேவை. இப்படி அரைகுறை கல்லூரிகள் நடத்தி ஏழை இந்திய சமுதாயத்தை ஏமாற்றி இலட்சாதிபதிகள் ஆவதற்கு அரசியல் தலைவர்கள் தேவை.

அரசியல்வாதிகளின் முக்கிய பணிகளில் ஒன்று இந்தியர் மாணவர்கள் அரசாங்கக் கல்லூரிகளில், பல்கலைகழகங்களில் அதிகமாக சேராமலிருக்க, கட்டுப்படுத்த,  எவ்வளவு குறைவான மாணவர்களை அரசாங்கக் கல்லூரிகளுக்குக் கொண்டுசெல்ல முடியுமோ,  அதனைக் கண்ணும்  கருத்துமாகப் பார்த்துக் கொள்ளுவது.

அரசாங்கக் கல்லுரிகளுக்குக் குறைவான இந்திய மாணவர்கள் சென்றால் தான் இந்தியார்களால் நடத்தப்படும் தனியார் கல்லூரிகள் பிழைப்பு நடத்த முடியும். ஏழைகளின் வயிற்றில் அடிக்க எப்படியெல்லாம் இந்த அயோக்கியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும்  மூளை வேலை செய்கிறது, பார்த்தீர்களா?

ஒன்றைக் கவனீத்தீர்களா? நாட்டில்  சீனர்களை விட இந்தியர்களே அதிகமான தனியார்க் கல்லூரிகளை நடுத்துகின்றனர்! அந்த அளவுக்கு இந்தியர்களின் ஏழ்மையைப் பயன் படுத்தி மேலும் மேலும் இந்தியர்களை கடன்காரர்களாக்குகின்றனர்; வறுமைக்குத் தள்ளகின்றனர். அனைத்தும் அரசியல்வாதிகளின் துணையோடு சீரும் சிறப்புமாக அவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றனர்.

ஏழைத் தமிழன் நடுரோட்டில் நிற்கிறான். படிப்பதற்காகக் கடன் சுமை. கல்விக்கடன் என்று சொல்லி வாழ்நாள் முழுவதும் கடன் சுமை. அரசாங்கம் கல்விக்கடன் கொடுத்தும் கற்றக் கல்விக்கு அரசாங்க அங்ஙீகாரம் இல்லை. அரசாங்கம் இவர்களுக்கு வேலைக் கொடுப்பதில்லை. அங்கீகாரம் இல்லாத ஒரு கல்விக்கு அரசாங்கம் கடன் கொடுத்து நம்மை ஏமாற்றுகிறது. அங்கீகாரம் இல்லாத கல்வியால் வெளி நாடுகளிலும் வேலை செய்ய முடியாது.

இந்த அங்கீகாரம் இல்லாத ஒரு கல்வியைக் கற்க எவ்வளவு போட்டி! என்னமாய் விளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் தமிழ்ப் பத்திரிக்கைக்களில் போடுகின்ற விளம்பரங்கள் கண்களைக் கூச வைக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி என்று எந்த ஊடகங்களையும் விட்டு வைப்பதில்லை. அனைத்தும் தமிழ் மக்களையே குறி வைக்கின்றன; நம்மைக் கதற வைக்கின்றன.

இங்கும் ஒரு வேடிக்கை. அரசாங்கம் வேலைக் கொடுப்பதில்லை.  தனியார் துறையிலும் சீனர்கள் கையை விரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் உங்களுக்கு வேலை  வாங்கிக் கொடுத்து விடுவார்களாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மை தான்.

என்றாலும் நமது இனம்,  நமது மக்கள், நமது இரத்தம், நமது சொந்தபந்தங்கள் என்னும் உணர்வு ஒவ்வொரு படித்தவனுக்கும் இருக்க வேண்டும்.  காரணம் படித்தவன் தான் அதிகம் தவறு செய்கிறான். அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதில் அப்படி என்ன இன்பம்?

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவன் சாபம் இட்டானானால் அது ஏழு ஏழு ஜென்மத்துக்கும் உங்கள் குடும்பங்களைப் பாதிக்கும். அது செழித்து வளராது.

கல்லூரிகள் அறிவை வளர்க்கும் கூடங்களாகவே இருக்கட்டும். கண்ணிகளாக இருக்க வேண்டாம்.

(கோடிசுவரன்)