எந்த எண்ணிக்கை கூடவேண்டும்? தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையா? அல்லது தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கையா?

tamil_schoolஎன் அருமை சகோதரர்களே, எந்த எண்ணிக்கை கூடவேண்டும்? தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையா? அல்லது தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கையா? இரண்டுமே கூடினால் இவ்வுலகில் உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் திளைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் தமிழ் பள்ளிகள் கூடி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் மூடப்டக்கூடிய சாத்தியம் வந்தால் நம் நெஞ்சம் நிச்சயம் வேதனையில் வேகும்.

தமிழ் பள்ளிகளிலே மாணவர்களை சேர்க்க தற்போது ரத்னவள்ளி அம்மையார் மற்றும் பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் சங்க தலவைர் டத்தோ முனியாண்டி மற்றும் சிலர் செய்து கொண்டிருக்கும் மகத்தான காரியத்திற்கு சரியான ஆதரவு நமது தலைவர்களிடமிருந்தும் சமுதாய இயக்கங்களிடமிருந்தும் போதுமான நிறைவான ஆதரவு கிடைக்கவில்லை என்ற செய்தியும் நமது நெஞ்சத்தை துளைக்கிறது. அப்படியே மாணவர்கள் எண்ணிக்கை கூடினாலும் பள்ளியிலே கூடுதல் மாணவர்களை தாங்கிக்கொள்ளும் வசதியும் , போதுமான ஆசிரியர்களும் உண்டா என்பதும் இன்னொரு கேள்வி!

இங்கே பல வாசகர்கள் கேட்கும் நிதர்சமான உண்மையான ஒரு கேள்வி…. ஒரு வசதியும் இல்லாத, ஒரு ஈர்ப்பும் இல்லாத , அன்னுடைய இருப்பிடத்திலிருந்தும் , வேலை செய்யும் இடத்திலிருந்தும் மிக தொலைவில் அமைந்துள்ள ஒரு மூலையில் இருக்கிற , மாணர்வர்கள் மிக மிக குறைவாக உள்ள இந்த தமிழ் பள்ளிக்கு , மாணவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த பள்ளி மூடப் பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்துக்காக எனது பிள்ளையை அங்கு அனுப்ப வேண்டுமா …? என்ற கேள்வி சாதரண பெற்றோர்கள் மத்தியில் எழுவது நியாயமான ஒன்றே . தனது பிள்ளை ஒரு ‘தரமான – நல்ல பள்ளியிலே’ படிக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையிலும் குற்றமாகாது. ஆனாலும் அந்த நல்ல – தரமான பள்ளி ……. தமிழ் பள்ளியாக இருக்க வேண்டும். அந்த தரமான தமிழ் பள்ளிகளை உருவாகத்தான் , உருவாக்கத்தான் நமது ஆக்கச் சக்தியை ஒன்று திறட்டவேண்டும். இந்தகைய பள்ளிகளில் மாணவர்கள் தானாகவே வந்து சேர்வார்கள். பெற்றோர்கள் நம்பிக்கை கூடும், தரமான மான தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கையால் தரமான தமிழ் பள்ளி மாணவர்கள் கூடுவார்கள். வீடு வீடாக சென்று தமிழ் பள்ளியிலே மாணவர்கள் சேருங்கள் என்ற போராட்டமே தேவையில்லை !!

காலத்தின் கட்டாயமாக, ப்ரோலாரத்தை நாடி வாழ்கையை மேம்படுத்திக்கொள்ள தோட்டத்திலிருந்து நகர் புறங்களுக்கு மாறியதன் வழி தோட்டப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்து போயினர் என்பது தெளிவான ஒரு விஷயம். பத்து பதினைந்து மாணவர்களோடு இன்று சில தமிழ் பள்ளிகள் ஊசாலாடிகொண்டிருப்பதும் அனைவருக்கும் புரிந்த ஒரு விஷயம். இந்த பள்ளிகளை காப்பாற்ற ஒரே வழி அங்கு மாணவர்கள் கூடவேண்டும்…எப்படி இது சாத்தியமாகும்? நகர் புறத்திலுள்ள , சுற்று வட்டாரத்தில் உள்ள பெற்றோர்களிடம் தங்களது பிள்ளைகளை மாற்றி தோட்டபுறத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புங்கள் , இல்லேயேல் அங்குள்ள தமிழ் பள்ளிகள் மூடப்பட்டுவிடும் என்று அறைகூவல் விடுத்து, தமிழ் உணர்வை கிளறிவிட்டு பெற்றோர் மனதை மாற்ற இயலுமா? இது சாத்தியமாகுமா? பள்ளியை காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற வேட்கையில், தூரமாக இருந்தாலும், வசதிகள் மிக குறைவாக இருந்தாலும் தோட்டப்புறத்தில் உள்ள அந்த பள்ளிக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை மாற்றுவதற்கு நிதர்சன வாய்புகள் உண்டா? இந்த மாதிரியான , உண்மை நிலவரத்தின் அடிபடையில் சிந்திக்கும் பொழுது, முதலில்….. நமது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்ற முதலில் மாறாத நிலைத்தன்மை வேண்டும்! அடுத்து தரமான தமிழ் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அந்த தரமான தமிழ் பள்ளிகள் உருவாக நாமே தடைகல்லாக இருக்ககூடாது. தரமான தமிழ் பள்ளிகளை உருவாகினால் மாணர்கள் எண்ணிக்கை தானாகவே பன்மடங்காகும்…இதை எந்த கொம்பனாலும் தடுக்க இயலாது!

மீண்டும் சொல்கிறேன்.. நமது இலக்கு தமிழ் பள்ளியிலே மாணவர்கள் அதிகரிக்க வேண்டும்…இதுவே நமது தாய்மொழியை காக்க எடுக்கும் அறிவார்ந்த நடவடிக்கையாகும். ஊசலாடிகொண்டிருக்கும் பள்ளிகளை காக்கவேண்டும் என்பது ஒரு போராட்டமாக இருந்தாலும் அந்த பள்ளிகளிலே மாணவர்கள் சேருவதற்கு வசதிகள் , அந்த பள்ளியை தொடந்து வாழ வைக்க போதுமான பெற்றோர்கள் அந்த வட்டாரத்தில் இருகிறார்களா..? தொடர்ந்து அங்கிருப்பார்களா ? என்ற சாத்தியக் கூருகளையும் ஆராயவேண்டும். அப்படி அந்த சாத்தியகூறுகள் இல்லாத பட்சத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பள்ளிகளை அருகிலுள்ள மற்ற தமிழ் பள்ளிகளோடு இணைப்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். அப்படி நேருகையில் எண்ணிக்கையில் தமிழ் பள்ளிகள் குறைவதை தடுக்க முடியாது என்றாலும் தரமான தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் .

மனோவியல் ரீதியில் பள்ளிகளில் ஈர்ப்புசக்தி அங்குள்ள வசதிகளையும் அங்குள்ள தரமான நடவடிக்கையை பொறுத்தே அமைகிறது . மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தலை தமிழ் பள்ளி ஆசியர்களைவிட மற்றவர்கள் சிறப்பாக தர இயலாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன் நான். ஆனால் அந்த தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்ல தரமான கற்பித்தல் வசதிகள் இல்லையென்றால் அவர்களும் அங்கெ தோற்றுப்போவார்கள். சிறப்பான கற்றலுக்கு உகந்த வசதிகளை தரக்கூடிய தமிழ் பள்ளிகள் அமைந்தால் நிச்சயம் மேலும் தரமான மாணவர்களை அவர்கள் உருவாக்க வாய்ப்புண்டு. உண்மையான நிலவரம் என்னவெனில் தமிழ் பள்ளியிலே மாணர்கள் எண்ணிக்கை குறைகிறது என்பதுதான், சில தமிழ் பள்ளிகள் மூடப்படும் பட்சத்தில் மாணவர்களை வேறு மொழி பள்ளிக்கு போவதுதான் நமது மொழிக்கு ஆபத்து… ஆனால் அவர்கள் வேறு தமிழ் பள்ளிக்கு போவது மொழிக்கு நன்மை. ஆகவே இங்கே நமது போராட்டம் என்னவெனில்…தமிழ் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கூடவேண்டும்..அந்த உன்னத போராட்டத்தில் பள்ளிகளை இணைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதற்கு நாம் தடைகல்லாக இருக்ககூடாது.

-அண்ணா