வீழ்ந்தது போதும்….! வாழ்ந்து காட்டுவோம்…!

28TH_MALAYSIA-INDIA_276363fவீழ்ந்தது போதும்! நாள்களை வீணடித்தது போதும்! புலம்பல்கள் போதும்! போட்டிப் பொறாமைகள் போதும்! முட்டிமுட்டி மோதிக்கொண்டது போதும்! முணு முணுத்தல்கள் போதும்!

முக்கல், முனகல் அனைத்தையும் மூட்டைக்கட்டி மூணாற்றில் தூக்கி எறியுங்கள்!

எத்தனை காலம் தான் இந்தப் புலம்பல்களைக் கேட்பது?

நாம் இன்னும் பாலும் தேனும் ஓடும் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இல்லாவிட்டாலும் அப்படித்தான் என்று நினைத்துச் செயல் படுங்கள்.

சீனர்களுக்கு இந்த நாடு இன்னும் பாலும் தேனும் ஓடும் நாடாகத் தானே இருக்கிறது! அதில் எந்த மாற்றமும் அவர்களுக்குத் தெரியவில்லையே! அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகத் தானே இருக்கிறது? நாம் பொன்னைப் பார்த்தாலும் மண்ணைப் பார்ப்பது போலத் தானே பார்க்கிறோம்!

எதைப் பார்த்தாலும் ஒரு தவறானக் கண்ணோட்டம். எதைப் பார்த்தாலும் ஒர் ஐயம். ஓர் ஐயப்பாடு.

ஜெயிக்க வேண்டும் என்னும் அந்த வெறி. வெற்றி பெற வேண்டும் என்னும் அந்த வேகம் எப்போது தான் நமக்கு வரப்போகிறது? அது வர வேண்டும். துள்ளி எழ வேண்டும்.

பொருளாதாரம் இல்லை என்றால் பொதி சுமக்கும் மாடாகத்தான் நாம் கருதப்படுவோம்! பொன்னைச் சுமக்க வேண்டிய காலத்தில் பொதியையா நாம் சுமப்பது? கோடிக் கோடியாக நோட்டுக்களை எண்ண வேண்டிய காலத்தில் குப்பைகளையா கிளறிக் கொண்டிருப்பது?

நேற்று வந்த பாக்கிஸ்தானி பங்களாவில் வாழ்ந்து கொண்டு பஜேராவில் போகிறான். ஒவ்வொரு தாமானிலும் அவன் கடைகள் வந்துவிட்டன. பலசரக்கு வியாபாரம் செய்கிறான். கார்ப்பெட், பர்னிச்சர் கடைகளை வைத்து வியாபாரம் செய்கிறான். எலக்ற்றிக் கடைகள், டி.வி. விற்பனை, பஞ்சாபி உடைகள், சேலைகள் என்று எதனையும் விட்டு வைக்கவில்லை. ஏன்? ஐஸ் கிரிம் வியாபாரத்தைக் கூட அவன் விடுவதாக இல்லை!

நேற்று வந்த இந்தோனேசிய/தாய்லாந்து வம்சாவழியினர் உணவகத்துறையில் கொடிக்கட்டிப் பறக்கின்றனர்.

தமிழ் நாட்டிலிரிந்து வந்த தமிழனும் விழித்துக் கொண்டான். பல உணவகங்கள் அவர்கள் கையில். இன்று நமது வீடுகளில் பழுது பார்க்கும் குத்தகைகள் அனைத்தும் அவர்கள் கையில்.

வந்தவர்களை எல்லாம் வாழ வைக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டு “வாழாவெட்டி” என்னும் பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! வளமாக வாழ்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து வயிறு எறிந்து கொண்டிருக்கிறோம். நாமும் வாழவில்லை. மற்றவனும் வாழக்கூடாது என்று எண்ணுகிறோம்! என்ன வயிற்றெரிச்சல் இது?

ஊர், உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டது போதும். ஊர் உலகம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. நமது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவோம். நமது குழந்தைகளைப்பற்றிக் கவலைப்படுவோம். நமது வாழ்க்கை! அதை மற்றவர்களின் வசம் ஒப்படைக்க வேண்டாம்! முதலில் நமது நலம். நமது சுகம். அது சுயநலமாக இருந்து விட்டுப் போகட்டுமே! நாம் நலிவடைந்து விட்டால் எந்தப் பக்கத்து வீடும் வந்து நலம் விசாரிக்காதே! பக்கத்து வீட்டுக்காரனா வாடகைக் கொடுப்பான்!

பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது தான் உண்மை. அதனை அலட்சியப் படுத்தாதீர்கள்.

எல்லாக் காலங்களிலும் யாருக்கோ வேலை செய்து கொண்டு இப்படி வாழ்க்கையை ‘ஓட்டிக்கொண்டே’ போவது எப்போது தான் மாறுவது?

வாய்ப்பா இல்லை? வசதியா இல்லை? வியாபாரத்துறை பரந்து விரிந்து கிடைக்கிறது. சிறிய முதலீடு, பெரிய முதலீடு என்று எதனையும் தேர்ந்தெடுக்கலாம்.

பணத்திற்கு எங்கே போவது என்று எத்தனை காலத்திற்குச் சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறீர்கள்? நீங்கள் இரண்டு, மூன்று ஆண்டுகள் வேலை செய்தாலே கொஞ்சம் பணம் சேர்ந்திடும். அதனை வைத்து உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள். நீங்கள் வளர்ந்த பிறகு தொழில் விரிவாக்கத்திற்காக வங்கியை அணுகலாம்.

ஒரு வானொலி பேட்டியைக் கேட்க நேர்ந்தது. அதில் பேசிய நண்பர் ஒருவர் தான் தொழில் செய்ய  நூறு வெள்ளி கூட தன் கையில் இல்லை, நூறு வெள்ளி கடன் கிடைக்குமா என்று கேட்டார். இவர்கள் ஓசியில் வாழ்க்கை நடத்த நினைப்பவர்கள். தன் பணத்தை வெளியாக்காமல் மற்றவர்கள் பணத்தில் தொழில் செய்ய நினப்பவர்கள். இவர்கள் எந்தக் காலத்திலும் முன்னேற்றத்தைக் காண முடியாது.

முதன் முதலில் தொழில் தொடங்குபவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைத் தான் வெளியாக்க வேண்டும். ஆரம்பம் சிறிதாக இருந்தாலும் அது நமது பணமாக இருக்கட்டும். அது அற்பமான தொகையாக இருந்தாலும் அது நமது பணம்; அது நாம் சம்பாதித்தது.

கடனைக் கொடுத்து தொழில் செய்யுங்கள் என்று அரசாங்கம் பூமிபுத்ராக்களை ஊக்குவித்தது. அதன் மூலம் எத்தனை பூமிபுத்ராக்களால் தொழில் மூலம் பணம் சம்பாதிக்க முடிந்தது? அனைவரும் தோல்விகளைத் தானே சந்தித்தார்கள்.  மாஸ் விமான நிறுவனத்தை  இது நாள் வரை அவர்களால் இலாபத்தோடு நடத்த முடிந்ததா? முடியவில்லையே! அதன்ஆரம்ப காலத்தில் தமிழர் ஒருவர் தலைவராக இருந்த போது அது இலாபாமாகத் தானே நடைப்பெற்றது. பணம் இருந்தால் மட்டும் தொழில் செய்து விட முடியாது. தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்னும் ஆர்வம்! ஆர்வம்! ஆர்வம்! வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்னும் வெறி! வெறி! வெறி! வேண்டும்.

நமக்கு அந்த ஆர்வம் இயற்கையாகவே உள்ளது. நமது இரத்தத்தில் வணிக இரத்தம் ஓடுகிறது! அதில் என்ன சந்தேகம்? ஒரு காலக்கட்டத்தில் வெள்ளைக்காரன் தோட்டம் என்றோம். அதே காலக்கட்டத்தில் அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழர்கள் தானே அதிகமானத் தோட்டங்களை வைத்திருந்தார்கள். அதே தமிழர்கள் தானே ஒவ்வொரு நகரிலும் வங்கிகளை (அப்போது அது வட்டிக்கடை என்று அழைக்கப்பட்டது) அமைத்து நாட்டை வளப்படுத்தினார்கள். அந்தச் செட்டிநாட்டவரிடம் கடன் வாங்கித் தானே தங்களை சீனர்கள். வளப்படுத்திக் கொண்டார்கள். ஏன்? தமிழர்களும் தங்களின் தொழில் வளர்ச்சிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்களே!

அப்போது வர்த்தகத்தில் நாம் தாழ்ந்துவிட வில்லையே! உணவுத்துறை, புத்தகக்கடைகள், அச்சகத்துறை, முடித்திருத்தகம், கேக் செய்தல், கரிபாப், கச்சாங் வியாபாரம் மளிகைக்கடைகள், துணி வியாபாரம், ஏற்றுமது-இறக்குமதி, தங்கநகைகள், பேருந்து-லாரி போக்குவரத்துகள் இவைகள் எல்லாம் நம் கையில் இருந்தவைகள் தானே! இப்போதும் இருக்கின்றனவே. ஆனால் சிறிய அளவில். நமது ஒரே குறை. அடுத்த தலைமுறைக்கு நாம் இந்தத் தொழிலை முறையாக எடுத்துச் செல்லவில்லை. நமது முன்னோடிகள் தங்கள் பிள்ளைகள் “எங்களைப் போல கஷ்டப்படக் கூடாது” என்னும் நல்ல எண்ணம் தான் சீனர்களுக்குச் சாதகமாகப் போய்விட்டது.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்று நாடெங்கிலும் குஜாரத்திகள் கார்ப்பெட், துணிமணிகள், மேசைகள், மெத்தைகள் என்று வியாபாரம் செய்கிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்த வியாபாரம் எப்படி கைக்கு வந்தது? பால் வியாபாரம் செய்த பஞ்சாபிகள் இன்று வியாபாரத் துறைகளில் கால்பதித்து விட்டார்களே அவர்களால் எப்படி முடிந்தது? நமது தமிழ் முஸ்லிம்கள் மீ வியாபாரம் செய்தாவது பிழைத்துக் கொள்ளுவார்களே தவிர அடிமை வேலை அவர்களுக்கு ஆகாதே!  செட்டியார்கள் வியாபாரம் என்பதைத் தவிர வேறு எதனையும் செய்வதில்லையே! அவர்களின் வாரிசுகளும் அவர்களைத்தானே பின்பற்றுகிறார்கள். நம்மால் மட்டும் ஏன் வாரிசுகளை உருவாக்க முடியவில்லை?

வியாபாரம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். பணத்தைப் பெரும் அளவில் சம்பாதித்துப் பெருமையாக வாழ்வது ஒவ்வொரு தமிழனின் கடமை. நமது பெருமை மீட்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி வியாபாரம் மட்டுமே! உலக அளவில் யூதனை யாராலும் அசைக்க முடிகிறதா? அசைக்க முடியாது! பொருளாதாரம் அவனது பலம். தமிழன் ஒவ்வொருவனும் ஒரு யூதனாக மாற வேண்டும்.

இன்றைய தலைமுறையினரான  நாம் நமது பிள்ளைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். தமிழன் என்றால் யாரிடமாவது வேலை செய்து தான் பிழைப்பான் என்பதை மாற்றியமைக்க வேண்டும். வேலை, வேலை என்று வீழ்ந்தது போதும்! வாருங்கள் வியாபாரம், வியாபாரம் என்று நாம் நமது தலை எழுத்தினை மாற்றியமைப்போம்!

-கோடிசுவரன்