2000 ஏக்கர் நிலம் எங்கேபோய்க்கொண்டிருக்கிறது ?

மு. குலசேகரன், மார்ச் 19, 2014.

kulaபேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் அதன் இலக்கை நோக்கிச் செல்லாமல் தட்டித்தடுமாறிக்கொண்டிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

 

அந்த நிலத்திற்கான  அதிகராப்பூர்வத் தலைவராக  பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கான  தலைமை ஆசிரியர் மன்றத்தலைவர்  முனியாண்டி இருந்த போதிலும், அவரின் ஆளுமைக்கு உட்படாமல் இயக்குனர்களின் கூட்டம் தன்னிச்சையாக வேறொரு இயக்குனரின் கட்டளைக்கிணங்க செயல்படுவதாக தெரிகிறது . முனியாண்டிதான் அதன் தலைவரென்றால் அவரின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளுக்கும் மக்களுக்கு தெரியும் வண்ணம் இருக்க வேண்டும். பெயரவில்தான் அவர் தலைவராக இருப்பார் என்றால் அவர் அப்பதவியை விட்டுவிலகுவது நல்லது.

 

இதர  இயக்குனர்களும் இந்த இயக்குனரின் தன்மூப்பான செய்கையினால் வருத்தம் அடைந்துள்ளார்கள் என்றும் அறியவருகிறேன்.

 

இந்த வாரியத்திற்கு  சில கேள்விகளை முன்வைக்கிறேன் :

 

  1. வருமானம் வருமுன்னே  அலுவலக அமைப்புச் செலவுக்கு ரிம50,000  செலவு செய்வதின் அவசியமென்ன? இது மந்திரிபுசார் கொடுத்த பணம் மென்றும் தெரிகிறது. அப்படியென்றால் பேராக் முதல்வருக்கு இந்த வாரியத்தில் நடக்கும் உண்மையான நிலவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றனவா?

அப்படி அவருக்கு விளக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக இந்த ரிம50     ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டிருக்கமாட்டாது. தற்காலிகாமாக ஓர் அலுவலகம் அமைப்பதற்கு இவ்வளவு பணம் ஏன் ?

 

முதலமைச்சர் அலுவலகத்திலேயே ஓர் அறையை எடுத்து அதையே செயலகமாகக் கொண்டு செயல்பட ஏன் தயக்கம்? பணம் சம்பாதித்து அதன் வழி தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் உதவுவதுதானே இந்த அறவாரியத்தின்நோக்கம்! அப்படியிருக்கும் பொழுது இயக்குனர்களின் வசதிக்காக, அவர்கள் கூடிபேசுவதற்கு இவ்வளவு செலவில் ஓர் அலுவலகம் அவசியாமா என்று சிந்திக்கத் தூண்டுகிறது. இது மந்திரி புசார் அவர்களுக்கு சரியானஆலோசனைகள் வழங்கப்படாததன் விளைவு என்று நான் கருதுகிறேன்

.

 

2. இந்த வாரியம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் உதவ அமைக்கப்பட்ட ஒன்றானால் இதில் ஏன் அதிகமான இயக்குனர்கள் இந்த இரண்டுஅமைப்புகளிலிருந்து தேர்ந்ததெடுக்கப்படவில்லை?

 

இந்த வாரியத்தில் இயக்குனராக இருக்கும் மாரிமுத்து பேராக் பள்ளி மேலாளர் வாரியச்சங்கத்தை பிரதிநிதிக்கின்றார்.  முனைவர் என்.எஸ் இராஜேந்திரன் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவின் தலைவர்  என்ற முறையில் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறே  நாச்சிமுத்துவும் ஸ்ரீ முருகன் அமைப்பிலிருந்து வந்துள்ளார். இவர்களைப் போல் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதனைச் சார்ந்த அமைப்புகளுக்கும் நேரடி தொடர்பில்லாதவர்கள் இந்த வாரியத்திலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தமிழ்ப்பள்ளிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள், உதாரணமாக, பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்ந்தவர்கள்  இதில் இணைக்கப்படலாமே?

3. வீரா முன்னாள் மந்திரி புசாரின் ஆலோசகர் என்ற முறையில் இந்த வாரியதில் இருந்தார். ஆனால் இப்பொழுது அந்த பதவி இல்லாத பட்சத்தில்  அந்தப் பதவியில் இப்பொழுது இருக்கும் மந்திரி புசாரின் ஆலோசகருக்குத்தானே அது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்? அரசாங்கம் கொடுத்த நிலமாதலால் , அரசாங்கத்தில் தற்பொழுது பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு கொடுப்பதுதானே நியாயம்?

 

வீராவே சூத்ரதாரியாக இருந்து கொண்டு இந்த வாரியத்தை வழி நடத்துவது இனியும் ஏற்புடையதல்ல. வெளிப்படையாக இதன் நிர்வாகம் செயல் பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

 

குலசேகரன் ஏன் இந்த 2000 ஏக்கர் நில விவகாரத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கிறான் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு  நான் சொல்வது இதுதான்: இது தமிழ்ப்பள்ளிகளின் சொத்து. இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம். இது தனிநபரின் இலாபத்திற்காக சமுதாயத்தின் கையிலிருந்து விலகாமல் பாதுகாப்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற விதத்தில் என் கடமையாக நான் கருதுகிறேன்.

 

தேவை ஏற்படுமானால் பேரா மந்திரி புசாரையே நேரில் சந்தித்துவிளக்கம் பெறவும் தயங்க மாட்டேன்.

 

TAGS: