மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன? (சிவாலெனின்)

மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன?

‘டீயும் கேக்கும்’ சாப்பிட்டதோடு இந்து சங்கத்தின் கடமை முடிந்து விட்டதா?சிவநேசன் கேள்வி!!!

 

சுங்காய்,மே01.(சிவாலெனின்)

Hindu-sangam-logoமுன்னால் பிரதமர் துன் மகாதீர் முதல் நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வரை மதமாற்றம் விவகாரம் குறித்து பேச்சிவார்த்தை நடத்தியிருப்பதாக கூறும் மலேசிய இந்து சங்கம் அப்பேச்சு வார்த்தைகளின் முடிவுகள்தான் என்ன?அதன் சாராம்தான் என்னவென்பதை இதுநாள் வரை மக்களுக்கு தெரிவிக்காததன் இரகசியம்தான் என்னவென்றும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கேள்வி எழுப்பினார்.

பேச்சுவார்த்தை நடத்துவது மகஜர் கொடுப்பதுதான் இந்து சங்கத்தின் கடமையா?அவ்விரண்டையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.அல்லது பேச்சுவார்த்தை எனும் பெயரில் டீ-யும் கேக்கும் சாப்பிடுவதோடு இந்து சங்கத்தின் கடமை முடிந்து விட்டதாக இந்து சங்கமும் அதன் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷானும் நினைகிறார்களா எனவும் வினவினார்.

மதமாற்றம் விவகாரத்திற்கு ஒத்துழைக்க தயார் அதற்கு சிவநேசன் தலைமைதாங்க தயாரா என மோகன்ஷான் கேள்வி எழுப்பியிருப்பது அவர் எனது அறிக்கையை முழுமையாகவும் பொருள்படவும் வாசித்து விளங்கிக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதாக சிவநேசன் கூறினார்.தாம் ஓர் இந்து எனும் ரீதியில் மதமாற்றம் விவகாரங்களில் மலேசிய இந்து சங்கத்தின் அனுகுமுறையும் அதன் செயல்பாடும் ஆக்கப்பூர்வமாய் இல்லை என்பதை சுட்டிகாண்பிக்கும் கடமையும் கேள்வி எழுப்பும் உரிமையும் தனக்கு இருப்பதாக கூறிய அவர்,அதற்கு முறையாக பதில் அளிக்க வேண்டிய இந்து சங்கமும் அதன் தலைமைதுவமும் கேள்விக்கு மறு கேள்வி கேட்பது அவர்களின் இயலாமையை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

அவர்கள் சொல்வதுபோல நான் தலைமையேற்க வேண்டுமானால் இந்த நாட்டில் இந்து சங்கம் எதற்கு?1965 இந்த நாட்டில் இந்து சங்கம் தோற்றுவித்ததன் அடிப்படை காரணம் என்னவென்பதை அச்சங்கம் மறந்து விட்டதா என்றார்.மலேசிய இந்து சங்கம் உலக இந்து சங்கத்துடன் அங்கத்துவம் பெற்றுள்ளது.அதன் வழி நாட்டில் நிலவும் மதமாற்றம் சம்பவங்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது என்பதை அவர்களால் மக்களுக்கு விளக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மதமாற்றம் பிரச்சனைக்கு சட்டரீதியில்தான் தீர்வுகாண முடியும் என்பதை யாவரும் அறிந்த விடயமே.இருந்தாலும் அப்பிரச்சனைக்கு தீர்க்கமான தீர்வுகாண இந்துக்களின் பிரதிநிதியாய் இருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் செயல்பாடுகள் போதுமானதாய் இல்லை என்பதே இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என தெரிவித்தார்.அவர்களின் பிரச்சாரமும் முன்நகர்வுகளும் பலமாய் இல்லை.அஃது பத்தோடு பதினொன்றாய் இருப்பதாகவே கருத முடிவதாய் அவர் மேலும் கூறினார்.

மேலும்,நாட்டில் நிலவும் மதமாற்றம் விசயத்தில்  சம்மதப்பட்ட மதத்தை தவிர மற்ற இஸ்லாம் அல்லாத மதத்தினர் மௌனமாய் இருப்பதும் பைபிள் சர்ச்சையில் கிருஸ்துவர்களை தவிர மற்ற இஸ்லாம் அல்லாதவர்கள் மௌனமாய் இருப்பதும் எவ்வாறு இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வினை ஏற்படுத்த முடியும் என நாம் சிந்திக்க வேண்டும்.இங்கு இவர்களுக்கிடையிலேயே போதுமான அனுக்கமும்,புரிந்துணர்வும்  நல்லுறவும் இல்லை என்பதைதானே இது காட்டுகிறது என்றும் நினைவுறுத்தினார்

ஒவ்வொரு பொது தேர்தலின் போதும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசு(எம்.டி.யூ.சி) அவர்களின் கோரிக்கையை மகஜராய் தயார் செய்து தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளிடமும் கொடுக்கும்.அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அவர்கள் தேர்தலில் ஆதரவும் தருவார்கள்.அமரர் பி.பி.நாராயணன்,அமரர் வீ.டேவிட்,அமாட் நோர்,ஜய்னால் ரம்பார் போன்றவர்கள் இதனை நடைமுறைபடுத்தியுள்ளனர்.எம்டியூசி-யின் இந்த நடைமுறையை தேர்தல் காலத்தில் இந்து சங்கமோ அல்லது இதர அமைப்புகளோ இதுவரை செய்துள்ளனரா.ஏன் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை?

இந்து சங்கம் தொடங்கப்பட்டது முதற்கொண்டு இதுநாள் வரை அச்சங்கம் ம.இ.காவையும் அம்னோவையும்தான் சார்ந்து இருந்து வருகிறது.இருந்து மதமாற்றம் விவகாரத்தில் அச்சங்கத்தின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காய் இருப்பதற்கு என்ன காரணம் என சிந்திக்குமாறு கேட்டுக்கொண்ட சிவநேசன் மானியத்திற்காகவும் பட்டத்திற்காகவும் அவர்களோடு பேரம்பேசி ஒட்டியிருந்தால் நமது உரிமையை கேட்க முடியாது என்றும் சாடினார்.உரிமையை கேட்கும் போது மானியமும் பட்டங்களும் இங்கு வாயடைக்கும் பூட்டுக்களாய் இருப்பதாக குறிப்பிட்டார்.

மதமாற்றம் பிரச்சனையால் மதமாறாத தர்ப்பினர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் வேண்டி சிவில் திருமணம் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர 2010ஆம் ஆண்டு அப்போதைய சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அமைச்சரவையில் மசோத ஒன்றை தாக்கல் செய்தார்.கணவன் மனைவி இருவரில் ஒருவர் இஸ்லாமிற்கு மதமாறும் போது அவர்கள் சிவில் சட்டப்படி செய்து கொண்ட திருமணத்திற்கு  முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.மேலும்,இருவரின் விருப்பத்தின் அடிப்படையில்தான் பிள்ளைகளையும் மதமாற்றம் செய்ய வேண்டும்.யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ளைகள் தங்களின் 18வயது வரை அவர்களின் தொடக்க மததிலேயே இருக்கலாம் என்பதை அம்மசோதா கொண்டிருந்தது.

அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட அம்மசோதா பின்னர் ஆளுநர் மன்றத்திற்கு  சம்ர்பிக்கப்பட்டது.ஆளுநர் மன்றத்தில் அச்சட்டத்திருத்தம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு அது ஒவ்வொரு மாநில இஸ்லாமிய இலாகாவிற்கு அனுப்பப்பட்டது.ஆனால்,இன்று வரை அதன் நிலை என்னவென்பது மூடு மந்திரமாய் உள்ளது.இதுவரை இந்து சங்கம் இது தொடர்பில் சம்மதப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதா அல்லது அதை பற்றி அறிந்துதான் இருக்கிறார்களா?இஸ்லாமிய இலாகாவிற்கு அனுப்பப்பட்ட மசோதா இதுநாள் வரை நாடாளுமன்றம் வரவில்லை.அவ்வாறு வந்தால் ஜசெக அதனை ஆதரிக்கும் என்றார்.

சிவில் சட்டத்தில் திருத்ததை கொண்டு வர அம்மசோதாவை இஸ்லாமிய இலாகாவிற்கு கொண்டு சென்றது அவசியமற்றது.இஃது இஸ்லாம் அல்லாதவர்கள் சம்மதப்பட்ட விவகாரம்.இம்மசோதாவால் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் சிவநேசன் விளக்கினார்.அவ்வாறு இருக்க இம்மசோதா ஏன் இஸ்லாமிய இலாகாவிற்கு அனுப்பப்பட்டது எனும் கேள்வியையாவது இந்து சங்கம் எழுப்பியதா என்றார்.

நாட்டில் 1987இல் ஷரிய சட்டத்தை அமல்ப்டுத்திய போது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த போது ம.இ.காவின் பிரதிநிதி டத்தோ த.ம.துறையும் ம.சீ.சவின் 13 சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால்,ஜசெகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவுக்கூர்ந்த சிவநேசன்  இந்து சங்கம் அதன் எந்த நிகழ்விற்கும் சரி,உதவிக்கும் ஆலோசனைக்கும் சரி எங்களை இதுவரை அழைத்ததில்லை.அவர்கள் ம.இ.கா தலைவர்களையும் இந்து மதத்தை சாராதவர்களை கூட அழைப்பார்கள் எங்களை அழைக்க மாட்டார்கள் என சுட்டிக்காண்பித்தார்.

ஆனால்,இப்ப நெருக்குதல் கொடுத்தால் சிவநேசன் தலைமைதாங்க தயாரா என கேள்வி எழுப்புகிறார்கள்.அப்படி நான் தலைமைதாங்க வேண்டுமானால் இந்த நாட்டில் இந்து சங்கம் எதற்கு என கேள்வி எழுப்பிய சிவநேசன் மோகன்ஷான் பதவி விலக வேண்டியதுதானே என பதிலடிக்கொடுத்தார். கேள்வி கேட்பது எங்களின் உரிமை பதில் தர வேண்டியது அவர்களின் கடமை என குறிப்பிட்ட அவர் இந்து சங்கமும் அதன் தலைமைத்துவமும் தத்தம் கடமையை மறந்து வாய்க்கு வந்ததை உலறக்கூடாது என கூறினார்.

இந்து சங்கத்திற்கு எங்களிடம் பேசுவதற்கு கலந்தாலோசிக்கவும் தயக்கமாகவும் ஐயமாகவும் இருந்தால் ம.இ.காவில் அமைச்சரவை நாற்காலியில் அமர்ந்திருக்கும் இரு அமைச்சர்களிடம் விவாதிக்கலாமே.அவ்விருவருக்கும் அமைச்சரவையில் இது தொடர்பில் பேச சொல்லி நெருக்குதல் தரலாமே.மதமாற்றம் விவகாரத்தில் ம.இ.காவிற்கும் கடமை உள்ளது.அவ்விரு அமைச்சர்களும் இதுவரை இந்த பிரச்சனை தொட்டு அமைச்சரவைவில் பேசினார்களா?அவர்களின் நிலைபாடு என்னவென்பதை வெளிப்படையாக அறிவிக்க சொல்லி இந்து சங்கம் கோரிக்கை விடுக்க வேண்டும்.நெருக்குதலும் அளிக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.அதைவிடுத்து மானியத்திற்காக அவர்கள் பின்னால் செல்லக்கூடாது என எச்சரித்தார்.

மலேசியாவில் இஸ்லாம் அல்லாதவர்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனையை களைவதற்கு மலேசிய ரீதியிலும் உலக அளவிலும் இந்து சங்கத்தின் பிரச்சாரமும் துரித நடவடிக்கையும் என்னவென்று சிந்திக்குமாறு வலியுறுத்திய சிவநேசன் தாம் யாரையும் அநாவசியமாய் தாக்கவில்லை என்றும் ஓர் இந்துவாய் மதரீதியிலான விடயங்களை கண்டும்காணாமலும் தம்மால் இருக்க முடியாது என்றும் ஒப்பித்தார்.மதரீதியிலான பிரச்சனைகளுக்கு அது சார்ந்த சங்கத்தால் தீர்வுகாண முடியாவிட்டால் அச்சங்கத்தால் அம்மதத்தினருக்கு என்னதான் நன்மை எனவும் வினவினார்.தேவார வகுப்பு நடத்துவதற்கு மட்டும்தான் இந்து சங்கம் என்றால்,அதனை மூடிவிடலாம்.அச்சங்கம் இங்கு தேவையில்லை.தேவாராத்தை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரலாம் என்றார்.

இதற்கிடையில்,மலேசிய இந்து சங்கம் இதுவரை 1968,1970,1975,1981 மற்றும்1989 ஆகிய ஆண்டுகளில் தேசிய இந்து மாநாடு நடத்தியுள்ளது என குறிப்பிட்ட சிவநேசன் இம்மாநாடுகளுக்கு ம.இ.காவின் தேசிய தலைவர்களும் அப்போதைய பிரதமர்களும் தலைமைதாங்கியுள்ளனர்.அன்றைய நிலையில்கூட மக்களுக்கு நன்கு அறிமுகமும் மக்கள் செல்வாக்கும் பெற்று விளங்கிய ஜசெக தலைவர்களான அமரர் வீ.டேவிட்,பி.பட்டு மற்றும் கர்பால் சிங் போன்றவர்களை இந்து சங்கம் அழைக்கவில்லை எனகுறிப்பிட்டார்.

இதில் 1989இல் இந்து மதம் 2000ஆம் ஆண்டை நோக்கி எனும் தூரநோக்கு கருபொருளோடு நடந்த மாநாட்டில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் கலந்துக்கொண்டார்.இதில்  மலேசியா உட்பட இந்தோனேசியா,சிங்கப்பூர்,நேபால்,தாய்லாந்து,ஆங் காங் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.1989இல் தூரநோக்குடன் கருபொருளை சிந்தித்த இவர்கள் மதமாற்றம் பிரச்சனைக்கு இதுவரை தூரநோக்குடன் தீர்வினை கையாளாதது வருத்ததிற்குறியது.

மலேசிய இந்து சங்கம் தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரை தேசிய முன்னணியையே உரசிக்கொண்டிருக்கிறது என்பதை இனியும் யாரும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை.இருந்து  கிட்டதட்ட 45 ஆண்டுகளாய் தேசிய முன்னணியோடு பயணம் செய்திருந்தும் மதமாற்றம் விவகாரத்தில் இந்து சங்கம் எதிர்பார்ப்பதை அந்த அரசால் செய்யமுடியாததற்கு என்ன காரணம்?இந்து சங்கத்தை தேசிய முன்னணி ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றுதானே பொருள்படும் என நினைவுறுத்தினார்.

இந்து சங்கம் அது தொடங்கப்பட்ட உண்மையான நோக்கத்திலிருந்து தடம் புரண்டு விட்டது.மானியத்திற்காகவும் பட்டத்திற்காகவும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே தஞ்சம் புகுந்ததால் அதனை யாரும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை.அதன் குரலுக்கு பலமில்லாத சூழல் உருவாகிவிட்டது.இனியாவது இந்து சங்கம் மேடையில் பேசிகொண்டும் பத்திரிக்கை அறிக்கை விட்டுக்கொண்டும் இருக்காமல் மதரீதியில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஆக்கப்பூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.அரசாங்கத்திற்கு மகஜர் கொடுப்பதையும் பேச்சுவார்த்தை நடத்துவதையும் நிறுத்தி விட்டு கூடுதல் நெருக்குதலை கொடுக்க வேண்டும்.அவர்களின் நெருக்குதலுக்கு அரசும் அதில் அங்கம் வகிக்கும் ம.இ.காவும் செவி சாய்க்க வேண்டும் என நினைவுறுத்தினார்.மலேசிய இந்து சங்கத்தின் செயல்பாடை கண்டு ஒரு வகை அச்சம் ஏற்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்து சங்கத்தையோ அதன் தலைவர்களையோ தனிபட்ட முறையில் தாக்கவோ விமர்சிக்கவோ தமக்கு துளியும் எண்ணமில்லை.அவர்களின் செயல்பாடும் நடவடிக்கைகளும் போதுமானதில்லை.அவை குறைகூரல்களோடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டியது ஓர் இந்துவாய் எனது கடமை என்று சிவநேசன் (சிவாலெனின்) மீண்டும் நினைவுறுத்தினார்.