பொது போக்குவரத்து – அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும்

Pengangkutan-awamபொது போக்குவரத்து இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதுவும் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இன்றிமையாததாகிறது. நல்ல பொது போக்குவரத்து என்பது பாதுகாப்பானதாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவை உடையதாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு பொது போக்குவரத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி விவேகமான நில பயன்பாட்டையும் உறுதிபடுத்துகிறது.

ஒரு இடம் வளர்ச்சி அடைய தொடங்கும்போது பொது போக்குவரத்தின் அவசியம் அதிகமாகிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் வசதி குறைந்த மக்களே அதிகம் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவர். அவர்கள் வசதிக்கு ஏற்ப மலிவான விலையில் இருப்பதால் இச்சேவை அவர்களின் தேவையாகிறது.

இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் பட்டணத்துவாசிகளும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சாலை நெரிசலைத் தடுப்பதோடு மட்டுமின்றி போக வேண்டிய இடத்திற்கு விரைவாகவும் சிக்கனமாக இருக்கவும் பொது போக்குவரத்து பேருதவியாக இருக்கிறது.

பயனீட்டாளராகிய நமக்கு பொது போக்குவரத்தின் சேவை மிக தேவையாகிறது. பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் தினமும் ஏற்படும் சாலை நெரிசலைத் குறைக்க முடியும். அதோடு மட்டுமின்றி வாகன நிறுத்துமிடத்திற்கு ஏற்படும் பற்றாக்குறையைச் சற்று குறைக்கலாம். சொந்த வாகனங்களில் செல்வதை விட பொது போக்குவரத்து சேவையை உபயோகிப்பதின் வழி நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

வாகனம் நிறுத்துமிடத்திற்காக செலுத்தும் கட்டணத்தைப் பொது போக்குவரத்து பயன்படுத்துவதன் மூலம் சேமிக்கலாம். இதன் வழி பயனீட்டாளர்கள் செலவினத்தைக் குறைக்கலாம். உணவிற்கு அடுத்ததாக மக்கள் அதிக பணம் செலவிடுவது போக்குவரத்து துறை.

பொது போக்குவரத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி பணத்தைச் சேமிக்கவும் உதவுகிறது.

தூய்மைக் கேட்டை குறைக்கிறது

பொது போக்குவரத்து, ஆற்றலின் பயன்பாட்டைக் குறைந்து தூய்மைக்கேடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.  மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் கீழ் இயங்கி வரும் பயனீட்டாளர் ஆராய்ச்சி மற்றும் வள மையத்தின் ஆய்வு அறிக்கைப்படி வாழ்க்கை செலவினங்களுக்கு அடுத்ததாக பொது போக்குவரத்து முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

இன்றைய உண்மையான நிலவரப்படி, மலேசிய பொது போக்குவரத்து துறை பயனீட்டாளர்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்கவில்லை என்றாலும் அதன் தேவை மிக முக்கியமாகிறது.

ஜூன் 2010 ஆம் ஆண்டு நில பொது போக்குவரத்து ஆணைக்குழு தோற்றுவிக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வந்தாலும் பொது போக்குவரத்தின் நிலை அப்படியேதான் உள்ளது. பயனீட்டாளர் ஆராய்ச்சி மற்றும் வள மையத்தின் ஆய்வில், பொது போக்குவரத்து சேவையில் உள்ள பல கடுமையான பலவீனங்களை அடையாளங் கண்டுள்ளது.

முக்கியமாக பொது பேருந்தின் சேவைத்தரத்தின் மீது பயனீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இது எதனால் என்றால், அடிக்கடி பேருந்து தாமதமாக வருவதால் மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. சரியான பயண கால அட்டவணை இல்லாததால் பேருந்தில் பயணம் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய தாமதமாகிறது.

அடுத்ததாக, மலேசிய பொது போக்குவரத்து சேவை இன்னும் சரியாக விரிவாக்கம் அடையவில்லை. இன்னும் நிறைய இடங்களுக்குப் பொது போக்குவரத்து சேவை கிடைக்காததால் மக்கள் பாதி வழியில் இறங்கி நடக்க வேண்டிய சூழ்நிலையை எதிர் நோக்குகின்றனர்.

இலக்கைத் தாமதமாக அடைதல்

சாலை நெரிசலில் சிக்கிக் கொள்ளும் பேருந்து, சேர வேண்டிய இலக்கை தாமதமாக வந்து அடைகிறது. சாலையில் பொது போக்குவரத்துக்கு என முறையான உள்கட்டமைப்புகள் இல்லாததால் இவ்வாறான பிரச்சனையை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பேருந்து பயணிகளின் பாதுகாப்பு தற்போது மிக கடுமையான விஷயமாகக் கருதப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அதிகமான விரைவுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி பல மரணங்களை ஏற்படுத்தியுள்ளன.

சில நேரங்களில் நில பொது போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுக்க முயன்றால், பேருந்து நடத்துனர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்க் கொள்ள வேண்டிய நிலை. இம்மாதிரியான எதிர்ப்புகளால் விதிமுறைகள் மீண்டும் திரும்ப பெற்று கொள்ளப்படுகின்றன. அதையும் மீறி விதிமுறைகளை அமல்படுத்த முயன்றால் பேருந்து நடத்துனர்களால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன.

நில பொது போக்குவரத்து ஆணைக்குழு, பயனீட்டாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதோடு இம்மாதிரியான விதி மீறல்களை அனுமதிக்கக்கூடாது. அதிகமான பட்டணத்துவாசிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். தவிர்க்க முடியாத பெட்ரோல் விலை ஏற்றத்தால் அதிகமானோர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த நேரிடுகிறது. பொது போக்குவரத்தை உபயோகிப்பதால் பணத்தை ஓரளவு சேமிக்க முடியும் என்ற காரணத்தால் பலர் இச்சேவையை நாடுகின்றனர்.

இதனைத் தவிர, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அடுத்து அடுத்து வரும் நிலையங்கள் அதிக தூரமாக இருப்பதால் பலர் தங்களது வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். சரியான நேரத்தில் தங்களது இலக்கை அடைய முடியாமல் போவதுடன் சாலை நெரிசலில் மாட்டி கொள்வதால் பொது போக்குவரத்து சேவையை பலரால் பயன்படுத்த இயலவில்லை.

பொது போக்குவரத்து நிலையங்களில் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாத காரணத்தால் அதிகமானோர் வீடு பகுதிகளில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவர்கள் வாகனத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. அதோடு மட்டுமின்றி வீடு பகுதிகளில் சாலை நெரிசல் ஏற்பட்டு குடியிருப்பாளர்களுக்குத் தொந்தரவாக அமைகிறது. இன்னும் சிலர் தங்களை நிலையங்களில் விட்டு செல்ல ஓர் ஆளைத் தேட வேண்டியதாகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முனைய வேண்டும். வேண்டிய சீர்திருத்தங்கள் செய்வதன்வழி சிறந்த மற்றும் விவேகமான பொது போக்குவரத்து சேவையை கண்டிப்பாக வழங்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எழுத்து : டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன்

மலேசிய பயனீட்டாளர் சம்மேளன தலைவர்