பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ விடுங்கள்! கல்வி என்பது இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் சொல்லி விட்டார்கள். தலைவர்களும் சொல்லிவிட்டார்கள். ஏன்? மற்ற இனத்தவர்கள் கூட நமக்கு அறிவுரைக் கூறிவிட்டார்கள். ஆனாலும் நம்மில் இன்னும் பலர் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாதவர்களாகவே இருக்கிறோம்.
ஏதோ! SPM வரைப் படித்தால் போதும் என்னும் மனநிலை இன்னும் பல பெற்றோர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் போட்டி நிறைந்த உலகில் இதையெல்லாம் ஒரு படிப்பாகவே எடுத்துக் கொள்ள முடியாது!
SPM – முக்குப் பின்னர் பலவிதமானப் பயிற்சிகள் உள்ளன. கணினித் தொடர்பான பயிற்சிகள் நிறையவே உள்ளன. உண்மையைச் சொன்னால் UPSR படிக்கும் போதே பல மாணவர்கள் தங்களது கணினி பயிற்சிகளை ஆரம்பித்து விடுகின்றனர்.
நமது மாணவர்களைப் பொருத்தவரை கணினி தொடர்பான பயிற்சிகள் தேவை என்பதையே உணர்வதில்லை. கணீனி மையங்களுக்குப் போனால் சினிமா, ஆடல் பாடல் என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர தங்களுக்கு எது தேவையோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! அவர்கள் ஏதோ தனி உலகில், எங்கோ மிதந்து கொண்டிருக்கின்றனர்! பெற்றோர்கள் இன்னொரு பக்கம் ‘மிதந்து’ கொண்டிருக்கின்றனர்! இது தான் நமது நிலை!
நாம் நமது மாணவர்களைக் குறை சொல்லுவதை விட பெற்றோகளின் குறைபாடுகளே அதிகம். தங்களின் வேலைக் காரணமாக பிள்ளைகளைக் கவனிப்பதில் பின்தங்கி விடுகின்றனர்!
ஒரு தாய், பையன் கணினி விளையாட வேண்டும் என்று சொல்லுகிறான். பையன் தமிழ்ப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன். அக்கறையோடு சொல்லுகிறானே என்று கணீனி விளையாட தாய் அனுமதிக்கிறார். தாயார் அக்கறையோடு பையனுடன் உட்கார்ந்திருக்கிறார். பையன் சினிமா நடிகைகளின் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான். அதுவும் அனைத்தும் கவர்ச்சிகரமானப் படங்கள். தாயும் பையனோடு சேர்ந்து ‘அக்கறையோடு’ பார்த்துக் கொண்டிருக்கிறார்! இது மாதிரி படங்களைப் பார்க்க வேண்டாம் என்று அவருக்குச் சொல்லத் தெரியவில்லை! எங்கே போய் முட்டிக்கொள்ளுவது?
நிறையச் செலவு செய்து தான் நமது பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்னும் அவசியம் ஒன்றுமில்லை. அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டாலே போதும்.
தொழிற்திறன் பயிற்சி நிலையங்களில் நமக்கு நிறையவே வாய்ப்புக்கள் தரப்படுகின்றன. வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுவற்குக் கூட அவர்களுக்கு யாரும் ஆளில்லை! பெற்றோர்களும் அதனைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. பிள்ளைகளும் ஆர்வம் காட்டுவதில்லை. ஏதாவது ஒரு தொழிற்சாலையில் வேலைக் கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனர்!
பெற்றோர்களுக்கு முன்னேறுவது என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஒரு தோட்டப்புற சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவது என்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த சமுதாயத்தோடு நெருக்கம் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்.
காலங்காலமாக தோட்டப்புறங்களில் இருநூறு, முன்னூறு என்று சம்பளம் வாங்கிய சமுதாயம் நாம். இப்போது தொழிற்சாலைகளில் ஐனூறு அறுநூறு சம்பளம் என்னும் போது அதனைப் ‘பெரிய’ சம்பளமாக நினைக்கும் மனப்போக்கு இன்னும் நம்மில் பலரிடையே உண்டு! அதுவும் ஒரு குடும்பத்தில் ஐந்தாறு பேர் வேலை செய்தால்….? கூத்தும், கும்மாளமும் தானே தவிர அந்தச் சம்பளத்திலும் முன்னேற வாய்ப்புண்டா என்று சிந்திக்கும் மனப்பக்குவம் கூட நமக்கு இன்னும் வரவில்லை.
அதனால் தான் ‘ஏதோ படித்தான், முடித்தான் இனி ஏதோ ஒரு வேலை’ என்னும் ஒரு மனப்போக்கு நமது பெற்றோரிடையே இன்னும் உண்டு. பெற்றோர்கள் திருந்தாதவரை பிள்ளைகள் திருந்தப் போவதில்லை.
இரண்டு இளைஞர்கள் வேலைக்காக மனு செய்கிறார்கள். அந்த இருவரையும் ஒரு பெண்மணி வேலைக்கு அழைத்துச் செல்கிறார். முயற்சி செய்திருந்தால் அதில் ஒருவன் POLYTECHNIC க்கில் வாய்ப்புக் கிடைத்திருக்கும். SPM – ல் நல்ல புள்ளிகள் எடுத்திருந்தான். இன்னொருவனுக்குக் குறைவான புள்ளிகள். COMMUNITY COLLEGE – ல் இடம் கிடைக்கும். ஏன் அவர்கள் படிக்கவில்லை என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன். குடும்பச்சூழல். தூரமாய் போய் படிக்க முடியாது, கெட்டுப் போய் விடுவார்கள் என்று பெற்றோர்கள் பயப்புடுகிறார்கள் என்றார். அந்தப் பெண்மணிக்கு ஏதொ “சில்லறைகள” அவருடைய நிறுவனத்திலிருந்து கிடைக்கும் என்றே தோன்றியது!
இப்போது நம்மிடையே உள்ள அராஜகங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அனைத்தும் வெளியூரிலிருந்தா செய்கிறார்கள்? எல்லாம் நம் பக்கத்தில் இருந்து கொண்டு தானே நடக்கிறது! அவன் வெளியூர் போனால், தூரத்திலிருந்து படித்தால் அவன் கெட்டுப்போவதற்கு என்ன இருக்கிறது! இன்னும் சிறப்பாக வருவானே! என்னும் மனப்போக்கு இன்னும் நமக்கு வரவில்லை. மகன் கெட்டுப்போவான் என்று கெட்டுப்போன அப்பன் நினைக்கிறான்! யாராவது திருந்தித்தானே ஆக வேண்டும்!
இரண்டு இளம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். ஒருவர் குறைவான புள்ளிகள் வாங்கியிருக்கிறார். மன்னித்து விடலாம். இன்னொருவர் அதிகப்புள்ளிகள். மெற்றிக்குலேஷன் கல்விக்குத் தகுதியானவர். ஏனம்மா இப்படி? குடும்பசூழல் அப்படி! என்கிறார். படிப்போடு சரி. வேறு எந்தப் பயிற்சியும் இல்லை. கணினி அறிவு இல்லை. எந்தத் தொழிற்திறனும் இல்லை. இப்படி இவர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்குப் போவதால் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சரி! நாளை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டு போய்விட்டால் அவர்களின் குடும்ப சூழல் என்னவாகும்? பெற்றோர்கள் ஏன் இதனைச் சிந்திக்க மறுக்கிறார்கள்?
கொஞ்சம் வயதான இளைஞர். வேலை பறி போய் விட்டது. வேறு வேலைக்கு முயற்சி செய்கிறார். வெறும் SPM கல்வி. அதிலும் தோல்வி. எந்த ஒரு தொழில் திறன் பயிற்சியும் இல்லை. எந்த சான்றிதழும் இல்லை. தான் வேலை செய்த அனுபவத்தை வைத்து இரண்டாயிரம் வெள்ளி சம்பளம் கேட்கிறார்! தொழிற்சாலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா! பெற்றோர்கள் அன்று அவர் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்று அவர் நிலை மாறியிருக்கும் அல்லவா!
வேலைக்குப் போகும் முன்னர் முடிந்தவரை ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது கட்டாயம். ஒன்றுமே இல்லாமல் வெறுமனே போனால் யார் மதிப்பார்கள்? நாட்டுச்சூழல் அப்படி அல்லவே! பெற்றோர்களின் அறியாமை பிள்ளைகளையும் தொடர்கிறது.
ஒரு மலாய் இளைஞன். SPM – ல் படு தோல்வி. அவனது பெற்றோர்கள் ஒரு தொழிற்பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். இராண்டு ஆண்டுகள் பயிற்சி. பயிற்சி முடிந்து வேலைக்கு மனு செய்யும் போது பத்து, இருபது சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு மனு செய்கிறான். யாருக்கு வேலை கிடைக்கும். சான்றிதழே இல்லாதவனுக்கா அல்லது கத்தை கத்தையாக சான்றிதழ்கள் வைத்திருப்பவனுக்கா?
இன்று பிள்ளைகளை விட பெற்றோர்களே குற்றவாளிகளாக கண் முன் நிற்கிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. தொலைக்காட்சிகளில் சினிமா பார்ப்பதும், சீரியல்கள் பார்ப்பதும் தான் வாழ்க்கை என்று நினைக்கின்றனர். பிள்ளைகளுக்காக இது போன்ற சீரியல்களைப் பார்ப்பதை நிறுத்தி கொஞ்சமாவது தியாகம் செய்ய வேண்டும்.
பெற்றோர்களே! இந்தச் சமுதாயம் தலை நிமிர வேண்டும். இந்தச் சமுதாயம் கல்வி கற்ற சமுதாயம் என்று பெயர் எடுக்க வேண்டும். தொழிற்திறன் பெற்ற சமுதாயமாக மாற வேண்டும். கல்விகற்றவர் என்று பெயர் எடுப்போம்!
பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ வைப்பது உங்கள் கடமை!
(கோடிசுவரன்)
பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
நமது பெற்றோர்களிடையே உடனடி சிந்தனை மாற்றம் தேவை என்பதை இக்கட்டுரை தெளிவாக உணர்த்துகிறது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.
ஒரு வீட்டில் மூவரும் ஆண் பிள்ளைகள். படிப்பில் ஏதோ பி.எம்.ஆர். வரை. அதற்கு மேல் போகவில்லை. அரசாங்க தொழிற்திறன் பயற்சியில் கலந்து கொள்ள ஆலோசனை சொல்லியும் முடியாது என்று சொல்லி விட்டார்கள். பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். பக்கத்தில் இருந்தால் சம்பாதித்துக் கொடுப்பார்கள் என்றார்கள். இப்போது ஆலோங்குக்கு அடியாளாக இருக்கிறார்கள்! ஒ! இறைவா! இந்தச் சமூகத்தை நீர் தான் காப்பாற்ற வேண்டும்!
சித்திக்க வேண்டிய தரமான கட்டுரை. திருந்துவார்களா பெற்றோர்கள்