இந்தியர்கள் கெஅடிலானின் சுவரொட்டி படையா!

pkr logoகெஅடிலானில் இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் கட்சியில் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல் பட்டுத்தான் ஆக வேண்டுமா என்பதனைத் தீர்மானிக்க வேண்டிய முக்கியத் தருணத்தில் கெஅடிலான் உறுப்பினர்கள்  இருக்கின்றனர்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருந்த காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைத்து வந்த மாநில அரசின் சில உதவிகள் கூட இப்பொழுது  நின்று விட்டன என்பதே மாநில மக்களின் புலம்பலாக உள்ளது. ஆக, கட்சி தேர்தலிலும் முக்கிய இந்தியத் தலைவர்கள் தோல்வி கண்டால் நம் இனத்திற்குப் பெரிய பாதகம் ஏற்படும் என்பதனை உணர்ந்து நம்மவர்கள் இனி ஓட்டு அளிக்க வேண்டும்

கெஅடிலான் கட்சி அதன் உறுப்பினராக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்களைக் கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் கட்சிக்கான  நம்மவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும்  அளவே  இல்லை. 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வெற்றிக்கான முக்கியக் கூறாக, நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான மூல மந்திரமாக ஹிண்ராப் போராட்டம் இருந்தது.

ஆனால் ஐந்து  மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய  மக்கள் கூட்டணியின் தலைமை பங்காளியான கெஅடிலான் இந்தியர்களுக்கு என்ன தந்தது? கெடா மற்றும் சிலாங்கூரில் தலா ஒரு எஸ்கோ பொறுப்பு, 2013 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குபின் அதனையும் அபகரித்துக் கொண்டது. ஆக, இந்தியச் சமுதாயம் நிகழ்த்திய 2008 ஆம் ஆண்டு சாதனைக்கான நன்றி கடன் என்ன? இப்படிப்பட்டவர்களால் இந்தியர்களின் எதிர் காலத்திற்கு என்னச் செய்ய முடியும்?

சமுதாய விரோதிகளுக்குக் கட்சி மேலிடம் ஆதரவு

கட்சியின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு  ஆலோசகர் என்று தன்னைக் கூறிக் கொண்ட ஒருவர் முன்னால் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்று குறுந்தகவல்களை அனுப்பி வைத்தார், அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்க வில்லை? இதுவும் கட்சித் தலைமைத்துவத்தின் அரசியல் விளையாட்டா?

சிலாங்கூரில், மேலும் ஒரு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு டத்தோ வைத்திலிங்கம் போன்ற பெரிய மனிதர்கள் விடுத்த கோரிக்கைகளுக்குக்  கட்சி மேலிடம் செவிசாய்க்கும் என இந்தியர்கள் நம்பினர். ஆனால், இந்தியர்களுக்குக்  கூடுதலாக ஒரு ஆட்சிக்குழு உறுப்பினர் தேவையில்லை எனத் தட்டிக்கழித்துப் பதில் அறிக்கை விட்ட அதே நபர்  இப்போதைய கட்சி தேர்தலில் உதவித்தலைவர்  வேட்பாளரா? இது போன்ற சமுதாய விரோதிகளின் மீது, உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

மேலும், கடந்த முறை கட்சி தேர்தலில் உதவித்தலைவர் பதவிக்கு நான்கு  இந்தியர்கள் போட்டியிட்டாலும் எவரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அதில் அதிக வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தைக் கைப்பற்றிய டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டிய நியமன உதவித்தலைவர் பதவியை, கட்சிக்கு வெளியிலிருந்த  ஒரு மனித உரிமை வக்கிலான என்.சுரேந்திரனுக்கு வழங்கியதும், கட்சி தலைமைத்துவத்தின் இந்திய உறுப்பினர் எதிர்ப்பு செயலாகவே கெஅடிலான் உறுப்பினர்களான நாங்கள்  கருதுகிறோம்.

இம்முறை  கட்சியின் தேசியத்துணைத் தலைவர் பதவிக்கு  உலு சிலாங்கூரைச் சார்ந்த டத்தோ ராமா என்பவர், போட்டி போட இருந்தார், இறுதியில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனைப்படி போட்டியிலிருந்து அவர் விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

உறுப்பினர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இந்தியர் உள்ள கட்சியில், இந்தியர்களில் ஒருவர் துணைத்தலைவருக்குப் போட்டியிடுவது ஏன் தடுக்கப்படுகிறது? அதனால் தேசிய உதவித்தலைவர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் இரு இந்தியர்களையாவது தேர்ந்தெடுப்பது இந்தியர்களின் கடமையல்லவா?

கெஅடிலானை நாசப்படுத்தும் ம..காவின் தோழன்

கோலசிலாங்கூர்  தொகுதி தலைமைத்துவத்திற்கு நடப்பது கட்சி உறுப்பினர்களிடையே உள்ள போட்டி, இங்குள்ள மக்களுக்கு  வீட்டுமனை, விவசாய நிலத்துக்கு வழியில்லை, தமிழ்ப் பள்ளி ஆலயங்களுக்குக் கிடைத்த அரசாங்க மானியம் நின்று விட்டது. ஆனால் உள்கட்சி தேர்தலில் பணம் படைத்த வெளியாட்களுக்கு என்ன வேலை?  இந்நபரின் செய்கையால் தேர்தலில் கலாட்டா? தட்டிக்கேட்ட முன்னால் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் இடைநீக்கம். அதே நபரின் கைங்கரியம் கிள்ளான்  கோத்தா ராஜா தொகுதியிலும் காணப் பட்டது. அங்கும் டாக்டர் சேவியரை வீழ்த்த அந்நபரின் பணம் விளையாடியது.

இவர் எவரிடம் என்ன கைமாறு எதிர்பார்த்துக் கட்சியிலுள்ள இந்தியர்களுக்குக் கீழறுப்பு செய்கிறார்? கட்சியில் அநீதிகளுக்கு எதிராக, இந்தியச் சமுதாயத்தின் சிக்கலான பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் இந்தியத் தலைவர்களை ஒழிக்கத் தலைமைத்துவத்திற்கு உதவினால், அந்நபருக்குத் தனிப்பட்ட ரீதியில் வியாபார அனுகூலம் கிட்டலாம் என்ற அற்ப ஆசைதானே? தனி மனிதத் தேவைக்கு, சமுதாய நலனை அர்ப்பணிக்கலாமா?

சமீபத்தில் ம.இ.கா வின் தலைவர்களுக்குச் சிறப்பு விருந்தினை வழங்கிய அப்பிரமுகருக்கு, பக்காத்தானில் ஏன் முக்கியத்துவம்.? கட்சி தலைமைத்துவம் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதப் பேர்வழிகளின் கை பாவையாகி விட்டதால், கட்சியைக் காப்பாற்ற, தூய்மை படுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. குறைந்தது நம் உரிமையைக் காக்கவாவது  தலைமைத்துவத்தில் மாற்றம் தேவைபடுகிறது.

ஆக, இந்தியர்கள் விவேகமின்றி எப்படித்தான் பாடுபட்டாலும், எவ்வளவு உறுப்பினர்களைக்  கொண்டிருந்தாலும் பதவி என்று வரும் பொழுது அம்னோ பாணியிலான அணுகுமுறையைப் பின்பற்றிக் கட்சி உயர்மட்டப் பதவி, மாநில எஸ்கோ பொறுப்பு, மாநில ஜி.எல்.சி நிறுவனப் பொறுப்புகளுக்கு இந்தியர்கள் போட்டி போடுவதைத் தடுக்கவும், தகுதி வாய்ந்த இந்தியர்களின் வெற்றியையும், வளர்ச்சியையும் கட்டுப்படுத்தப் பணம் மற்றும் வெளியாட்களின் சதி இருந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது உள்ள பதவிகளில் தேசிய உதவித்தலைவர் மற்றும் மத்திய உச்சமன்றப் பதவிக்கான போட்டிகளில் மட்டுமே இந்தியர்கள் எஞ்சி இருக்கின்றனர். ஆனால், அதிலும் வெற்றி வாய்ப்புள்ள நிலையில் எந்த இந்தியரும் இல்லை என்பது பெரிய ஏமாற்றமாகும். காரணம் 4 தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 14 பேரில் ஐவர் இந்தியர்கள் என்பதுடன், 20 உச்சமன்ற பதவிக்குப் போட்டியிடும் 73 வேட்பாளர்களில் 23 பேர் இந்தியர்கள் என்பதால், இந்தியர்களின் ஓட்டுகள் அதிகம் சிதறி, எந்த இந்தியரும் தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம்.

தேசிய உதவித்தலைவர்

இந்தியர்களில் தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆறாவது இடத்திலும்,  நடப்பு நியமன உதவித்தலைவர்களில் ஒருவரான என். சுரேந்திரன் பதினோராவது  இடத்திலும் உள்ளனர். ஆனால், தற்போது உதவித்தலைவர்  போட்டியில் இந்தியர்களிடையே முன்னணியில் இருக்கும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் நடப்பு உதவித்தலைவர் சுரேந்திரன்  ஆகிய  இருவருக்கு மட்டும் இந்தியர்கள் தங்கள் ஓட்டுகளை ஒருமுகப் படுத்தினால் இரு இந்தியர்களாவது உயர் பதவிகளில் சமுதாயத்தைப் பிரதிநிதிகலாம்

உச்ச மன்றப்பதவி

அதே போன்று கெஅடிலான் உச்சமன்றப் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களில் முன்னால் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம், நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பி.ரவி, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், பேராக் சட்டமன்ற உறுப்பினர் கேசன், ஆகிய நால்வரும் கட்சிப்பதவியை எட்டி பிடிக்கும்  நிலையில்இருப்பதால் அவர்களையாவது வெற்றிபெறச் செய்யச் சிலாங்கூர் இந்தியர்கள் தங்கள் ஓட்டுகளை ஒருமுகப் படுத்த வேண்டும், அரசியல் சாதுரியத்தைப் பயன் படுத்த வேண்டும்.

இந்தியர்கள் இருப்பார்களாபறப்பார்களா!

சிலாங்கூர் மாநிலத்தில்  இந்தியர்களுக்கு நிறுத்தப்பட்ட மாநில அரசின் சில உதவிகள் தெலு இந்தான் இடைத்தேர்தலில் பாடம் புகுத்தியிருக்கிறது. இந் நாட்டின் பிரித்தாலும் கொள்கைக்குக் கெஅடிலான் இந்தியர்களும் பகடையாக, உணர்வற்ற பிண்டங்களாக, அண்டிப்பிழைக்கும் ஆத்மாக்களாகவோ இருக்கத்தான் வேண்டுமா?

ஆக இவ்வாண்டு கட்சி தேர்தலுக்குப்பின், கெஅடிலானில்  இந்தியர்கள் தொடர்ந்து இருப்பார்களா? பறப்பார்களா? என்பதனை முடிவு செய்யக் கூடியதாக மட்டுமின்றி, பாரிசானிடம் ஆட்சியை இழந்த கெடா மாநிலத்தைப் பின்பற்றும் அடுத்த மாநிலமாகச் சிலாங்கூர் இருக்குமா என்பதனையும் முடிவு செய்யக்கூடிய மிக முக்கியக் காலகட்டத்தில் கெஅடிலான் இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியர்களின்  அரசியல் ஞானத்தைக் குறைத்து மதிப்பீடு செய்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும்.

 ம.முரளி

பூச்சோங்