நீங்கள் எப்போதுமே ‘கடைசி சீட்’ தானா? – (கோடிசுவரன்)

sittingசும்மா ஒரு சின்ன ஆராய்ச்சி.

ஒரு கல்யாண நிகழ்வுக்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்?

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்திற்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்?

ம.இ.கா./பி.கே.ஆர்./டி.ஏ.பி. போன்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குப் போனால் எங்கே உட்காருவீர்கள்?

உங்கள் கோவில் மண்டபங்களில் சொற்பழிவுகள் நடைபெறுகின்றது  என்றால் எங்கே உட்காருவீர்கள்?

ஒரு கலை நிகழ்ச்சி என்றால் எப்படி?

இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.

ஒரு சினிமா நடிகர் கலந்து கொள்ளுகின்ற ஒரு நிகழ்ச்சி என்றால் உங்களுக்கு எப்படி வசதி?

உண்மையைச் சொன்னால் சினிமா நடிகர் கலந்து கொள்ளுகின்ற நிகழ்ச்சியைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் நீங்கள் தான் கடைசி ஆளாக அதாவது “பின் சீட்” ஆளாக இருப்பீர்கள்.

அதாவது குறைந்தப்பட்சம் 95 விழுக்காடு நாம் அனைவருமே ’பின் சீட்டுகள்’ தான்!

அந்த 5 விழுக்காடு இருக்கிறானே அவன் தான் நம்மை, இந்த சமூகத்தை. வழி நடுத்துகிறான்!  அவன் யோக்கியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி எந்த ஒரு யோக்கியனையும் நாம் பார்த்ததும் இல்லை!

அப்படி என்ன தான் அவனிடம் நாம் காண்கிறோம்? அவனுக்கு அசட்டுத் துணிச்சல் அதிகம். எப்படியாவது தான் முன்னுக்கு வர வேண்டும் என்னும் மனநிலை அவனிடம் குடிகொண்டுவிட்டது.

அவன் வாய்ப்புக்களைத் தேடுகிறான். மற்றவர்கள் கண்முன்,  தான்  எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். யாரையாவது பிடித்து தனது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்னும் மன அரிப்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

நல்ல ஒரு பெரிய மனிதன் அகப்பட்டுக் கொண்டால் அது போதும் அவனுக்கு. அவனது முன்னேற்றத்துக்காக அந்தப் பெரிய மனிதருக்கு எடுபிடி வேலைசெய்வது, அடிபிடி வேலைசெய்வது என்று ஆரம்பித்து அந்தப் பெரிய மனிதருக்கு ‘தானே தான் எல்லாம்’ என்னும் நிலையை உருவாக்கி விடுகிறான்.

இப்படித்தான் நமது பெரும்பாலான அரசியல்வாதிகள் உருவாகிறார்கள்! தங்களை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இவர்கள் தான் இந்தச் சமூகத்தை வழி நடத்துகிறேன் என்று சொல்லி அக்கு வேறாய் ஆணி வேறாய் நம்மை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம், இந்தக் கடைசி சீட் ஆசாமியான நாம் என்ன செய்கிறோம்? நமது நிலை என்ன?  நமக்கு வேலைகள் அதிகம். நமது குடும்பத்தை மட்டும் தானா நாம் தாங்குகிறோம்? இந்த நாட்டையே நாம் தான் தாங்குகிறோம்! நாம் இல்லாவிட்டால் நமது குடும்பம் நடு வீதீக்கு வந்து விடும். நாடும் நாசமாகிப் போகும்!

இதுவே நமக்குப் பெரிய கவலையை ஏற்படுத்திவிடுகிறது. இந்தக் கவலையைப் போக்குவதற்காகவே நாலு பேரோடு சேர்ந்து கவலையைப் போக்க, கட்டாயத் ‘தண்ணி’ அடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டு விடுகிறது.

நாலு பேரோடு சேர்ந்து தண்ணி அடிக்கும் போது அதில் ஒரு சுவராஸ்யம் உண்டு. நமது கையாலாகத் தனத்தைப் பற்றிப் பேசுவது மிக மிக சுவராஸ்மான ஒரு விஷயம்.

ஒருவன் வெற்றி பெற்றால் அவன் எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்து வெற்றி பெற்றான் என்று அலசி ஆராய்வதில் ஒரு இன்பம் உண்டு. வேலையில் ஒருவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அவன் எப்படியெல்லாம் .கையில் காலில் விழுந்து அந்தப் பதவியைப் பெற்றான் என்று சொல்லி ஆனந்தப்படுவது தான் இந்தப் பின்சீட்டுக்களின் வேலை!

ஒருவன் தொழிலில் வெற்றி பெற்றானா?  அதெப்படி முடியும்? ஒரு வருஷத்திற்கு முன் தானே அவன் சாப்பாட்டுக்கரக ‘லாட்டரி” அடித்துக் கொண்டிருந்தான்! எப்படி அவன் வெற்றி பெற்றான்? இதில் ஏதோ மர்மம் இருக்கு! யாரையெல்லாம் ஏமாற்றினானோ! இவன் எல்லாம் எங்கப்பா நல்லா வரப்போறான்!  பாரு!  இன்னும் கொஞ்சம் நாளுல துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடப்போறான்!

தெரிந்த ஒரு மாணவிக்கு ‘மெற்றிகுலேஷன்’ பயில இடம் கிடைத்திருக்கிறது. நாம் பொதுவாகவே நமது இன மாணவிக்கு இடம் கிடைத்திருக்கிறதே என மகிழ்ச்சி அடைவோம்.

இந்தப்பின் சீட்டுக்கள் பார்க்கும் கோணமே வேறு. சே! இந்தப் பொண்ணுக்கெல்லாம் இடம் கிடைச்சிருக்கு! என்னாப்பா பண்றானுங்க, ம.இ.கா.ரனுங்க! சும்மா சுத்திக்கிட்டு இருந்துச்சு! இதுக்கெல்லாம் இடம் கொடுத்திருக்கானுங்க! நல்லாப் படிக்கிற பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கிறதில்ல! காலம் கெட்டுப்போச்சு! காலம் கலிகாலம்!

ஆமாம்! 2000 ஏக்கர் நிலத்துக்கு நல்லா ஆப்பு வச்சானுங்கடா! அவனுங்களுக்கு இப்பதாண்டா நல்ல நேரம் வந்திருக்கு! தமிழ்ப்பள்ளிக்கூடம்னு சொல்லி அவனவன் ஏமாத்திக்கிட்டு திரியிறான்! அங்கப்போனா வாத்திப்பசங்க எல்லாம் ஏமாத்துறானுங்க! சே! ஒன்னுமே சரியில்ல! பாருடா! இத்தனை வருஷம் சமுதாயம் சமுதாயம்னு கத்திகிட்டு கிடந்தானுங்க! இப்ப பாரு அடிச்சிது ஜாக்போட்! இனிமே இவன்களுக்கு என்னடா கவலை! 2000 ஏக்கரு! தோட்ட முதாலாளி ஆயிட்டானுங்கடா! இது தாண்டா நேரம்னு சொல்லறது!  என்னா மச்சி! சேவை செய்யும்னுனா இப்படித்தான் செய்யுனும்! சும்மா என்னமோ பி.ஜே.கே., பி.எம்.சி.னு பிச்சக்காரத்தனமா இல்லே!

விடுடா மச்சி! எல்லாரும் தான் நம்ம மொட்டை அடிச்சானுங்க! சொட்ட மொட்டன்னு! எல்லாந்தான் பெண்டாட்டி புள்ளையோட நல்லாத்தான் இருக்கானுங்க! இவனுங்களும் அடிச்சிட்டுப் போறானுங்க! என்ன  கெட்டுப்போச்சி? நல்லது செஞ்சவன் எவனும் கொடிக்கட்டிப் பறக்கலே! நாசமாத்தான் போனானுங்க! இவன்களாவது நல்லா இருக்கட்டும்!

டேய்!  இப்ப நேரம் நல்ல நேரம்டா! ஒரு சுடுகாடு இருந்தாப் போதும்! அதுல கூட காசு கொட்டும்டா! நம்ம சுடுகாட்டுக்கு யாரு அந்த பிச்சாண்டி தானே தலைவரு! கொஞ்சம் அவனுக்கு ஆப்பு வைப்பமா! அவன் சும்மா நேர்மை, கீர்மைன்னு பேசுவாண்டா! நிலம்னா வாங்குறதுக்கு ஆள் இருக்கு1 சீனங்க காத்துகிட்டு இருக்கானுங்க!

மச்சி! அதை மறந்திடு! அந்த எம்ஐசி நொள்ளக்கண்ணன் அந்த நிலத்துமேல கண்ணு வைச்சிருக்கான்!

சரிடா! இப்படியே பேசிக்கிட்டே போனா நமக்கு எப்பத்தான் நேரம் வரப்போவுது!

நமக்கு நேரம் கடைசியாத்தான் வரும்! வாருறவன் வாரிட்டுப் போவட்டும்! கடைசி ஆனாலும் நாமதாண்டா சிவாஜிதபோஸ்!

வாசகர்களே இப்போதைக்கு இது போதும்!

ஆமாம். நீங்கள் முன் வரிசையா,  பின்வரிசையா?  இல்லப்பா! இரண்டுமே வேண்டாம்! நமக்கு நடுவரிசையே போதும். அப்படியே இருந்துட்டுப் போறேன் என்கிறீர்களா!

முன், பின், நடு என்பதெல்லாம் பிரச்சனையல்ல. இந்தச் சமுதாயம் கெட்டுப்போகக் கூடாது. பிரித்து பந்தாடப்படக் கூடாது. நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று எல்லாரும் சொல்லுவதால் கூடுமானவரை இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வேலையில் நாம் ஈடபடக்கூடாது. நம்மால் ஒருவன் கெட்டான் என்னும் பெயர் நமக்கு மட்டும் அல்ல நமது பரம்பரைக்கே வரக்கூடாது. அதில் கவனமாய் இருங்கள்.

(கோடிசுவரன்)