சிக்கனம்…..(கோடீசுவரன்)

moneyசிக்கனம்! சிக்கனம்!  சிக்கனம்!

நண்பர்களே! இன்று நாம் இருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் நமது நிலையை உயர்த்திக் காட்டும். பொருள் இல்லையேல் இவ்வுலகம் உங்களை மதிக்காது. நம்மைவிட நோஞ்சானெல்லாம் நம்மைப் போட்டு மிதி மிதி என்று மிதிப்பான். காரணம் அவனிடம் பணம் உண்டு நம்மிடம் இல்லை.

தமிழகத் தொழிலாளியை உணவக முதலாளி உதை உதை என்று உதைத்தானாம். இது போன்ற செய்திகளை நாம் அடிக்கடி பத்திரிக்கைகளில் படிக்கிறோம். பணம் ஒருவனுக்கு அளவற்ற சக்தியைக் கொடுத்து விடுகிறது.

ஆனால் நமக்கு வன்முறை தேவையில்லை. பணத்தை நாம் ஆக்க சக்திக்குத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவு சக்திக்கு அல்ல.

நாம் அனைவருமே பொருளாதாரத்தில் வெற்றி பெற முடியும். நாம் அனைவருமே சம்பாதிக்கத் தான் செய்கிறோம். ஒரு மனிதனால் சம்பாதிக்க முடியும் என்றால் அவனால் பொருளாதாரத்தில் வெற்றி பெறவும் முடியும்.

வேலை செய்கின்ற ஒவ்வொருவரும் தனது சம்பளத்தின் முதல் செலவு என்பது சேமிப்பாகத்தான் இருக்கவேண்டும். தனது சம்பளத்திலிருந்து குறைந்த பட்சம் இருபது விழுக்காட்டுப் பணம் சேமிப்புக்கு ஒதுக்கிய பின்னர்தான் மற்ற செலவுகளுக்கான பட்ஜட் போடப்பட வேண்டும்.  இருபது விழுக்காடு என்பது அனுபவசாலிகளின் அனுபவ உரை. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நல்லவர்கள் நல்லதைச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். 20 விழுக்காட்டை விட இன்னும் அதிகமாக சேமிக்க உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் தாராளமாக செய்யுங்கள். அது உங்கள் சாமர்த்தியம்.

எது எப்படியிருப்பினும் சிக்கனம் இல்லையேல் சிறப்பான வாழ்க்கை வாழ முடியாது. நமது வளமான வாழ்க்கை நமது சிக்கனத்தைப் பொறுத்தது.

அமெரிக்காவின் ஆரம்ப வரலாற்றில் ஜான் டி ராக்பெல்லர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர். பிற்காலத்தில் எண்ணைய் நிறுவனங்களை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தவர். மிகச் சாதாரண நிலையில் வாழ்ந்தவர் அவர்.  தமது இளம் வயதில் சிறுக சிறுக சம்பாத்தித்த பணத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து தனது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர்.  தான் வேலை செய்த நிறுவனத்திலயே பங்குகளை வாங்கி தொழிலில் கொடிக்கட்டிப் பறந்தவர். அவருடைய ஆரம்பம் அந்த சிக்கனம் தான்.

நீங்கள் சிக்கனமாக இருந்தால் வெளியிலிருந்து கேலிப்பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.  நண்பர்கள் பலர் நம்மைப் பலவிதமான பெயர்களில் அழைப்பார்கள். உங்கள் பெயரோடு கஞ்சன் என்னும் அடைமொழியும் சேர்ந்து கொள்ளும். கருமி என்றும் சொல்லுவார்கள். பிசினாறி என்று பிதற்றுவார்கள்.  உலோபி என்று உளறுவார்கள். இவைகளை  எல்லாம் தாண்டித்தான் நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்துச் சம்பாதித்தது. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களைப் பொறுத்தது. சிக்கனம் என்பது உங்களின் வருங்கால வாழ்க்கைக்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பணப் பிரச்சனையில் இருக்கும் போது யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை.

இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாயிருந்தால் நாளை பணம் உங்களை அசட்டைசெய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். ஐந்து காசு பிச்சைக்கரனுக்குப் போட்டால் ஐந்து நாளைக்குத் துங்க மாட்டார். அப்படி ஒரு சிக்கனம். இன்று அவர்கள் பிள்ளைகள் எல்லாம் மருத்துவர், பொறியிளாளர், விரிவுரையாளர் என்று அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். அது நமது சமுதாயத்திற்குப் பெருமைதானே. அவரது பணத்தை அவர் எப்படிப் பயன் படுத்துகிறார் என்பது நமது பிரச்சனை அல்லவே!

ஒரு பெரியவர். தோட்டப்பாட்டாளியாக இருந்தவர். கடும் சிக்கனவாதி. காய்கறிகளெல்லாம் தனது நிலத்திலிருந்து மட்டும். சைவம் மட்டுமே சிக்கனம் கருதி. சீனி என்று ஒரு பொருள் இருப்பதே அவருக்குத் தெரியுமா, தெரியவில்லை! இப்போது வயதாகிவிட்டதால் வேலையில் இல்லை. அவர் வீடு இருக்கும் இடமோ பெரும்புள்ளிகள் வாழ்கின்ற பகுதி. அங்கும் ஒரு காய்கறித் தோட்டம். அவர் தினசரி கடையில் காப்பிக் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அது எப்படி…? அவரிடம் கேட்டேன்.  “அதுவா! பத்திரிக்கையை ஓசியில் படிப்பேன். அங்கு நாலு சீனர்களும் வருவார்கள். எங்கு நிலம் கிடைக்கும். எங்கு மலிவாக நிலம் வாங்கலாம். அவர்களிடம் கேட்டு அலசி ஆராய்வேன். முடிந்தால் வாங்குவேன்; விற்பேன். அதுக்குத்தான்” என்று சொன்னார். அடா! அடா! ஒரு வெள்ளி செலவு செய்தாலும் தனக்கு என்ன கிடைக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் செலவுசெய்கிறார் மனிதர்! அவருடைய பையன்கள் அரசாங்கத்தில் பெரிய வேலையில் உள்ளனர். தமிழர் ஒருவருக்குச் சொந்த வீடு இருந்தால், நிலம் இருந்தால், பிள்ளைகள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் அது இந்த சமுதாயத்திற்குப் பெருமை தானே! அவர் சைவமா, காப்பியில் சீனி போட்டுக் குடிப்பாரா என்பது நமது பிரச்சனை அல்லவே!

நண்பர்களே! சிக்கனம், சிக்கனம், சிக்கனம் என்பதில் உறுதியாய் இருங்கள்.

வியாதியாய் இருக்கும் போது “பணம் இல்லையே” என்று பத்திரிக்கைகளில் அறிக்கை விடாதீர்கள். பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை. அரசியல்வாதிகளிடம் போனால் ஏமாற்றம் தான்  மிஞ்சும். அவர்களுக்கு வேண்டியது முதலில் விளம்பரம். அந்த விளம்பரம் கிடைத்துவிட்டால் பணத்திற்காக நாம் தான் பம்பரமாக அவர்களைச் சுற்ற வேண்டும்!

மருத்துவம் படிக்கும் பிள்ளைகள், கல்வியை முடிக்க இன்னும் ஒரே ஆண்டு. படிக்க பணம் பற்றாக்குறை. என்ன செய்வது? உதவக்கூடியவர்கள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். குடும்பத்தினர் அல்லாடுகின்றனர். ஓரே ஆண்டுதான். ஆனால் முடியவில்லையே! ஒரு சில லட்சங்கள் வீணடிக்கப்பட்டு விட்டன.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம் தான் நமக்கு உதவி செய்யும். வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது.

இது சுயநலமான உலகம். மற்றவர் படும் துன்பத்தைப் பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் உலகம். நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருக்காதீர்கள்.

மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். சிக்கனமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். சிக்கனம்! சிக்கனம்! சிக்கனம்!

(கோடீசுவரன்)