காகிதம் செய்வோம்! கப்பலும் செய்வோம்! -கோடிசுவரன்

Copy_Paperஆம் நண்பர்களே!  காகிதம் செய்வோம். கப்பலும் செய்வோம். கப்பலையும் ஓட்டுவோம். கடலையும் அளப்போம். கருவாடும் விற்போம். காய்கறிகளும் விற்போம். கடைகளும் வைப்போம். கட்டடங்களையும் கட்டுவோம். கல்லறைப்பெட்டிகளும் செய்வோம். கண்டாங்கி சேலைகளும் நெய்வோம்! பசார்மாலாமிலும் கடைகள் வைப்போம்; பேரங்காடிகளிலும் கடிகாரங்கள் விற்போம். எந்த இடமானால் என்ன. கடை வைப்பவனுக்கு கல்லறைகளும் காசுகள் கொட்டும் இடங்கள் தாம்!

நமது தமிழ் இனத்திற்கு எல்லாத் தொழில்களும் தேவையே. ஐந்து காசு வியாபாரத்திலிருந்து ஐனூறு கோடி வெள்ளி வியாபாரம் வரை நாம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.

ஓர் ஆனந்தகிருஷ்ணன் போதாது. ஆயிரம் ஆனந்தகிருஷ்ணன்கள் இந்த சமுதாயத்திற்குத் தேவை. ஒரு டோனி பெர்னாண்டஸ் அல்ல ஓராயிரம் டோனீக்கள் நமக்குத் தேவை.

இடியாப்பம் விற்பவர் விற்கட்டும். இத்தாலி நாட்டின் பிஸா விற்பவரும் விற்கட்டும். இதுவும் தேவை.  அதுவும் தேவை.

பத்துக் காசு மிட்டாயுக்கும் சீனரிடம் தான் போகிறோம். பத்து லட்சம் புத்தம் புது கார் வாங்குவதற்கும் சீனரிடம் தான் போகிறோம். அந்த அளவுக்கு சீனர்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆனாலும் இவ்வளவு போட்டியிலும் நாமும் வியாபாரத்தில் அழுத்தமாக கால் பதித்துக் கொண்டிருக்கிறோம். இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. பள்ளி பஸ்கள், சிறு லாரிகளில் வியாபாரம் செய்வது, சுற்றப்பயணப் பேருந்துகள், பகல் உணவு விற்பது போன்றவைகள் எல்லாம் நமது துணிச்சலின் வெளிப்பாடுகள்!

ஒரு சில தொழில்களில் நமக்குப் போட்டிகள் குறைவு. புதிய கட்டடங்கள் கட்டுவதற்குப் பழைய கட்டடங்களை உடைக்கிறார்களே அது மிகவும் அபாயகரமான ஒரு தொழில். அதிலும் நாம் முன்ணணியில் நிற்கிறோம்.

பொருளாதாரச் சிக்கல்களினால் பெருந்தொழில்களில் நம்மால் மற்றவர்களோடு ஈடுகொடுக்க முடியவில்லை. அரசாங்கம் கடன் உதவி செய்யத் தயாராக இருந்தாலும் இடைத் தரகர்களால் அந்த உதவியும் கையைவிட்டுப் போய் விடுகிறது.  வங்கிகள் நம்மைக் கேள்விகள் கேட்டே விரட்டிவிடுகின்றன. வங்கிகள் நம்மை மதிக்க வேண்டுமென்றால் நமது தினசரி பண வரவுகள்  ஆயிரக்கணக்கில் இருக்கவேண்டும். கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்க முடியுமா என்பது தான் அவர்களது பிரச்சனை. கிடைத்த பணத்தை எப்படிக் கொடுக்காமல் இருப்பது என்று தான் நம்மில் பலர் நினைக்கின்றனர்!

வியாபாரத்தில் உண்மை உள்ளவர்கள் கிடைக்கின்ற பணத்தை எப்படிச் செலவழிப்பது, எப்படிக் குறிப்பிட்ட நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுப்பது போன்ற  எண்ணங்கள்  தான் அவர்களிடையே மேலோங்கி நிற்கும்.

சீனர்கள் இன்று தொழிற்துறைகளில் சுனாமி  வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் வங்கியில் வாங்கியக் கடனை திருப்பிக் கட்டும் அந்த நேர்மை தான்.  அவர்களுக்குத் தொழில் என்பது உயிர்போகின்ற விஷயம். நாமோ தொழில் என்றால் ஏதொ பொழுது போக்கு என்னும் எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. தொழிலில் தோல்வி என்றால் எங்கேயாவது போய் வேலை செய்வோம் என்கின்ற எண்ணத்தோடு தான் நாம் ஒரு வியாபாராத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். “இங்க முடியலைன்னா அங்க” என்று நினைப்பதால் தான் நாம் வெற்றி முடியாததற்குக் காரணம்.

தொழில் செய்ய வருபவர்களுக்கு ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும். இது தான் எனது வருங்காலம். இது தான் எனது பிள்ளைகளுக்கும் வருங்காலம். நான் ஆரம்பிக்கின்ற இந்தத் தொழில் எனக்கும் மட்டும் அல்ல எனது பரம்பரைக்கும் இது தான் வருங்காலத் தொழில் என்னும் மன உறுதி இருக்கவேண்டும். தொழில் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இன்று நீங்கள் விதைக்கின்ற விதை காலங்காலமாக தொடர வேண்டும். பசார் மாலாமில் பானைகள் விற்றாலும் ஒரு “பல்லவ சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறேன்” என்று மனதில் ஓர் உறுதியை உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.

தொழிலில் நவீனத்துவம் இல்லாததும், எதிர்நோக்கு இல்லாததும் நமது குறைபாடுகள். பூ வியாபாரம் என்பது நாம் பரம்பரையாகச் செய்கின்ற ஒரு தொழில்.  அதன் அடுத்தக் கட்டம் பற்றி நாம் யோசிப்பதில்லை.  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்னும் நினைவே நம்மிடம் இல்லை. கச்சாங்புத்தே வியபாரம் என்பது சிலரின் குலத்தொழிலாகவே வேரூன்றிவிட்டது. ஆனால் இந்தக் கொரிக்கும் கச்சானுக்கு வெளி நாடுகளில் ஏகப்பட்ட கிராக்கி என்பதை நம்மால் ஆய்ந்து அறிய முடியவில்லை. அதனை நம்மிடம் வாங்கி சீனன் ஏற்றுமதி செய்கிறான்

முடிவெட்டும் தொழிலில் கூட நம்மால் நவீனத்துவத்தைக் கொண்டுவர முடியவில்லை. எனக்குத் தெரிந்த சீன நண்பன் ஒருவன் அத்தொழிலையே மாற்றிவிட்டான். அவனிடம் போவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். அதிகக் கட்டணம். ஆனாலும் ஆள்களுக்குக் குறைச்சல் இல்லை.கால்பந்து விளையாடுபவர்கள் அவனிடம் தான் செல்வர். உலகில் உள்ள அத்தனை கால்பந்து வீரர்களைப் பற்றியும் அவனுக்கு அத்துப்படி. அவர்களைப்பற்றி அவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஒரு மடிக்கணினியை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரைப் பற்றியும் சொற்பொழிவு செய்து கொண்டிருப்பான்.

எந்தத் தொழில் செய்தாலும் அடுத்தக் கட்டம் என்ன என்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் நம்மிடம் உள்ள தனித்துவத்தையும் வெளிக்கொணர வேண்டும்..

முடித்திருத்தகமா? அதன் அடுத்த கட்டம் என்ன? இன்னும் எத்தனை கிளைகள் திறக்கலாம். அல்லது அங்கு பயன் படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளை எப்படி ஏற்றுமதி செய்யலாம்..  அல்லது எப்படி இறக்குமதி செய்து கடைகளுக்கு விநியோகிக்கலாம். அல்லது எப்படி நாமே தயாரிக்கலாம். இப்படித்தான் நமது எண்ண ஓட்டங்கள் இருக்க வேண்டும். ஒரே தொழிலை ஒரே மாதிரியாக காலங்காலமாக செய்து கொண்டு வந்தால் நமது மூளைச் செயலற்றுப் போகும்.

இந்தியாவின் அம்பானி நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயர். அவர் ஆரம்பித்த தொழில் துணி வியாபாரம். அப்படியே அவர் நின்று விடவில்லை. அதன் அடுத்த கட்டம் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தார்.  அதன் மூலம் என்ன, அதன் ஆரம்பம் என்னா, எங்கிருந்து வருகிறது, எங்கிருந்து போகிறது என்று இப்படி எல்லாம் அலசி ஆராய்ந்து படிப்படியாக அதன் கடைசி கட்டத்திற்கு வந்த போது  அங்கு ஒரு வர்த்தக சாம்ராஜ்யமே உருவாகிவிட்டது! .”எனது தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நான் ஆயிரம் சலாம் போடத் தயார்” என்பதே அவரது கொள்கை.

.இது போட்டிகள்  நிறைந்த உலகம். நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்கள் தொழிலில் புதுமைகளைக் கொண்டு வர வேண்டும். உங்களின் தனித்துவத்தைக் காட்ட வேண்டும்.

நமக்குத் தொழில் என்பது காலத்தின்  கட்டாயம். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தில் ஒருவராவது தொழில் செய்ய முன் வர வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் தொழிலின் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

கையில் பணம் இல்லையே என்று சொல்லுபவர்கள்  நாட்டில் பல நேரடித் தொழில்கள் இருக்கின்றன.  உஙளுக்குத் தோதான தொழிலைத் தேர்ந்து எடுத்து அதில் ஈடுபட வேண்டும்.   இன்று இலட்சக்கணக்கான்  குடும்பஙகள் இந்தத் தொழில்கள் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர்.

வர்த்தகம் செய்ய வந்த நாம் பிற்காலத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு சமூகமாக மாறிவிட்டோம். இப்போது நாம் நமது பழைய நிலைமைக்கு மாற  வேண்டும்.

எந்தத் தொழிலானால் என்ன அனைத்துத் தொழிலும் செய்வோம். தொழிலில் கேவலம் என்று ஒன்றும் இல்லை. குப்பையிலும் பணம் பார்ப்போம். குண்டூசியிலும் பணம் பார்ப்போம். கோமேதகத்திலும் பணம்  பார்ப்போம்! வாழ்க! வளர்க! தலை நிமிர்க!

-கோடிசுவரன்