ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யின் சூப்பர் ஸ்டார் 2014

உள்நாட்டு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் உள்நாட்டு  மக்களே பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக உள்நாட்டுத் திரைப்படங்கள் நம்பிக்கை விதைகளைத் தூவிக் கொண்டிருக்கும் நிலையில் சில உள்நாட்டு தயாரிப்பு நிகழ்ச்சிகள் அதே நம்பிக்கையைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் 2014 – விண்மீன் HD-யில் கடந்த மூன்று வார காலமான ஒளிபரப்பட்டுவரும் பாடல் போட்டி நிகழ்ச்சி.

10799721_10203245900245243_1856861139_nமலேசியாவின் பிரபலமான கலைஞர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் இவ்வாண்டின் சூப்பர் ஸ்டார் 2014 எந்தவொரு முறையான பயிற்சியுமின்றி போட்டியாளர்கள் ஏனோ தானோ போக்கில் தங்கள் பாடல்களைப் பாடுவதாக நமக்குத் தெரிகிறது.

சிறந்த படைப்பை வழங்க வேண்டும் எந்தவொரு பொறுப்புணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை. தங்கள் பாடல் திறமையின மேல் அதீத நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால், அவர்களின் நம்பிக்கையை அவர்களின் படைப்புகள் பிரதிபலிக்கவில்லை. இந்நிகழ்ச்சியின் நீதிபதிகளில் ஒருவரான எல்.ஆர். ஈஸ்வரி எந்தப் பாடகரின் படைப்பின் மீதும் நம்பிக்கையான விமர்சனத்தை இதுவரை முன்வைக்கவில்லை.

இதைத் தவிர, பங்கேற்பாளர்கள் தங்கள் குரலுக்கேற்ற பாடல்களைத் தேர்வு செய்வது நல்லது. பாடல் வரிகளைப் பாடுவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். சொற்பிழைகள். ல,ள,ழ–கரப் பிழைகள். கேட்கவே சகிக்க முடியாத ஒரு நிலையிலேயே பெரும்பாலான படைப்புகள் கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இது குறித்தெல்லாம் கவனத்தில் கொண்டாரா என்றுதான் தெரியவில்லை.

நாங்கள் எதையாவது ஒளிபரப்புவோம்! நீங்கள் பார்த்தால் பாருங்கள் இல்லையென்றால் வேறு எதையாவது பாருங்கள் என்ற போக்கில்தான் இந்த போட்டி நடத்தப்படுவதாக எனக்குத் தெரிகிறது. இப்படியான தரமில்லாத நிகழ்ச்சிகளை கண்டிப்பாக மக்கள் பார்க்க மாட்டார்கள். பிறகு இவர்களாகவே உள்நாட்டு நிகழ்ச்சிகளை யாருமே பார்ப்பதில்லை என அறிக்கை விட்டு அதற்கான தயாரிப்பு வேலைகளைள நிறுத்தி விடுவார்கள். இது தானே காலங் காலமாக நடந்து வருகிறது.

புதிதாக தேர்வு செய்து பாட வரும் பாடகர்கள் கூட இங்கும் கூடுதல் பொறுப்புணர்ச்சியோடும் சிறப்பாகவும் தங்கள் படைப்புகளை முன்வைத்துள்ளதை இதற்கு முந்தைய ஆண்டுகளின் நிகழ்வுகளில் நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் சில நல்ல புதிய பாடகர்களை அடையாளம் காண முடிந்தது. இதே நிலையைத் தான் யுத்த மேடை – All Star 2014 போட்டியிலும் காண முடிந்தது. ஏன் புதிய பங்கேற்பாளர்கள் யாரும் இல்லையா? புதியவர்களை அடையாளம் காண்பதற்குத் தானே இப்படியான போட்டி நிகழ்வுகள்? பல ஆண்டுகளாக பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதற்குப் போட்டி நிகழ்வுகள் என்றுதான் எங்களுக்குத் தெரிவில்லை. இந்நிலை தொடருமா அல்லது அடுத்தாண்டு ஏதாவது மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலக்கியா