சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
-http://www.itstamil.com
பாரதியாரைப் பற்றிய கட்டுரை பதிவிட்டதற்கு நன்றி ஆசிரியர் அவர்களே. இதை நினைவு படுத்திய தமிழர் எழுச்சிப்பறைக்கும் நன்றி. மீண்டும் வருவேன்.
நன்றி செம்பருத்தி ..
சிவதொண்டன் ஐயன் தேனீக்கும் நன்றி .தங்கள் கருத்துக்கள் அருமை .அதிகமான தமிழர்கள் தங்கள் கருத்தை விரும்பி படிக்கிறார்கள் …தங்களிடமிருந்து சைவ சமயம் பற்றிய தகவல்களை பலர் ஆர்வமாக பார்கிறார்கள் .அதில் நானும் ஒருவன் .. எனது கருத்துக்கள் தங்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. தங்கள் சமுதாயா பணி தொடர என் வாழ்த்துக்கள் 🙂
இல்லாத திராவிடத்துக்கேதிராக தமிழர்களின் செவிப்பறையில் பறைஓசை ஒலிக்கும்..
நன்றி தமிழர் எழுச்சிப்பறை. கருத்துப் போராட்டங்கள் என்பது வேறு. நட்பு என்பது வேறு. நான் அனைவருக்கும் நண்பன். நாம் தமிழர் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் செய்த பெரிய தவறு ஆரிய வேதங்களின் மாயையில் மூழ்கி இருந்தது. அதன் நெறிகளில் நம்மை மூழ்க வைத்தவர் வைதீகச் சைவர்கள். அவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்குத் தகுந்தபடி வேத முறைப்படியான தீ வழிபாட்டினை மேற்கொண்டு இறை நெறியில் நின்ற வைதீகர்களிடம் சமரசம் செய்து கொண்டு, தமிழரின் வாழ்வியல் நெறிகளையும், இறை நெறிகளையும் புறம் தள்ளியது. இதனால்தான் இலட்சோப லட்ச தமிழர்கள் பிற மதங்களுக்கு மாறிச் சென்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், தமிழர் கொண்ட சுத்த சைவத்தின் வழி அவர்தம் அறிவார்ந்த இறை நெறியினையும், வாழ்வியல் நெறியினையும் தமிழர்களுக்கு அறிவூட்டுவது எமது கடமை என்று இதர சைவ சமயியிகளுடன் சேர்ந்து பணியாற்றுகின்றேன். தமிழும், தமிழரும் சைவமும் என்றும் ஒன்றிணைத்தே வளர்ந்தது. வாழ்ந்து வருகின்றது. அவ்வாறே நீடித்து நிற்கும்.
பாரதியின் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு எமது ஆறாம் படிவத்தில்தான் கிடைத்தது. பாதியாரின் கவிதைகள் முழுவதும் அடங்கிய மலிவு விலை புத்தகம் ஒன்றை அப்பொழுதே வாங்கி வைத்திருந்தேன். எங்கள் தமிழ் இலக்கிய பாடத்திற்கு ஆசிரியராக வந்தவர் தவத்திரு தமிழ்குயில் க.கலியபெருமாள் அவர்கள். அந்த ஆண்டு எங்களுடைய பாட நூல் பாரதியாரின் “குயில் பாட்டு”. பாடம் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏதோ ஒரு காரணத்திற்க்காக பாரதியாரின் பாரத தேசப்பற்றைப் பற்றிய பேச்சு வந்து கீழ்காணும் கவிதையைப் பற்றி (பின்னர் சினிமா பாடலாகிய) உரையாடிக் கொண்டிருந்தோம்:
“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்”
வகுப்பிலும் முந்திரிக்கொட்டையாக இருந்த எனக்கு அப்பவே தமிழ் குயிலாரிடம் இப்பாடலில் எழுந்த சந்தேகத்தை எழுப்பினேன். தமிழ் கவிஞராக இருந்து “சுந்தரத் தமிழினில் பாட்டிசைத்து” என்று எழுதாமல் “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்று ஏன் எழுதினார் என்று கேட்டேன். “அவ்வாறு கவிதை எழுதியதே தமிழில்தான். தமிழ், சுந்தரத் தெலுங்கினை விட தேன் சுவையானது என்பது இதிலிருந்து உனக்குப் புரியவில்லையா” என்று கேட்டுத் திருப்பிக் கொட்டினார். பாரதியாரை நினைக்கும் இதே நேரத்தில் எமது ஆசிரியர் ஒருவரையும் திரும்பிப் பார்க்க வழி வகுத்த செம்பருத்திக்கு நன்றி.
https://www.youtube.com/watch?v=AKLzxSGhVyw
பாரதியார் மிகவும் மதித்து போற்றப்பட வேண்டியவர்– ஆனால் அன்றைய தமிழ் உலகம் அவரை கைவிட்டு விட்டது. எல்லாம் எட்டப்பன் செயல்.
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்