இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்ய மலேசியாவில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக கருதப்படும் அனுமதிகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரும் குறிப்பாணை ஒன்று இன்று கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டது.
இந்த அனுமதிகள் கல்வி அமைச்சின் பொறுப்புக்கு அப்பாற்பட்டுள்ளதாகவும் அவற்றை இரத்து செய்யத் தவறினால் அது தனது கடமையில் இருந்து தவறுவதாகவும், பின்விளைவுகளுக்கு கல்வி அமைச்சுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் 17 பக்கங்கள் கொண்ட அந்த குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை மணி 11.30 அளவில் புத்ராஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் அலுவலத்தில் இந்த குறிப்பாணையைக் கல்வி அமைச்சரின் மூத்த செயலாளர் டத்தோ இரம்லி அப்துல் முத்தலிப் பெற்றுக்கொண்டதாக இந்த நிகழ்ச்சிக்குத் தலையேற்ற வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கூறினார். இவருடன் 131 இயக்கங்களின் ஆதரவுக்கு செயலாற்றிய குழுவினரின் பிரதிநிதிகளான இலா. சேகரன், தியாகு லோகநாதன், தமிழ்வாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இக்கோரிக்கையில் ஏன் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமல்படுத்தக்கூடாது மற்றும் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள 47 தமிழ்ப்பள்ளிகளில் அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரப்பூர்வமான காரணங்களை சுமார் 45 நிமிடங்களுக்கு நடைபெற்ற அச்சந்திப்பில் கா.ஆறுமுகம் விவரித்தார்.
“ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை, ஆனால், அதை அறிவியல் மற்றும் கணிதம் வழி போதிக்க விரும்புவது வீட்டில் தமிழ் மொழி பேசும் குழந்தைகளுக்கு உகந்ததல்ல என்றோம்.”
2002 இல் பிபிஎஸ்எம்ஐ (PPSMI) என்ற கொள்கை அமலாக்கம் கண்டு பத்து வருடங்களுக்கு பிறகு மீட்டுக்கொள்ளப்பட்டது. அதன் தாக்கம் கீழ்மட்ட மக்களின் குழந்தைகளை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்புகளின் சாரத்தை முன்வைத்துள்ள ஆய்வுகளின் தகவல்களையும் அந்தக் குறிப்பாணை கொண்டுள்ளது.
அதே வேளையில் பிபிஎஸ்எம்ஐ திட்டம் வெற்றி பெற்றதாக எந்த ஆய்வும் இல்லை.
தேசியப்பள்ளிகளில் இந்த இருமொழித் திட்ட அமலாக்கத்திற்கு சில அடிப்படை அடைவுகளை கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது. அவற்றை பூர்த்தி செய்யும் பள்ளிகள் மட்டுமே இதில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், இந்த அடிப்படை அடைவுநிலைகளை எட்டாத நிலையில் உள்ள 47 தமிழ்ப்பள்ளிகள் இதில் பங்கு பெற்றுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு எந்த அடிப்படையில் இந்த அனுமதியை வழங்கியது என்பதை ஆய்வு செய்யக் கோரப்பட்டுள்ளது.
அதோடு, இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு உகந்தது அல்ல. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90 விழுக்காட்டிற்கு அதிகமானோர் வீட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துபவர்கள். இந்த திட்டத்தால் இந்த மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின் திறன்கள் பாதிப்படையும். அப்படிப்பட்ட நிலை உருவாகும் போது அதற்கான பொறுப்பை முழு அதிகாரம் கொண்ட அமைச்சுதான் ஏற்க வேண்டும்.
வெறுமனே ஆங்கிலமொழி மோகத்தில் ஆர்வம் கொண்டு குழந்தைகளின் மொழியாற்றலுக்கு அப்பாற்பட்ட வகையில், புரிந்துணர்வு தேவைப்படும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை, புரியாத ஆங்கிலமொழி வழி போதிக்க முற்படுவது குழந்தைகளின் திறன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே அமையும்.
குறிப்பாணையின் தகவல்கள் விவரிக்கப்பட்டபின், இது சார்பாக கல்வி அமைச்சுடன் இன்னொரு சந்திப்பை துணை தலைமை இயக்குனர் காயீர் முகமாட் யுசோப் அவர்களுடன் விரைவில் நடத்த ஏற்பாடு செய்வதாக இரம்லி தெரிவித்ததாக ஆறுமுகம் கூறினார்.