இன்னும் 20 வருடங்களில் புற்றுநோய் (Cancer) மற்றும் மரபியல் நோய்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் எட்ஷே வெஸ்ட்ரா என்பவர் தெரிவித்துள்ளார். இவரது கூற்றின் படி மனித இனம் தற்போது சுகாதாரத்துக்கான பொற் காலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களில் விருத்தியான மருத்துவத் தொழிநுட்பங்கள் பல நோய்களுக்குத் தீர்வைக் கண்டு பிடித்திருப்பதாகவும் இந்த மரபியல் தொழிநுட்பங்கள் மேலும் விருத்தியாகும் போதே குறித்த பொற்காலம் ஏற்படவுள்ளது என்றும் டாக்டர் எட்ஷே வெஸ்ட்ரா தெரிவித்துள்ளார். இதில் வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் (cut and paste) தொழிநுட்பத்தின் அடிப்படையிலான CRISPR என்ற மரபணு மாற்ற (Gene editing) தொழிநுட்பம் மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது என்றும் டாக்டர் வெஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புற்று நோயை எடுத்துக் கொண்டால் குறித்த தொழிநுட்பம் மூலம் புற்று நோயால் பாதிக்கப் பட்ட கலங்களுக்குள் mutation எனப்படும் பாதிப்பைக் குணப்படுத்த ஒரு கத்தரி போன்று தொழிற்படும் என்ஷைம் (enzyme) இனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் உள்ள டி என் ஏ (DNA) இனை வெட்டி அகற்றுவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் எனப்படுகின்றது. இந்த மரபியல் சிகிச்சை மூலம் புற்றுநோய் மட்டுமல்லாது பார்வை இழந்தவர்களுக்குப் பார்வையை அளித்தல் மற்றும் ஏனைய மரபியல் வியாதிகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்த முடியும் எனப்படுகின்றது.
CRISPR-Cas9 என்ற இந்த முறையானது DNA களில் திருத்தம் செய்யக் கூடிய ஒரு முறை என்பதுடன் பக்டீரியாக்களில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த மரபியல் மாற்ற சிகிச்சை சரியான திசைகளில் செலுத்தப் பட்டு ஒரு மனிதனின் விந்து அல்லது முட்டையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிக சிந்தனைத் திறன் மற்றும் விளையாட்டுத் திறன் உடைய குழந்தைகளை உருவாக்க முடியும் என்ற போதும் தவறாகப் பிரயோகிக்கப் படின் ஒரு இனத்துக்கு அழிவையே விளைவிக்க முடியும் என்பதால் இது அணுசக்தி போன்று கவனத்துடன் கையாளப் பட வேண்டிய ஒன்று என்றும் கருத்து நிலவுகின்றது.
நன்றி : தகவல் Mail Online
வீடியோ இணைப்பைக் காண : http://www.dailymail.co.uk/sciencetech/article-4231342/Cancer-inherited-disease-vanish-20-years.html
– 4தமிழ்மீடியாவுக்காக நவன்