ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தால், ஒட்டுமொத்த உடலும் சோர்ந்துவிடும். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். இங்கு இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் விதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த விதைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.
ஆளி விதைகள்
தினமும் 1-2 டீஸ்பூன் ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஆளி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம். இவை இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவது நல்லது. இதனால் அதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் குறைவான அளவிலான கொலஸ்ட்ரால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் பூசணி விதைகள் இதய துடிப்பு மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் ஒலியிக் அமிலம் உள்ளது. இது நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, உடலில் கொழுப்புக்களின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
வெந்தயம்
வெந்தயம் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்திற்கு மிகவும் நல்லது.
சியா விதைகள்
ஒரு டம்ளர் நீரில் சிறிது சியா விதைகளைப் போட்டு ஊற வைத்து, கோடையில் குடித்து வந்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது.