தமிழுக்கு மரியாதை! அழியும் நிலையில் உள்ள 25 மொழிகளில் தமிழ் 8ம் இடத்தில்…..

world-tamils-07சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.

இந்த மாநாட்டை உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று கூறுவதைவிட அயலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்றுதான் உண்மையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழக எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் அதிகம் பங்கு பெறாமல் போனது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

தமிழ் மாநாடு என்கிற தனிநாயகம் அடிகளின் சிந்தனை, உலகளாவிய அளவில் தமிழறிஞர்களை ஒருங்கிணைக்க உதவியது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966ல் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாடும், சென்னையில் 1968ல் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாடும், தமிழையும் தமிழினத்தையும் உலகமே வியந்து பார்க்க வைத்தன.

கோவையில் 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஆய்வுகளிலும், உலகளாவிய தமிழ் அறிஞர்கள் கூடித் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

உலகத் தமிழ் மாநாட்டை விரைவிலேயே நடத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிகிறது.

அந்த மாநாடு நடக்கப்போவது அமெரிக்காவிலா இல்லை தென்னாபிரிக்காவிலா என்பது முடிவாகாத நிலையில், சிறிய அளவில் நடத்தப்பட்டாலும்கூட, சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகமெலாம் பிரிந்து கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மாநாடு சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தது. மாநாட்டில் பேசியவர்கள் தமிழ் குறித்து, குறிப்பாக, அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

தாய்த் தமிழகத்திலேயே தமிழ் மிகப்பெரிய பின்னடைவை எதிர்கொள்ளும் நிலையில், அயலகத் தமிழர்கள் தங்கள் தாய் மொழியையும், தமிழின் பண்பாட்டுக் கூறுகளையும் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதும் எந்த அளவு கடினம் என்பதை நாம் உணர வேண்டும்.

பல நாடுகளில், தமிழ் வம்சாவளியினர் தமிழை எழுதவும், பேசவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கெல்லாம், தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன.

அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலும், ஆதரவும் தாய்த் தமிழகத்திலிருந்து தரப்படவில்லை என்பது மிகப்பெரிய குறை.

பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சைஸ், இந்தி பிரசார் சபா போன்று மொழியைப் பரப்பவும், கற்றுக் கொடுக்கவும், ஏனைய மொழிகளில் அமைப்புகள் இருப்பதுபோல, தமிழுக்கு அமைப்பு எதுவும் இல்லை.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சில முயற்சிகளை மேற்கொள்கின்றன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இல்லை.

ஆனாலும்கூட, உலகளாவிய அளவில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் கற்றுக் கொடுக்கவும் நாம் எந்தவொரு முறையான அமைப்பையும் இன்னும் ஏற்படுத்தாமல் இருக்கிறோம்.

இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தீர்மானத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான கோரிக்கைகளில், அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் தாய்த் தமிழ் ஊடகங்களில் வாய்ப்பளிப்பது, அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும், தமிழக நூலகங்களில் இடம்பெறச் செய்வது, அயலகத் தமிழ் எழுத்தாளர்களையும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவிப்பது ஆகியன மிகவும் முக்கியமானவை.

மாநாடு முடிந்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது செய்திருக்கும் சில அறிவிப்புகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்களைச் செய்து வருவதைப் போலவே, தமிழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய செயல்பாடு.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் தமிழ் கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் காத்திருப்பதாகத் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது.

வெளிநாடு வாழ் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்வதற்கு உதவியாகத் தமிழில் பாடப்புத்தகங்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பது, இங்கிருந்து தமிழாசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இணையதளம் வாயிலாகத் தமிழ் கற்றுத்தருவது உள்ளிட்ட தமிழக அரசின் முனைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலகில் எங்கெல்லாம் தமிழ் நூலகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் புத்தகங்கள் நன்கொடையாக வழங்குவது என்கிற முடிவும், பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்களை நன்கொடையாகப் பெற்று யாழ்ப்பாணம், மலேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள நூலகத்திற்கு அனுப்புவது என்கிற முடிவும் வரவேற்புக்குரியவை.

அதேபோல, அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் விருது கொடுத்து கெளரவிப்பதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

உலக அளவில் அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக ‘யுனெஸ்கோ’ அமைப்பு எச்சரித்திருக்கும் நிலையில், நாம் முனைப்புடன் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

தமிழக அரசு இதை உணர்ந்திருக்கிறது என்பதைத்தான் அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

-tamilwin.com