வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசம், பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியும் அலாதியானது.
பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுவது. மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் செய்யும் துளசியின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!.
மனிதனின் இன்றியமையாத கடமைகளாக, பெற்ற தாய், தந்தையரை காத்து வருவதும், துளசியை நலமுடன் வளர்த்து வருவதுமே, என்று பண்டைய சாத்திரங்கள் கூறுகின்றன.
துளசியில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக வீடுகளில், கோவில்களில் காணப்படும் துளசியின் பலன்களைப் பார்ப்போம்.
சிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது.
மனச்சோர்வு நீங்கி, எண்ணங்கள் சீராகி, மன நலம் சிறந்து விளங்க, தினமும் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம்.
காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் நீங்க, துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு, ஆவி பிடித்துவர, அவை எல்லாம் விரைவில் நீங்கும்.
துளசி டீ:
துளசி இலைகள், சுக்கு அல்லது திரிகடுகம், கருப்பட்டியுடன் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து தேநீர் போல அருந்திவர, புத்துணர்ச்சி அடையலாம்.
அலர்ஜியினால் உண்டாகும் தும்மல் மற்றும் மூக்கடைப்பு பாதிப்புகள் சரியாக, துளசி இலைகளை சாறாக்கி, அத்துடன் இஞ்சிச்சாறு மற்றும் சிறிதளவு மிளகை சேர்த்து தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட, பாதிப்புகள் விலகிவிடும்.
துளசியின் இலைகளை நிழலில் உலர்த்தி, அதைப்பொடியாக்கி, கொதிக்கும் நீரில் கலந்தோ அல்லது அந்தப்பொடியை தேனிலோ கலந்து சாப்பிட, கிருமிநாசினியாக செயல்பட்டு, இருமல், நெஞ்சில் உள்ள சளியைப் போக்கி, உடலில் உள்ள கெட்ட தன்மையுள்ளவற்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது.
உடல் சூட்டினால் ஏற்படும் சிறு கொப்புளங்கள் போன்ற கட்டிகள் மறைய, துளசி இலைகளை அரைத்து அவற்றில் பூசிவர, கட்டிகள் மறையும். சரும வியாதிகளைப் போக்கும்.
தாய்ப்பால் சுரக்கும்:
பசி இல்லாத தன்மையைப் போக்க, அவித்த துளசி இலைகளை சாறெடுத்து இருவேளை பருகிவர, கபகபவெனப் பசி எடுக்கும். துளசி இலைச்சாறு தொண்டைப்புண்களை ஆற்றும், பிரசவித்த பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
துளசி இலைச்சாறை தினமும் சாப்பிட்டுவர, உடலை வலுவாக்கி, ஞாபக சக்தியைத் தூண்டும் மேலும் உடல் உள் உறுப்புகளைக் காக்கும்.
துளசி இலைகளை குடிநீரில் ஊறவைத்து, அதை தினமும் அடிக்கடி பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் அணுகாது வாழலாம்.
துளசி இலைகளை முன் தினம் இரவில், நாம் குளிக்கும் நீரில் இட்டுவைத்து, அந்த நீரில் மறுநாள் குளிக்கும்போது, உடலின் வியர்வை நாற்றம் நீங்கி, உடலில் புத்துணர்வுடன் நறுமணம் கமழும்.
ஆண்மை பெருகும் :
துளசி இலைச்சாறை அடிபட்ட காயங்களுக்கு தடவி வர, காயங்கள் ஆறும், துளசி இலைச்சாற்றுடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து, வலியுள்ள பல்லில் வைக்க, பல் வலி தீரும். தலை முடி சுத்தமாக, பேன் பொடுகு தொல்லை நீங்க, துளசி இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து நீராடிவர, பேன் பொடுகு போன்றவை நீங்கி, தலை முடி வளமாகும்.
துளசி இலைகளை கொத்தாக வீடுகளில் ஆங்காங்கே வைக்க, வீட்டில் கொசுத்தொல்லைகள் நீங்கும். துளசியைப் போலவே பலன் தரும் துளசி வேரை காயவைத்து பொடியாக்கி பசு நெய்யோடு குழைத்து உட்கொண்டுவர, உயிரணுக்களின் ஆற்றல் கூடும்.