ஞாயிறு நக்கீரன், செப்டெம்பர் 13, 2017. நேதாஜியின் வழிகாட்டி அஞ்சாநெஞ்சன் செண்பகராமன். உலக வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தில் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஒரு தமிழர் அடியோடு மறக்கப்பட்டு விட்டார். அவர்தான் ‘ ஜெய்ஹிந்த்’ செண்பகராமன்.
‘சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்’ என்று ஒன்றுபட்ட ஜெர்மனியின் அந்நாளைய மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமல் போனாலும், உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகின் எந்த மூலையில் மக்கள் அடிமைப் பட்டிருந்தாலும் அவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பிய செண்பகராமன் என்ற பெருமகனின் புகழ் வரலாற்றில் என்றென்றும் நிலைபெற்றிருக்கும்.
ஆதிக்கவாதிகளின் எதிராளி, விடுதலைப் போராளி, பத்திரிகையாளர், துப்பறிவாளர், அமைச்சர், பொறியியலாளர், நீர் மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பர் என்றெல்லாம் பல பெருமைகளுக்கு சொந்தக்காரனான செண்பகராமன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றுக் கொண்ட தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. வங்க மொழியினரான விவேகானந்தர், சந்திரபோஸ் ஆகியோரை யெல்லாம் போற்றும் தமிழர்கள், செண்பகராமனை அடியோடு மறந்தே விட்டனர்.
நாகம்மாள்- சின்னச்சாமி என்ற சாதாரண ஏழைத்தாய்-தந்தையரின்வழி, உலகம் போற்றிய ஓர் உன்னத மகவை தமிழகம் ஈன்றெடுத்தது. அம்மகவு, மாவீரனாக வளர்ந்து பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரியும் உலக நாடுகளையெல்லாம் மிரள வைத்தவருமான ஹிட்லரையே தலைவணங்க வைத்தார் என்ற வரலாறு தமிழர்களை பெருமை கொள்ளச் செய்வதாகும்.
இந்திய விடுதலைப் போரில் ‘ஜெய்ஹிந்த்’ என்னும் முழக்கத்தை முதன்முதலில் முழங்கியவரும் உருவாக்கியவரும் இவர்தான். பிரிட்டிஷ் இந்தியாவிற்கு வெளியே அமைந்த நாடு கடந்த அரசில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியவர் செண்பகராமன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஏராளமான சிறப்பிற்குரிய செண்பகராமன், அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ஆம் நாளில் பிறந்தவர்; ஆனால், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக.
தமிழகத்தின் தென் புலத்தில் நாஞ்சில் நாட்டின் பிறந்த செண்பகராமன் சிறு வயது முதலே மனதில் வீரமும் உடலில் முறுக்கும் கலந்த எழுச்சியுடன் விளங்கினார். பள்ளி நாட்களிலேயே மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு அவர் எழுப்பிய விடுதலை முழக்கம், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை சிந்திக்க வைத்தது.
“ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்து எறிவேன்” எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரனை நேதாஜி மிகவும் விரும்பினார்.
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காக நேரில் குரல் கொடுத்தவர், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன்.
அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். அதற்கு மறுமொழி சின்ன வில்சன், “பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது” என்று மறுத்து விட்டார். இருந்தும் சோர்வு கொள்ளாமல், இனவெறியர்களின் மிரட்டலையும் மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.
இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படைதான், வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்திற்கு முன்னோடியாகவும் உந்துதலாகவும் அமைந்தது.
1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது. அதன்பின், செண்பகராமனை தன் வழிகாட்டியாகக் கொண்டார் நேதாஜி.
கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், “நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்” என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
“விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது” என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர்.
அதேவேளை அவமானத்திற்கு ஆளான ஹிட்லரும் அவரைச் சேர்ந்த நாஜிக்களும் செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் நஞ்சு கலந்து கொடுத்தனர். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட செண்பகராமன், 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் உயிர் துறந்தார். 43 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் அடுத்தடுத்த திருப்பங்களை தன் வாழ்நாளில் கொண்டிருந்த செண்பகராமன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்றவர்.
நன்றி
தமிழர்கள் மறக்கவில்லை, நண்பரே! தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்த ஈனங்கள் மறைத்து விட்டன! இப்போது தான் இன உணர்வு துளிர் விட ஆரம்பித்திருக்கிறது! எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்!
உண்மையில் சுபாஷ் சந்திரா போஸ் ..இந்திய சுதந்திரத்தில் ஆர்வம் கொள்ளவில்லை சும்மா வாய் சவடால் அடித்தார் என்று அன்றைய பர்மாவில் அவருடன் நெருங்கி பணியாற்றிய தமிழ் முஸ்லீம் யூனுஸ் பாய் எழுதி உள்ளார் பர்மாவை பிடித்த ஜப்பான் அங்கிருந்து அந்தமான் ..இலங்கை ..இங்கெல்லாம் கால் வைக்க திட்டம் போட்ட்து