ஞாயிறு நக்கீரன், செப்.13, 2017. இயற்கை வளமும் எழில் நயமும் மக்கள் நலமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இந்த மலைத்திருநாட்டிற்கு பெயர் தந்தது தமிழ் மொழி; அது மட்டுமல்ல, பண்பாட்டு மேன்மையையும் நாகரிகச் சிறப்பையும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னம் இத்திருநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது குமரிக்கடல்.
பஃருளுளி(குமரி) ஆறு நடுவேப் பாய்ந்து மண்ணை வளப்படுத்தியும் மக்களை நலப்படுத்தியும் ஓட, குமரி மலையோ அந்நாளைய தமிழனின் பெருமையைப் போல வானுயர்ந்து நிமிர்ந்து நிற்க, குமரிக்கடலோ தமிழ் மக்களைச் சூழ்ந்திருக்க சோழ வளநாட்டின் வணிக நகரமாம் பூம்புகாரில் இருந்து என்னென்னெ பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டனவோ அவை அனைத்தும் இன்று கெடா அழைக்கப்படும் கடார நிலத்தின் அன்றைய யான் மண்டலத்திலும் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னம் இதே கெடா பெருமண்டலத்தை கட்டியாண்டவன் தமிழன். அதன் தாக்கமும் அந்நாளைய தமிழ்ப் பண்பாட்டின் நீட்சியும் இன்றளவும் கெடா அரண்மனையில் பிரதிபலிப்பதை நாம் காணலாம். தாம்பூலப் பரிமாற்றம், வெற்றிலை-பாக்கு, பள்ளாங்குழி ஆட்டம் யாவும் கெடா அரண்மனையில் எப்போதும் இடம்பெறும். இத்தகைய பண்பு நலன்களெல்லாம் பூம்புகார் நகரில் இருந்து குமரிக்கடல்வழியே அன்றைய கடாரத்திற்கு இறக்குமதியானவை.
தற்பொழுது 29-ஆவது சுல்தானாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கெடா ராஜ மூடா துங்கு சலாகுதின் அல்மஹ்ரும் சுல்தான் பட்லிஷா, உண்மையில் 37-ஆவது ஆட்சியாளராவார்.
நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் கெடா மாநிலத்தை தமிழ் மரபுவழி மன்னர்கள்தான் தொடக்கத்தில் ஆண்டனர் என்பதும் இடையில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏகமாக இந்த மலையக மண்ணில் நிகழ்ந்தபோது, அதன் தாக்கத்திற்கு ஏற்ப ஒன்பதாவது தமிழ் தர்பார் ராஜாவும் இஸ்லாத்தைத் தழுவி முதல் சுல்தானாக பரிமானம் பெறுகிறார். அந்த வரிசையில்தான் துங்கு சலாகுதின் 29-ஆவது ஆட்சியாளராகத் திகழ்கிறார் இன்று.
பௌத்த சமயக் கூறும் சைவ சித்தாந்த நெறியும் கலந்து தமிழ் மொழி குடிகொண்டிருந்த கடார அரண்மனையில், ஒன்பதாவது தர்பார் தமிழ் மன்னன் இந்தோனேசியாவில் இருந்த வந்த அரபு கலப்பு முஸ்லிம் மார்க்க அறிஞரால் முஸ்லிம் சமயத்தைத் தழுவிய அன்றைய தினமே அரபு மொழியும் மலாய் மொழியும் கொலு கொண்டன. தமிழ் ஒதுங்கிக் கொண்டது.
மொத்தத்தில், நாம் வாழும் இந்த மலைத்திருநாட்டிற்கு பெயர் சூட்டியதும் பண்பாட்டுச் சிறப்பைத் தந்ததும் நாகரிக மேன்மையை வழங்கியதும் குமரிக்கடல்தான் என்பதை மலேசிய இஸ்லாமிய பன்னாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் எடுத்துரைத்திருப்பது இந்த மண்ணில் வாழ்கின்ற நமக்குக் கிடைத்தப் பெருமை ஆகும்; இத்தனைக்கும் இந்தப் பேராசிரியப் பெருமகன், ஈரானிய வழித்தோன்றல் ஆவார்.
இத்துணைச் சிறப்புமிக்க குமரிக் கடலை வங்காளக் குடாக் கடல் என்று ஆரியம் பரப்பிவிட்டது. தமிழனுக்கோ தமிழ் மொழிக்கோ சிறப்பு வாய்த்திடக் கூடாதென்றும் இருக்கின்ற பெருமையை சிதைப்பதென்றும் இலக்காக் கொண்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தமிழருக்கு எதிராக பண்பாட்டுப் புரட்சி நடத்தி வெற்றியும் கண்டு வருகிறது பார்ப்பனியம்.
பழங்காலத் தமிழனின் வணிக நகரான பூம்புகாரைக் கடல் கொண்டபோது தலைநிலத்தோடு ஒட்டியிருந்த தென்பகுதி விலகி இன்று இலங்கை என்ற பெயருடன் தமிழனுக்கு எதிராக கோடரிக் காம்பாக நிற்கிறது.
அதேக் காலக்கட்டத்தில் குமரி மலை கடலில் மூழ்கியது; கடலடியில் இருந்த இமயமலையோ மேலெழுந்தது. அப்படி கடல் கொண்ட குமரி மலையின் உச்சியில்தான் இன்று திருவள்ளுவரின் சிலை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், குமரிமலையை, தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய அந்தக் குமரி மலை உச்சியை விவேகானந்தர் பாறை என்பது அநியாயாம்.. அக்கிரமம்.
1893-ஆம் ஆண்டு ஏறக்குறைய இதேக் காலக்கட்டத்தில் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய பன்னாட்டுக் கூட்டத்தில் உரையாற்றச் செல்லும் முன், குமரி மலை உச்சியில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார் விவேகானந்தர். குமரிமலை முகட்டிற்கு அவருக்கும் உள்ள தொடர்பு அவ்வளவுதான்.
விவேகானந்தர் வங்க மொழியினராக இருந்தாலும் தமிழ் மண்ணும் மக்களும்தான் அவருக்கு அதிகமாக உதவினர். ஆசிரமம் அமைக்க இடம், பொருள் எல்லாம் தந்தனர். இவ்வளவு ஏன்? இராமநாதபுர சமஸ்தான சேதுபதி மன்னர் தனக்கு வந்த அழைப்பிதழை நேரமின்மைக் காரணமாக விவேகாந்தரை சிகாகோவிற்கு அனுப்பி வழிச் செலவுக்கு பணமும் கொடுத்தனுப்பினார். அவர் அவ்வாறு செய்யாவிடில், விவேகானந்தரை உலகமே அறியாது போயிருக்கலாம்.
அப்படிப்பட்ட சேதுபதி மன்னரை இருட்டடிப்பு செய்த ஆரிய பத்திரிகை உலகம், குமரி மலையையும் விவேகானந்தர் பாறை என்று பிரச்சாரம் செய்துவிட்டது. இப்படித்தான் தமிழனின் அடையாளம் யாவும் ஒவ்வொன்றாக மறைக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் தொடர்கிறது.
அந்த வகையில்தான் நலமும் வளமும் இயற்கையாக அமைந்திட்ட இந்த மண்ணிற்கு பெயரையும் பண்பாட்டையும் வழங்கிய குமரிக்கடல் பற்றிய வரலாறும் ஏறக்குறைய மறைந்தேவிட்டது. இருந்தபோதும் கெடா அரண்மனையில் மிச்ச சொச்சமாகத் தொடரும் தமிழ்ப் பண்பாடு நாளைய வழியத்தோன்றலினருக்கு உண்மையை உரைக்கும். இந்த நாடு தாங்கி நிற்கும் பெயரும் தமிழ்ப் பெருமையை எஞ்ஞான்றும் பறை சாற்றும்.
‘
இந்த குமாரிகண்டம் (LEMURIA) பற்றி நானும் நிறைய தேடியுள்ளேன். அதில் முக்கியமாக கூறவேண்டிய விஷயம் யாதெனில் , மகா விஷ்ணு அவர்களின் திருமணத்திற்கு பணம் தந்த குபேரன் இந்த குமரிக்கண்டத்தின் அதிபதி என்றும் ; அவர் இலங்கேஸ்வரனின் வம்சாவளி வந்தவர என்றும் படித்துளேன் ! மேலும் , மஹாவிஷ்ணு மட்சயா அவதாரம் எடுத்த பொழுது , ஒரு பிரளயம் வந்து ஒரு பெரிய நிலப்பரப்பை மூழ்கடித்தது என்று அறிய பெற்ரென். அதில்ஆ இருந்து 7 சப்த்த ரிஷிகள் காப்பாற்ற படடார்கள் என்று அறிந்தேன் . ஆனால் புவியியல் ஆராச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர் ! காரணம் உலகம் ஒரு உருண்டை நிலப்பரப்பில் இருந்து பல லட்சம் ஆண்டுகளாக மெதுவாக பிரிந்து பிரிந்து நகர்ந்து செல்கின்றனவாம் ! அப்படி பார்க்கும் பட்ச்சத்தில் இந்த கண்டம் பெரிய நிலப்பரப்பு எங்கும் பொருந்தவிலையாம் !இதில் லெமுரியா கண்டனத்தை மூழ்கடிக்க போதுமான கடல் நீர் இல்லாமையாலும் , இயற்க்கை விதியின் கோற்பாடில் அடங்காமையாலும் , இந்த கணிப்பு அறிஞர்களால் என்று கொள்ள மறுக்க படுகிறது ! மேலும் கடல் நீர் கடந்த 20000 ஆண்டுகளில் 300 மீட்டருக்கு மேலே செல்லவில்லையாம்! இந்திய பெருங்கடலின் ஆழம் 550 – 700 மீட்டராம் ! இப்படி நிறைய புவியியல் விஷயம் உள்ளது ! படத்தில் காண்பிக்க படும் பரப்பளவு மிகையானது ! எனவே நாம் எல்லா விஷயங்களையும் கவனமாக ஆராயந்து சொல்ல வேண்டும் !
கடாரம் கெடா ஆனது .ஆனால் கடாரம் மலையாள மொழி,கடாரம் பொருள் கத்தி ஆகும் .