அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன? மின்னல் வானொலியில் தொடரும் ‘தகிடுதத்தம்’

குமரிமலையன்,

இன்றல்ல; நேற்றல்ல; ஆண்டுக் கணக்கில்  அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் தொடரும் தகிடுதத்தம் நின்றபாடில்லை; ஏதோ உடற்கட்டமைப்பு ஆடை என்று சொல்லிக் கொண்டு அதை விற்பதற்காக அந்த ஆடைகள் ஜெர்மனிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை யென்றும் அதில் கலந்துள்ள அதீத சிவப்பணுக்கள்தான் தடித்த உடலையுடைய ஆண்-பெண் இருபாலரின் உடலையும் சீராக வைத்திருக்க உதவுகின்றன என்றும் சொல்லி, இன்னும் பலவிதமாகவும் பசப்பி விளம்பரம் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் மாலை மயங்கும் வேளையில் ஆளை மயக்கும் இந்த வேலையைப் பற்றி பல காலம் சிந்தித்த நான், ஒரு நாள் ஒரு மருத்துவரிடம் அதீத சிவப்பணுக்கள் என்றால் என்ன ஐயா என்று வினவினேன்.

அவர், முனைவர் பட்டம் பெற்றுக் கொண்டு டாக்டர் என்று தம்பட்டம் அடிக்கும் வரிசையில் அணிவகுப்பவர் அல்லர்; போலி மருத்துவரும் அல்லர்; இல்லாத ஒரு பல்கலைக்கழகம் இருப்பதாகச் சொல்லி, அந்தப் பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர்(முனைவர்) பட்டம் அளித்ததாக பத்திரிகை அறிக்கையும் விட்டு விளம்பரமும் செய்து கொள்ளும் மானமுள்ள(!) மருத்துவரும் அல்லர் அவர்; உண்மையிலேயே எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவரான அவரிடம்தான் விளக்கம் கேட்டேன். நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் எத்தனையோ பேர் இருக்க, குறிப்பிட்ட அவரிடம் ஏன் கேட்டேன் என்றால், அவர் ஓர் இலக்கியவாதியும்கூட  என்பதால்;

கேட்ட மாத்திரத்தில் சிரித்தார்; அதுவும் பகடிச் சிரிப்பு.

இந்த உலகில் அதீத சிவப்பணு என்பதாக ஒன்று இல்லவே இல்லை; மருத்துவ உலகில் அப்படிப்பட்ட பொருளை அல்லது உயிரியை அல்லது நுண்கிருமையைத் தேடி அலைந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். உண்மை நிலை இவ்வாறிருக்க, இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி, அதுவும் ஜெர்மனிய தொழில்நுட்பம் என்று சொல்லிக் கொண்டு ஏமாந்தவர்கள் தலையை மழித்து சந்தனத்தைத் தடவும் ஏமாற்று வேலையை அரச வானொலியான மின்னல் வானொலி வஞ்சகமில்லாமல் காலங்காலமாகத் தொடர்கிறது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட வேலையை மின்னல் வானொலியினர் செய்கின்றனர் என்றால், நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தோன்றி இருந்தால் அப்பாவி மக்களை இன்னும் எப்படி யெல்லாம் ஏமாற்ற முனைந்திருப்பார்களோத் தெரியவில்லை.

ஒன்று மட்டும் புரியவில்லை; மின்னல் வானொலியான அரச வானொலி இயங்குவதற்கு அரசு நிதி அளிக்கும் நிலையில், இப்படியெல்லாம் சமுதாயத்தை ஏமாற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிப்பது, விளம்பர வருமானத்திற்குத்தான். இப்படி யெல்லாம் பொருளீட்டி மின்னல் நிருவாகத்தினர் என்னதான் செய்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

ஒரு கல் வியாபாரி, ருத்திராக்கக் கொட்டையை வாங்கி அணிந்து கொண்டால், பெற்றோரை மதிக்காக பிள்ளைகள், முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த தம் பெற்றோரை உடனே அழைத்து வந்து பராமரிப்பதுடன் மரியாதையுடனும் நடத்துவர்; அதைப்போல தம் பிள்ளைகளிடம் அன்பு காட்டாத பெற்றோர், இதை வாங்கி அணிந்து கொண்டால்,  உடனே தம் மக்களிடம் அன்பு மழை பொழிவார்கள் என்றெல்லாம் கதையளந்து பேசுகிறார். இவ்வாறெல்லாம் அவர் பேசுவதற்கு விளம்பர பணத்தைப் பெற்றுக் கொண்டு வாய்ப்பளிக்கிறது மின்னல் வானொலி;

சூரியன் என்ற கோள், இரண்டாம் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார் என்றெல்லாம் வானொலியிலேயே பேசும் இவர், சூரியனுக்கு ஆங்காங்கே வீடுகளைக் கட்டிக் கொடுத்து, புதுமனைப் புகுவிழாவையும் நடத்தி வைத்திருப்பார் போலும்!

அதைப்போல, இன்னொருவருக்கும் விளம்பர வாய்ப்பு அளிக்கிறது மின்னல் வானொலி; அவர் கல் வியாபாரியைப் போல் அல்லாமல், சொல் கொலைஞராகத் திகழ்கிறார். புதுமை ஞானி என்று தன்னைத்தானே பறைசாற்றிக் கொள்ளும் அவர், வாழ்க்கை என்று சொல்லை மனங்கூசாமல் ‘வாள்க்கை’, வாள்க்கை’, வாள்க்கை’ என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி தமிழ்க் கொலை புரிகிறார்.

போதாக்குறைக்கு, தமிழ்ச் செய்திப் பிரிவினரும் தங்கள் பங்கை நிறைவு செய்யும் விதமாக, மீண்டும் முருங்கை மரம் ஏறுகின்றனர். செய்தி அறிக்கையில் Assistant Commissioner, Ceiling போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியப்படியேப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வளவோ நல்லன புரியும் மின்னல் வானொலியினர், இவற்றை யெல்லாம் செம்மைப் படுத்திக் கொண்டால், நம் சமூகத்திற்கு நன்மை விளையும்.