சமயவாரியான   சலவைக்  கடையும்  சட்டமும்

– கி.சீலதாஸ், நவம்பர் 4, 2017. 

 

முஸ்லிம்களுக்கு  மட்டுமே  என்கின்ற  சலவைக்  கடை  மூவாரில்  இயங்கியது.  இந்தச்  செய்தி  பத்திரிக்கைகளில்  வந்ததும்  பொதுவாகவே  மலேசியர்கள்  சங்கடப்பட்டனர்.  வெளிநாட்டவர்கள்கூட  புருவங்களை  உயர்த்தி  ஆச்சரியப்பட்டனர்.  சுதந்திரத்துக்கு  முன்னும்  பின்னும்  இப்படி  ஒரு  வியாபார  அணுகுமுறை  கடைபிடிக்கப்பட்டதில்லை.  ஆனால்,  இக்காலகட்டத்தில்  இப்படிப்பட்ட  வியாபார  அணுகுமுறையை  அறிந்தும்  அதைக்  குறித்து  அரசியல்வாதிகள்  மவுனம்  காத்தனர்.

ஒரே  மலேசியா  என்ற  முழக்கம்  எப்பொழுதும்  ஒலித்துக்  கொண்டிருக்கையில்,  வியாபாரத்தை  விரிவுப்படுத்தும்  நோக்கத்தோடு  சிலர்  செயல்படுவது  ஆச்சரியப்பட  ஒன்றுமில்லை  என்று  கூறியவர்களும்  உண்டு.  ஆமாம்,  சில  காலமாகவே  உயர்ந்த  இனம்,  உயர்ந்த  சமயம்  என்கின்ற  முழக்கங்கள்  அடிக்கடி  ஒலிக்கும்போது   அதை  யாரும்  கண்டுகொள்ளாமல்  இருந்ததை  நம்மால்  மறக்கமுடியவில்லை.

சில  காலமாகவே  ஒரு  சிலரின்  போக்கு  மலேசியர்களை   விரக்தி,  மன  உலைச்சல்,  ஏமாற்றம்,  துன்பம்  யாவும்  ஒருமித்து  வேதனைப்படுத்தின.  எரிகின்ற  வேதனை  தீயில்  எண்ணெய்  ஊற்றுவதுபோல்  இருந்தது  இந்த  முஸ்லிம்களுக்கு  மட்டும்  சலவைக்கடை.  ஜொகூர்  மந்திரி  புசார்  கொடுத்த  விளக்கம்  திருப்தி  அளிக்கவில்லை.  சிறு  வருமானம்  போதும்  என்ற நோக்கத்தோடு  செயல்பட்டிருக்கலாம்  என்றார்.  சிறு  ஆதாயம்  போதுமென்றால்  அதற்கு  வேறு  வழிகள்  ஏராளம்  உள்ளன.  சமயத் துவேஷத்தை   ஊக்குவிக்கவல்ல.  வியாபார  முறைகளில்   இறங்குவதைத்  தவிர்த்திருக்கலாம்.

பல  இனங்கள்  வாழும்  நாட்டில்  பல  சமயங்கள்   இயங்க பாதுகாப்பு  நல்கும்  அரசமைப்புச்  சட்டம்  இருக்கும்போது  இப்படிப்பட்ட  சமய  வாரியான  வியாபாரம்  மக்களை  சமய  வாரியாகப்  பிரித்துவிடுமேயன்றி   அவர்களை  ஒற்றுமைப்படுத்தாது.  நல்ல  வேளையாக,  மாட்சிமை  தங்கிய  ஜொகூர்  சுல்தான்  இப்படிப்பட்ட  கடைகளுக்கு  இடம்  இல்லையென்று  பிரகடனப்படுத்தினார்.  மாநில  இஸ்லாமியத்  துறையின்  தலைவர்  அவர்.   இஸ்லாமிய  விவகாரங்களில்  அவர்  சொல்லுவதுதான்  சட்டம்.  பெர்லிஸிலும்  இதுபோன்ற  சலவைக்  கடை  இருந்ததை  அந்த  மாநில  பட்டத்து  இளவரசர்  ஆதரிக்கவில்லை.  அவரின்  ஆலோசனைக்கு  இணங்க  எல்லா  சமயத்தினர்களுக்கும்  அந்தச்  சலவைக்  கடை  திறந்துவிடப்பட்டது,  அடுத்து,   ஆட்சியாளர்கள்  ஒட்டுமொத்தமாக  இப்படிப்பட்ட  தீவிர  நடவடிக்கைகள்  ஆதரிக்கவில்லை.  அதுகூடாது  என்றும்   அறிவித்தனர்.

எந்த வகையில் நியாயமானது?

இதற்கு  இடையில்  மலேசியாவின்  முன்னாள்  தலைமை  நீதிபதி  துன்  அப்துல்  ஹமீது  முகம்மது  ஒரு  கருத்தை  வெளியிட்டார்.  அதாவது,  ஒருவர்   தன்  விருப்பப்படி  வியாபாரம்  செய்வதைத்  தடுக்கும்  சட்டம்  ஏதுமில்லையாம்.  ஒரு  வியாபாரி   தாம்  விரும்பும்   நிபந்தனைகளை   விதிப்பதை   சட்டம்  தடுக்கவில்லை  என்கிறார்.

அவர்  சொல்வதில்  உண்மை   இருக்கலாம்,  நியாயம்  இல்லை.  இதுவரையில்  முஸ்லிம்களுக்கு  மட்டும்  சலவைக்கடை  திறக்கப்பட்டது  இல்லை.  அப்படி  திறந்ததானது  இன  சமய ஒற்றுமையை  குலைத்துவிடும்  தன்மையை  வளர்க்க  உதவும்.   சட்டம்  இல்லை  என்பதால்  மனம்போனபடி  செயல்பட்டு  இனப்பிரச்சினை   பலமடைய  வித்திடுவது   எந்த  வகையில்  நியாயமென  ஏற்றுக்கொள்வது?

மனிதன்  தீய  வழியில்  போவதைத்  தவிர்க்கமாட்டான்  அதனால்தான்  மனிதன்  இயற்கையாகவே  செய்யத்  துணியும்  குற்றங்களை  வரிசைப்படுத்தி  அவற்றிற்கான  தண்டனையும்  விளக்குகிறது   மலேசியாவின்  தண்டனை  சட்டம்.   சமுதாயத்தைப்  பாதிக்கும்  அளவுக்கு  புதுவகையான  குற்றங்கள்  செய்யப்படுமானால்  அவை  தடுக்கப்பட வேண்டும்.  சட்டம்  இயற்றப்படலாம்.

வியாபாரங்களைக்  கட்டுப்படுத்தும்  அதிகாரம்  ஊராட்சி  மன்றங்களுக்கு  உண்டு.  எனவே,  வியாபாரிகள்  இனம், மத,  சமய  வாரியான  விளம்பரங்களைத்   தவிர்க்கும்படி  உரிமம்  வழங்கும்போது  நிபந்தனைகளை  விதிக்கலாம்.  நிபந்தனைகளை   மீறினால்  உரிமம்  ரத்து  செய்யப்படும்  அல்லது   தண்டிக்கப்படலாம்  என்று  நிபந்தனைகளை  விதிக்கலாம்.  குற்றங்களை  தடுக்க  வழியுண்டு. ஒருவர்  தன்  விருப்பப்படி  வியாபாரம்  செய்ய  எந்த  தடையும்  இல்லை,  ஆனால்,  ஊராட்சி  மன்றம்  தன்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி  தவறான  வியாபார  அணுகுமுறையைத்  தடுக்க   முடியும்.  அதிகமாகச்  சட்டம்  பேசினால்   நீதி  தன்  பொலிவை  இழந்துவிடும்  என்பதை  ஹமீதின்  சட்டவாதம்  உறுதிப்படுத்துகிறது. இதை  அனைவரும்  உணரவேண்டும்.