‘ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 7, 2017 – அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானவர் அன்வார் என்றும் தற்பொழுது அவர் அனுபவித்து வரும் சிறைவாசத் தீர்ப்பில் அரசாங்கத்தின் தலையீடு அப்பட்டமாக இருக்கிறது என்றும் இப்பொழுது சொல்லும் டாக்டர் மகாதீர், அப்பொழுது தான் செய்ததை நினைவுகூர்கிறாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.
நீதிமன்றம், காவல்துறை, புலனாய்வுப் பிரிவு ஆகிய அமைப்புகளை தங்களின் அரசியல் லாபத்துக்காவும் அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் அந்தந்த அரசுகள் பயன்படுத்தும் போக்கு உலகெங்கும் காணப்படுகிறது. இத்தகையப் போக்கு ரஷ்யாவிலும் இந்தியாவிலும்தான் அதிகமாகக் காணப்பட்டது. தற்பொழுது, இந்த நிலை உலகெங்கும் பரவிவிட்டது. மலேசியா மட்டும் இதற்கு விலக்கா என்ன? ஆனாலும் இது, ஜனநாயகக் கட்டமைப்பிற்கு இழுக்குதான்.
2015 பிப்ரவரித் திங்கள் முதல் சிறைக் கொட்டடியில் இருக்கும் அன்வார் தற்பொழுது 1000 நாட்களை எட்டிவிட்ட நிலையில், நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களும் ஆதரவாளர்களும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன் திரண்டு, பின் சுதந்திர சதுக்கத்திற்கு அணிவகுத்து வந்தபின் அன்வாரின் விடுதலைக்காக குரல் எழுப்பினர்.
சுதந்திர சதுக்கத்தில் பேசிய மக்கள் நீதிக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ வான் அசிசா, அக்கட்சியின் உதவித் தலைவரும் லெம்பா பாந்தாய் தொகுதி நாடாளுமன்ற நட்சத்திர உறுப்பினருமான நூருள் இஸ்ஸா, ஜனநாயக செயல்கட்சியின் பெருந்தலைவர் லிம் கிட் சியாங், மக்கள் நீதிக் கட்சியின் மற்றொரு உதவித் தலைவர் தியான் சுவா, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சிவராசா, அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் சமாட், பிரிபூமி கட்சியின் காருடின் அபு ஹாசன் உட்பட அதிகமான தலைவர்கள் அன்வாரின் புகழ்பாடியுள்ளனர்.
குறிப்பாக, அன்வார் தன்னுடைய அரசியல் பயணத்தில் புரிந்த தியாகம், ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்தெல்லாம் எடுத்துரைத்தனர்.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மகாதீர்தான், மேற்கண்டவாறு தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, அடுத்தப் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வென்றால், அன்வார் பிரதமராக ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, அரசியல் தலைவர்கள் தாங்கள் பதவியில் இருக்கும்பொழுது ஒரு விதமாகவும் பதவியில் இல்லாதபோது வேறு விதமாகவும் நடந்து கொள்வது வழக்கம்தான். அதைத்தான் துன் மகாதீரும் தற்பொழுது நிரூபித்து வருகிறார்.
இவர் பிரதமராக இருந்தபொழுதுதான் அன்வாரை அரசியல் ரீதியாகவும் கீழ்த்தரமான முறையிலும் வஞ்சம் தீர்த்தார் என்பது அக்கால நீதிமன்ற நடவடிக்கைகளே தெள்ளத் தெளிவாக சுட்டுகின்றன.
கடந்த நூற்றாண்டு முடிவுறும் தருவாயில் வங்கதேசத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டு டாக்கா விமான நிலையத்தில் இறங்கிய மகாதீரிடம் அந்நாட்டு செய்தியாளர்கள் அன்வாரைப் பற்றி வினா தொடுத்தனர். பொதுவாக செய்தியாளர்களிடம் இயல்பாகவும் இன்முகத்துடனும் உரையாடும் மகாதீர், அந்த நேரத்தில் சிடுசிடுப்பாகவும் கடுகடுப்பாகவும் வெடுக்கெனப் பேசினார்.
அதுகூட தாழ்வில்லை; அவர் வெளிப்படுத்திய கருத்துதான் கொடுமையானது. அதற்கு இருநாட்களுக்கு முன்புதான், சிறையில் இருந்த அன்வார் விசாரணக்காக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது, அவரின் கன்னம் கன்றிப் போய் இருந்ததுடன் கண்களும் வீங்கி இருந்தன. அதுகுறித்த படங்களெல்லாம் செய்தி ஏடுகளில் வெளிவந்தன.
அதுகுறித்துதான் வங்க மொழி செய்தியாளர்கள் மகாதீரிடம் கேட்டனர். அதற்கு, “அன்வார் தன்னுடைய கன்னத்தில் தானாகவே குத்திக் கொண்டிருப்பார்” என்று கொஞ்சமும் மனம் கூசாமல் மகாதீர் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
பின்னர், அன்றைய தேசிய காவல் படைத் தலைவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அன்வாரை அடித்ததற்காக அவருக்கு தண்டமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதுவும் மகாதீர் தலைமையிலான அரசு தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் நடைபெற்றது. ஆக, டாக்காவில் அவர் சொன்ன கருத்து பொய்த்து போனது. மொத்தத்தில், மகாதீர் அரசியல் பொய்யர் என்பது நீதிமன்றத்தின் மூலமாகவே மெய்ப்பிக்கப்பட்டது.
இன்று சாத்தான் மறைவோதுவதைப் போல, அன்வார் அரசியல் ரீதியாக வஞ்சம் தீர்க்கப்பட்டவர் என்று கொக்கரிக்கிறார். ஒருவேளை, சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் தான் புரிந்த அரசியல் பிழைக்கு பிராயசித்தம் தேடுகிறாரோ என்னவோ?
அப்போது நடந்தது என்ன?
அம்னோவின் தேசிய துணைத் தலைவராகி கஃபார் பாபாவிற்குப் பதிலாக துணைப் பிரதமர் ஆனதில் இருந்தே அன்வாரின் அபரிமிதமான வளர்ச்சி மகாதீரின் நெஞ்சத்தை உருத்திக் கொண்டிருந்தது. தனக்குப் பின் அன்வார்தான் நாட்டை வழிநடத்திப் போகிறார் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தானாக பதவி விலகும் காலம் வரை அன்வார் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை; அதற்கு இசைவாக மலேசியாவிற்கு அப்பால் அரபு மண்டலத்தில் குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் மேற்குலக அரசியலிலும் அன்வாருக்கும் ஆதரவு பெருகி வருகிறதை என்பதை யெல்லாம் உணர்ந்த மகாதீர், உண்மையில் செய்வதறியாது தவித்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் 1996 அம்னோ பொதுப் பேரவையில் தேசிய மகளிர் பிரிவுத் தலைவியாக டத்தோஸ்ரீ டாக்டர் சித்தி சகாரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இனம் கடந்து மொழி கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட பெண் அரசியல்வாதி சித்தி சகாரா. சுகாதாரத் துறையிலும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் துணை அமைச்சராக செம்மையாக கடமையாற்றிய சித்தி சகாரா, சுகாதாரத் துறையில் பொறுப்பு வகித்தபோது ‘புகையில்லா மாதம்’ என்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தேசிய அளவில் அப்போது பிரதிபலித்தது.
இப்படிப்பட்ட சித்தி சகாரா மீது மகாதீருக்கு தனிப்பட்ட முறையில் மாச்சரியமோ காழ்ப்போ இருந்தது இல்லை. தனக்கு மிகவும் பிடித்தவரும் தன்பால் அதீத பற்று கொண்டவருமான துன் ரஃபிடா அஸிஸை மகளிர் தலைவி பொறுப்பில் இருந்து சித்தி அகற்றியதுகூட மகாதீரை வருத்தவில்லை.
பேராக் மாநிலத்தின் அரச நகரான கோல கங்சாரில் அரசியல் கோலோச்சிய ரஃபிடா, மகாதீரின் முன் கலங்கிய கண்களுடன் நின்றதுகூட ஒரு பொருட்டாகப் படவில்லை மகாதீருக்கு. தேசிய மகளிர் பிரிவித் தேர்தலில் தான் நிறுத்தி ஆதரித்த ரஃபிடாவை அன்வார் களமிறக்கிய சித்தி தோற்கடித்ததைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ரஃபிடாவின் தோல்வியை தன்னுடைய தோல்வியாகவேக் கருதிய மகாதீர், அன்று முதல் உறக்கமில்லா இரவுகளுக்கு சொந்தக்காரரானார். மொத்தத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் அன்வாரின் கை வலுத்து வருவதையும் மலேசிய எல்லையைக் கடந்தும் அன்வாருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதையும் பொறுக்க மாட்டாமல்தான் அன்வாரை ஏதாவது செய்து கிடுக்கிப்பிடியில் சிக்க வைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டினார்.
அந்தச் சூழலில்தான் ஓரினப் பாலுறவு வழக்கில் அன்வாரை சிக்க வைக்க ஒரு துப்பு கிடைத்தது மகாதீருக்கு. அதை துருப்புச் சிட்டாக வசமாக பயன்படுத்திக் கொண்ட மகாதீர், அன்வாரை அரசியல் ரீதியாக விழ்த்தியதுடன் சமூக ரீதியாகவும் சிறுமைப்படுத்தினார். குறிப்பாக, பன்னாட்டு அளவில் அவருக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தினார்.
அதன்பின் நடந்ததை யெல்லாம் நாடறியும் நாமும் அறிவோம்.
அதேவேளை, அன்வார் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலும் நிதி அமைச்சுக்கு பொறுப்பு வகித்த காலத்திலும் இந்தியர்களுக்கு பொருளாதார அளவிலும் ஆன்மிக அடிப்படையிலும் சில நெருக்குதலை ஏற்படுத்தினார் என்பதை யெல்லாம் இன்றைய மலேசிய இந்திய அரசியல் வட்டமும் இந்திய சமூகமும் மறந்து விட்டது; மன்னித்தும் விட்டிருக்கலாம்.
அன்வாரும் காலம் என்னும் நல்லாசிரியர் தந்த படிப்பினையால் தற்பொழுது மிகவும் பண்பட்டு இருக்கிறார். வருகின்ற பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பதையும் அன்வார் பிரதமர் ஆவாரா என்பதையும் நாளைய அரசியல் களம் நமக்குத் தெரிவிக்கும்.
இப்படி எல்லாவற்ரையும் ஒரு குதர்க்கமான கண்ணோடு பார்க்கத்தான் வேண்டும் என்றால் அதற்கு நெற்றிக்கண் ‘நக்கீரன்’எதுக்கு?
பிராயச்சித்தமோ கடவுள் சித்தமோ…அது ஏன் காலத்தின் கட்டாயமாக இருக்கக்கூடாது? மாத்தி யோசித்துத்தான் பார்ப்போமே..முடிந்தால்..!