பத்துமலைக்கு அருகில் உள்ள தாமான் ஸ்ரீகோம்பாக்கில் தீபாவளி பொது உபசரிப்பு அண்மையில் நடைபெற்றது. தாமான் ஸ்ரீகோம்பாக், பத்தாவது பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ருக்குன் தெத்தாங்கா அமைப்பினர், பொது ஒழுங்கையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் வட்டார அளவில் பேணுவதுடன் இரவு நேரத்தில் பாதுகாவல் சுற்றுப் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்பேரில் பாசா பத்து, தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் வசிக்கும் அனைவரையும் ஒன்று திரட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பொது உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தனர். ஹஜி நோர் அஸ்மான் பின் அபு ஷுக்கோர் தலைவராகவும் ஹஜி ஜமாலுடின் பின் காசிம் துணைத் தலைவராகவும் அப்துல் முத்தாலிப் பின் மாட் செயலாளராகவும் உள்ள இந்த பாசா பத்து, தாமான் ஸ்ரீகோம்பாக் ருக்குன் தெத்தாங்காவில் இரத்தின சிங்கம், கணேசன், தாஸ், பாலா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக செயல்படும் இந்த ருக்குன் தெத்தாங்காவில் அண்மையில் நோன்புப் பெருநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல இப்பொழுது தீபாவளி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. வட்டார மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும் என்னும் முடிவுக்கு ஏற்ப தலைவர் நோர் அஸ்மான் இந்தத் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்ததுடன், இதுக்காக ருக்குன் தெத்தாங்கா இந்தியப் பிரதிநிதி ரெத்தின சிங்கம் தலைமையில் ஏற்பாட்டுக் குழுவையும் நியமித்தார்.
அவருடன் பாலா, தாஸ், கணேசன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னின்று நடத்திய இந்த தீபாவளி விருந்தில் மலாய்க்காரர்கள், சீனர்கள் ஆகியோர் இந்திய மக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுகிழமை நவம்பர் 12-ஆம் நடைபெற்ற இந்த விருந்தில் மழையையும் பொருட்படுத்தாமல் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செனட்டர் டத்தோ மெகாட் ஸுல்கர்னைன், கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ரஹிம், ம.இ.கா. கோம்பாக் தொகுதியைச் சேர்ந்த திருமதி சரோஜா உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மலேசிய மக்களின் ஒருமைப்பாடு வெளிப்பட்டது.