2018 ஆம் ஆண்டு விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இருமொழித் திட்டத்தை அமுலாக்க கல்வி அமைச்சு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதோடு, 2018 ஆண்டுக்கான இருமொழித் திட்ட அமுலாக்கம் புதிய வரையரைக்காக அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2017- ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்பள்ளிகளின் அடையாளத்தை அழிக்கத் திணிக்கப்பட்டு வந்த இருமொழித் திட்டத்திற்கு எதிராக பலவகையான தமிழ் ஊடகங்களும் தமிழ்மொழி ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் பயனாக இந்த முடிவுகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக விவேகானந்த தமிழ்ப்பள்ளியில் நடத்தப்படும் இருமொழித் திட்டம் முறையற்றது என்ற வகையில் தலைமையாசிரியர் மீதும் கல்வி அமைச்சின் மீதும் போடப்பட்ட வழக்கு ஒரு காரணம் என்கிறது கல்வி அமைச்சின் அறிக்கை.
இருமொழித் திட்டம் என்பது பெற்றோர்களின் தேர்வு என்பதும் அப்படி முடிவு செய்யும் பொறுப்பை பெற்றோர்களிடம் விட்டு விட வேண்டும் என்பதும் இருமொழி ஆதரவாளர்களின் ஒப்பாரியாகும்.
உண்மையாகவே யார் இந்த இருமொழித் திட்டத்தின் ஆதரவாளர்கள்? இவர்கள் தமிழ்மொழி வழி ஆரம்பக் கல்வியை கற்றவர்களா, அல்லது தமிழ்க்கல்விக்கான 200 ஆண்டுகாலமான போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழ்மொழி ஆரம்பப்பள்ளிகளில் பயிற்று மொழியாக இருப்பதற்காக போராடியவர்களா? இவர்களுக்கு இந்த தமிழ்க்கல்வியின் நிலைத்தன்மையை அழிக்கும் உரிமையை யார் வழங்கியது?
ஆங்கில மொழியின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. உலக அளவில் வாணிப மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது. ஆங்கில ஆற்றலை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கான திட்டங்களை அரசாங்கம் அமுலாக்க வேண்டும்.
அதைவிடுத்து, தழிழ்ப்பள்ளிகளில் போதிக்கப்படும் முக்கிய 5 பாடங்களில், கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஆங்கிலத்திலும், மலாய்மொழியை மலாயிலும், தமிழ்மொழியை தமிழிலும் போதிக்கும் போது, தமிழின் பயன்பாடு ஒரு பாடத்தோடு முடிந்து விடுகிறது. ஆங்கிலம் 3 பாடங்களிலும் ஊடுருவுகிறது. தமிழ்ப்பள்ளி தனது தனித்தன்மையை இழந்து ஆங்கிலப்பள்ளி என்ற அடையாளத்திற்கு செல்கிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டால், நாம் தமிழ்ப்பள்ளியை தாரைவார்த்துக் கொடுப்பதாகவே பொருள்படும்.
அடுத்தது, ஆரம்பக்கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்று, அதன்வழி பயிற்சிகள் பெற்று, தமிழ்மொழிப்பள்ளியின் வழி வாழ்வாதாரத்தை நடத்தும் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சிலர் எதற்காக இந்தத் திட்டத்தை ஆவேசத்துடன் திணிக்க அலைகின்றனர்? இவர்களுக்கு தமிழ்க்கல்வியின் மீது நம்பிக்கை அற்றுப்போயிருந்தால், அவர்கள் பணிமாற்றத்தை கோரி மாற்று பள்ளிகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டும், அதைவிடுத்து இவர்களுக்கு தமிழ்ப்பள்ளியை உருமாற்றம் செய்யும் உரிமை கிடையாது.
இருமொழித் திட்டம் பெரும்பான்மையான ஏழ்மை மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல என்கிறார் இது சார்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பகாலம் தொட்டே வறுமை நிலை குழந்தைகளின் சரணாலயமாகவே இருந்து வருகின்றன. அவற்றின் ஏழ்மை நிலை குறித்து பல விவாதங்கள் எழுந்த போது அதற்கு தீர்வாக பல காலகட்டங்களில் அவை மூடப்பட வேண்டும் என்பது மேல்குடி மக்களின் விவாதமாக இருந்தது. இருந்தும் கடந்த 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க காரணம் தமிழ்மொழியை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்வாங்கிய மக்கள் மேற்கொண்ட போராட்டமாகும்.
தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கக் கொள்கைகளுக்கு உட்பட்டவையாக இருப்பினும் அவை நமது பண்பாட்டு மொழி சார்ந்த இன அடையாளமாகும். அதற்கான போரட்டம் அரசியல் தன்மை கொண்டது. அதை மேற்கொண்டவர்கள் தமிழ்மொழி வழி தமிழ்க்கல்வியை இந்த நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வேட்கையால் வெகுண்டவர்கள் என்கிறார் ஆறுமுகம்.
எனவே, இந்த நாட்டில் உள்ள தமிழ்க்கல்விக்கு மக்கள் வழி உருவான ஒரு போராட்ட வரலாறு உள்ளது என்பதை யாரும் மறக்கவும் மறுக்கவும் இயலாது. 2007 ஆம் ஆண்டு நாடுதழுவிய அளவில் இருந்து பங்கேற்ற சுமார் இராண்டாயிரம் மக்களுக்கு தலைமையேற்று ஊர்வலமாக நாடளுமன்றத்தின் முன் மறியலில் ஈடுபட்டதை அவர் நினைவு கூறுகிறார்.
மாறாக, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த முடிவுகளை சமுதாயம் அதன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால்தான் முடிவு செய்ய இயலும். அதை விடுத்து, ஆங்கிலத்தில் அறிவியலும் கணிதமும் இருந்தால்தான் தமிழ்பள்ளிகள் பக்கம் தலைவைத்துப் படுப்பேன் என வந்து போகும் சுயநலம் கொண்ட பெற்றோர்களிடம் தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தை ஒப்டைக்க இயலாது.
ஆங்கிலத்தின் முக்கியதுவம் என்பது அந்த மொழியை எப்படி கற்பது என்ற வழிமுறைகளில் காண வேண்டும். அதை விடுத்து, தமிழ்ப்பள்ளிகளின் தன்மையையும் பெரும்பான்மை மாணவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் இருமொழிக் கொள்கையை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.
தமிழ்ப்பள்ளியில் பயின்றால் தனது குழந்தையின் தரம் உயரும் என்ற வேட்கையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி சாதனை படைத்த பலர் இன்று நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதைப் பார்க்க இவர்கள் மறுக்கிறார்கள். இந்த நம்பிக்கையற்ற பெற்றோர்களுக்குத் தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் முடிவெடுக்கும் அருகதை கிடையாது.
இன்று சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்வது பற்றி முடிவெடுப்பதில் ஒட்டுமொத்த சமூகத்தின் ஈடுபாடும் அவசியமாகிறது. அதை விடுத்து இது சார்பாக பெற்றோர்கள் விரும்பினால் அமலாக்காம் செய்யலாம் என்பதை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறுவது ஒரு வரலாற்றுத்தவறாக அமையும் என எச்சரிகிறார் ஆறுமுகம்.
கமலநாதனை அவ்வளவு சீக்கிரத்தில் எடை போட்டு விடாதீர்கள்! அவர் எப்போது பதவிக்கு வந்தாரோ அன்றிலிரிந்தே தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டார்! ஒரு வேளை இதுவும் தேர்தல் அமைதியாக இருக்கலாம்! மீண்டும் கமலநாதன் பதவிக்கு வரக்கூடாது, அதுவே முக்கியம்!
இருமொழித் திட்டம் அகற்றப்பட்டது மிகவும் பாராட்டுக்குறியது வாழ்த்துகள்…
போராடியவர்களுக்கு வாழ்த்துகள். மலேசிய தமிழரை ஆசுவாசப்படுத்த இதுவும் ஒரு தேர்தல் தந்திரமாக்கும்.
இந்த தற்காலிகத் தடை பொதுத் தேர்தலில் இந்தியர்களின் (குறிப்பாக தமிழர்களின்) வாக்குகளைப் பெறவா? இந்த தற்காலிகத்தை நிரந்தரமாக்க வேண்டும். மேலும் இந்த இரு மொழிக்கல்வித் திட்டத்திற்கு உடந்தையாகவும் விடாப்பிடியாகவும் நின்ற மிஸ்டர் கேமல் ம.இ.காவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படவேண்டும்.