ஆசிரியரும் தன்முனைப்புச் சிந்தனையாளருமான சு.மகேசுவரியின் வெற்றியின் விழுதுகள் எனும் நூல் மார்ச் திங்கள் 3-ஆம் நாள் காரிக்கிழமை தலைநகரத்து நேதாஜி மண்டகத்தில் வெளியிடப்பட்டது.
சிலாங்கூர், ரவாங் வட்டாரத்தில் வசிப்பவரும் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமான இவர், பெருஞ்சித்தனார் பற்றாளரும் தமிழ் ஆர்வலருமான அர்சேந்திரனின் துணைவியாரும் ஆவார். இவர், கல்விப் பணியில் இதுகாறும் தான் பெற்ற பட்டறிவு, மொழியறிவு, தாய்மொழிப் பற்று, தமிழின் சிறப்பு, மாணவர் நல எண்ணம், பெற்றோர் மன வளம் குறித்த விழிப்புணர்வு, அயல் மண்ணில் தமிழும் தமிழரும் குறித்த சிந்தனை பற்றியெல்லாம் தன் மனதில் பொங்கி வழிந்த எண்ணத்தை வழிந்தோடச் செய்த நீரோடையைப் போல இந்த வெற்றியின் விழுதுகள் என்னும் நூலை வகையாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு வந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்தைக்கூட எட்டவில்லையே என்னும் மிரட்சியுடன் மாலை 5:00 மணியளவில் தொடங்கிய இவ்விலக்கிய நிகழ்ச்சி, போகப்போக பாதி அரங்கை நிரைக்கும் அளவுக்கு தமிழார்வலர்கள், நூலாசிரியரை அறிந்தோர்-தெரிந்தோர், பொதுமக்கள் என்றெல்லாம் இலக்கிய ஆர்வலர்கள் அதிகமாக திரண்ட இந்த நிகழ்ச்சியில் கல்வியாளரும் மொழியியல்புல மேநாள் விரிவுரையாளரும் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவருமான ம.மன்னர் மன்னன் நூலாய்வுரை வழங்கினார்.
சமுதாயப் பற்றும் இலக்கிய தாகமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மன்னர் மன்னன், பொதுவாக நூலாய்வுக்கு பெயர் பெற்றவர். மலேசியத் திருநாட்டில் வெளியீடு காணும் இலக்கியப் படைப்பு எதுவாயினும் அதை, புதுப்பெண்ணுக்கு ஒப்பனை செய்வதைப் போல உயர்த்திப் பேசுவது வழக்கம். அதுவும், இந்த நூலின் ஆசிரியர் தன்னுடைய மேநாள் மாணவி என்பதால், நூலாய்வு உரையின் வீச்சு சற்று தூக்கலாக இருந்தது.
மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு இரண்டாம் முறையாக தலைவராக வந்தது முதல் பெ.இராஜேந்திரனின் இலக்கியப் பணி முன்னிலும் துடிப்பாக இருப்பதால், இலக்கியப் படைப்பாளர்கள் தற்பொழுதெல்லாம் தெம்பாக காணப்படுகின்றனர். அந்த வகையில் எழுத்தாளர் சங்க ஆதரவுடன் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பெ.இராஜேந்திரன், துணை அமைச்சர் டத்தோஸ்ரீ மு.சரவணன், டத்தோஸ்ரீ சைட் இபுராகிம், தோ புவான் இந்திராணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், எஸ்.பி.மணிவாசகம், எழுத்தாளர் சங்கப் பொருளாளர் சைமன், ரமணி கிருஷ்ணன், கு.மு.துரை உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த இலக்கிய மாலை சங்கமத்தில், பொதுவாக தலைநகரத்து இலக்கிய நிகழ்ச்சிகளில் காணப்படாத புதிய முகங்கள் அதிகமாக தென்பட்டன.
- ஞாயிறு’ நக்கீரன்
நான் சொல்லுவதைக் குறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மலேசிய இலக்கியங்கள் எதுவாக இருந்தாலும் மன்னர் மன்னன் அவர்கள் உயர்த்திப் பேசுவது வழக்கம் என்று சொல்லுவது இந்த நூல் தரமற்ற ஒரு நூல் என்று சொல்ல வருகிறாரா? அத்தோடு இன்னோரு சந்தேகமும் உண்டு. டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ என்றெல்லாம் போட வசதி இருக்கும் போது அது ஏன் டான்ஸ்ரி? ஏதோ டான்ஸ் ஆடுகிற மாதிரி இருக்குதே!