‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 24, 2018 – இன்றைய உலகில் தமிழர்களை எந்தக் கருத்தாலும் ஒன்றுபடுத்த முடியாது. காரணம், தமிழர்களிடையே கலப்பினத்தவரும் தமிழ்ப் பகைவரும் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஒன்றெனக் கலந்து நிற்கின்றனர். அத்துடன், இன-மொழி உணர்வு குன்றி ‘தான்-தன் சுகம்’ என்ற நிலைக்கு வந்து விட்டனர்.
ஆனால், தமிழனை மூன்று அடிகளால் வசப்படுத்தலாம். முதல் அடி சோறு; சோற்றுக்காக கட்சி மாறுவான் தமிழன்; அடுத்து, பணத்தால் அடித்தால் தமிழன் படிவான். நூறு வெள்ளி கடன் கொடுத்தால் கூட, கும்பிட போன தெய்வம் நேரில் வந்ததே என்பான்; மூன்றாவது அடி, தடியடி. கட்டி வைத்து அடித்தால் தமிழன் அணி மாறவும் புறம் பேசவும் தயங்கவே மாட்டான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல தமிழர்களும்கூட, மாற்றானுக்கு இடம் கொடுப்பரே அன்றி இன்னொரு தமிழன் வாழ்வதை எந்நாளும் பொறுக்கமாட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் வலுத்தவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் தமிழன், இளைத்தவன் என்னதான் உண்மையை மாய்ந்து மாய்ந்து உரைத்தாலும் மறுத்து உரையாடுவான்; எதிர்த்து வழக்காடுவான்.
தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கு இல்லை என்பதால், 1921-ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி, திருவள்ளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை வகுத்தனர். அதைத்தான், 2006 முதல் 2011 வரை தமிழகத்தை ஆண்ட கலைஞர் மு.கருணாநிதி சட்டப்படி ஆக்கினார்.
மலையகத்திலும் இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவன், ‘நினைவில் வாழும்’ மு.மணிவெள்ளையனார் உள்ளிட்ட தமிழத் தலைவர்களும் திருவள்ளுவர் தொடர் ஆண்டைப் பிரகடனப்படுத்தி அதன்படி தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று முழங்கினர்; பிரகடனம் செய்தனர்.
2011 மேத் திங்கள் பிற்பகுதியில் தமிழக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஜெயலலிதா, அதையெல்லாம் மாற்றி, மீண்டும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார். ஜெயலலிதா, மொழியாலும் இனத்தாலும் தமிழர் இல்லை. இருந்தாலும், அவர் துணிந்து இதைச் செய்தார் என்றால், தமிழர்களின் இலட்சணம் என்ன என்பதை அவர் சென்னையில் குடியேறிய இளமைக் காலந்தொட்டே அவதானித்து வந்ததால்தான்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! – நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
என்று விநாயகப் பெருமானிடம் முத்தமிழையும் கேட்கும் தமிழன், தமிழ் இனத்திற்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு எத்தனை ஆண்டுகளாக என்று ஓரளவாவது எண்ணிப் பார்த்தானானால், இப்படி யெல்லாம் கேட்க மாட்டான்.
தொல்காப்பியம் இயற்றப்பட்டு குறைந்தப்பட்சம் 4,500 ஆண்டுகளாவது இருக்கும். அப்படியானால், தமிழ் இன்னும் எத்தனைக் காலத்திற்கு முன்பே தோன்றி இருக்க வேண்டும். அப்பட்டிப்பட்ட தமிழை 450 ஆண்டுகள்கூட தொடர்பில்லாத பிள்ளையாரிடம் அதுவும் பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கொடுத்து அதற்கு ஈடாகத் தமிழைக் கேட்கிறான் என்றால், தமிழர்கள் தமிழை எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தினாலும் ஏற்றுக் கொண்டு சமயமே பெரிதென வாழத் தலைப்பட்டுவிட்டனர் என்பதாகத்தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் இருக்கட்டும்; சைவமும் பக்தி இலக்கியமும் செழித்த அண்மைக் காலத்தில்கூட பிள்ளையாருக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பன்னிரு திருமுறைகளிலும் சொல்லப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான சிவனெறிப் பாடல்களில் பிள்ளையாரைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. இந்து என்ற சொல்லும் இல்லை; ஏன், இராமாயனத்திலும் மகாபாரதத்திலும்கூட இந்து என்ற சொல் இல்லை.
எனவே, தமிழனுக்கு தன் இனத்தைப் பற்றிய கம்பீரமும் இல்லை; மொழியைப் பற்றிய பெருமையும் இல்லை; சமயம் குறித்த தெளிவும் இல்லை; நாளைக்கு நானே முகத்தில் கொஞ்சம் முடியை வளர்த்துக் கொண்டு ‘கீரன் ஜி’ என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஓர் வண்ண ஆடையை இடுப்பில் சுற்றிக் கொண்டு அரை நிர்வாணத்துடன் எங்காவது வீதியில் உட்கார்ந்தால் என் காலில் விழவும் கூட்டம் வரும். அதுதான் இன்றைய தமிழனின் சமய நெறி என்றாகி விட்டது.
இப்படிப்பட்ட தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டாவது,வெங்காயமாவது? அவனுக்கு திருவள்ளுவரும் வேண்டாம்; தொல்காப்பியனும் வேண்டாம்; நல்ல தமிழனையும் தெரியவில்லை; கள்ளத் தமிழனையும் அடையாளம் காண முடியவில்லை.
அதனால், கிருஷ்ணனுடன் குலாவி நாரதப் பெருமான் பெற்ற 60 பிள்ளைகளின் பெயர்களைக் கொண்ட சித்திரைப் புத்தாண்டே போதும் அவனுக்கு! வேண்டாம் என்றால், யார் பூனைக்கு மணி கட்டுவது? என்ற எலிகளின் வாதம்தான் மிஞ்சும்.
பூனைக்கு மணி கட்ட ஒவ்வொரு தமிழனாலும் முடியும். மாற்றம் என்பது தனி நபர் மாற்றத்தில் தொடங்கி சமூக மாற்றம் ஏற்படுவது வரலாறாகும். ஆதலால் அறிவுத் தெளிவடைந்த தமிழர் அவர்தம் குடும்பம் நண்பர் உறவினர் என்று மெதுமெதுவாக விளக்கி வந்தாலே போதுமானது. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.நம் மக்களும் மாறுவார்.
கட்டுரையாளர் சமயத்தைத் தொட்டு பேசும் பொழுது சற்றே தடுமாறுவது தெரிகின்றது.
#பன்னிரு திருமுறைகளிலும் சொல்லப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான சிவனெறிப் பாடல்களில் பிள்ளையாரைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை.#
இக்கூற்று பிழையானதென்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
சிறுதொண்ட நாயனார் மூன்றாம் திருவள்ளுவர் நூற்றாண்டில் வாதாபி போரில் (தற்போதைய மகாராஸ்டிரா) வெற்றி கொண்டு திரும்பிய பொழுதே அவருடன் அங்கிருந்து கொண்டு வந்த பிள்ளையார் சிலை ஒன்றை அவர்தம் பூர்வீக கிராமத்தின் சிவாலய குளக்கரையில் வைத்து வழிபட ஆரம்பித்ததிலிருந்து தென்னகத்தில் பிள்ளையார் வழிபாடு தொடங்கியதை தென்னாட்டு சைவ வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது.
திருவாசகத்தில் பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. இது மணிவாசகரின் ஒரு கடவுள் கோட்பாட்டை உணர்த்துகின்றது.
ஆனால் தேவாரத்தில் பிள்ளையார் சிவனின் குமரன் மற்றும் முருகனுக்கு அண்ணன் என்னும் புராணக்கூற்றின் குறிப்புகள் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான் காண் – 6:24
– அண்ணன் கணபதி, அவனுக்கு இளையவன் முருகன், இவ்விருவருக்கும் தந்தையாகி ஆதி முதல்வனாக விளங்குபவன் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைக் காண்
2. வள்ளி முலைதோய் குமரன் றாதை வான்றோயும் – 2:63:6
– வள்ளி மணாளனாகிய முருகன் தந்தையாய் வான்தோயும்
3. விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே – 2:73:1
– இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர்
4. சமர சூரபன் மாவைத் தடித்தவேற் குமரன் தாதை … 5:64:10
5. குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை – 6:42:6
6. கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங் – 6:75:7
7. குமரன்தன் தாதைக்கே உந்தீபற – 8:14:17
8. அமரரும் அறியா ஆதிமூர்த்தி குமரன் தாதை குளிர்சடை இறைவன் – 11:7:19 – வரி 13 & 14
9. அமரர்த் தாங்குக் குமரன் தாதை – 11:28:16 – வரி 23
10. சத்தித் தடக்கை குமரன் நற்றாதைதன் தானமெல்லாம் – 11:33:57
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை” என்னும் பாடல் நல்வழி நூலை அருளிய பன்னிரண்டாம் திருவள்ளுவர் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த அவ்வையார் என்னும் பெண்மணி பாடியதாகும். அவர் பத்தி பரவசத்தில் தெய்வ வணக்கத்தைப் பாடியதில் தவறில்லை காரணம் இவ்வம்மையார் பிள்ளையார்பால் பத்தி கொண்டவர். இவரே விநாயகர் அகவலும் பாடியவர் என்று சைவ வரலாற்று ஆய்வாளர்களால் கருதப் படுகின்றது. இக்காலம் முதலே பிள்ளையார் முருகர் வழிபாடு குறிப்பாக தமிழரிடையே ஒரிரு சாரரால் முதன்மைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. அதுவே சமுசுகிரத வழிபாட்டு முறை முருக வழிபாட்டில் நுளைய வழி கோலியது. எல்லாம் தமிழன் தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொண்டது. தான் வணங்கும் தெய்வத்தை முன்னிலைப் படுத்த வேண்டுமானால் அத்தெய்வ வழிபாட்டில் சமசுகிரத வழிப்பாட்டை மேற்கொண்டால் மேன்மை பெறும் என்று நம்பியதால் வந்த வினை. அந்த வினையைத் தமிழர் இன்று அனுபவிக்கிறோம். இதைச் செய்தவர் இன்று இத்தவற்றுக்கு தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. .
#நாளைக்கு நானே முகத்தில் கொஞ்சம் முடியை வளர்த்துக் கொண்டு ‘கீரன் ஜி’ என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஓர் வண்ண ஆடையை இடுப்பில் சுற்றிக் கொண்டு அரை நிர்வாணத்துடன் எங்காவது வீதியில் உட்கார்ந்தால் என் காலில் விழவும் கூட்டம் வரும். அதுதான் இன்றைய தமிழனின் சமய நெறி என்றாகி விட்டது.#
இதுதான் இன்றைய தமிழரில் பெரும்பாலோரின் நிலை காரணம் இவர்களுக்கு ‘இந்து மதம்’ என்றால் அது என்ன கன்றாவி என்று புரியவில்லை.
இனிமேலும் சும்மா இருக்க முடியாது இந்த பச்சையப்பாஸ் கல்லூரியில் பிச்சை எடுக்கிற விவகாரம் ! இப்பொழுது இருக்கும் ஆண்டு கணக்குகள் (Gregorian காலண்டர், 1958) தான் முடிவடைந்தது ! அதற்கு பின்னரே மற்ற மதங்களும் மார்க்கங்களும் இதனை பின் பற்றி, பெயர் மாற்றம் செய்து கொண்டனர் ! இருப்பினும் அதிலும் துல்லியமான கணக்கு இன்னமும் செய்ய பட வில்லை …..இல்லை என்பது என் வாதம் ! நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாள் அதிகம் வந்து LEAP DAY உருவாகிறது ! இதனை தமிழர்கள் சரி செய்து , அதாவது 1 நாள் என்பது 23 மணி நேரம் 56 நிமிடம் வருகிறது ! இதில் ஒரு சமன்பாடு செய்து , சூரிய Chandra கிரகணம் மாறாமல் அதனுடன் உறைந்து, நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகம் வராமல் அதனை சரி செய்து , எங்கே 11 மணி 58 வினாடிகள் இரவும் பகலும் சரியாக பிரிகிறதோ, அந்த நாட்க்களில் தமிழ் வருட பிறப்பு என்று அறிவியுங்கள் ! அன்று நான் நீங்கள் சொல்லும் நாளில் தமிழ் வருட பிறப்பை கொண்டாட தயாராக இருக்கிறேன் ! செய்ய முடிய வில்லையென்றால் , பச்சையப்பாஸ் கல்லூரில் பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள் ! வழி காட்டுகிறேன் என்று தவறான வழி காட்டுதலை நிறுத்துங்கள் ! உங்களுக்கு விளங்க வேண்டும் என்றால் : “வாயாலே வடை சுடுவதை நிறுத்துங்கள் !”
கட்டுரையாளர் சரியாகவே சொல்லியிருக்கிறார். தமிழர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். தமிழர் அல்லாத ஒரு சிலர் தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழரைக் கேவலப்படுத்துவது என்பது எல்லாக் காலங்களிலும் உண்டு. இப்போதும் உண்டு. அவர்களை ஒதுக்கிவிட்டு நாம் சரியான பாதையில் செல்வோம். அதுவும் தமிழன் என்னும் கம்பீரத்தோடு செல்வோம்! சரித்திரம் அறியாதவர்களைப் பற்றி கவலை வேண்டாம்!
நக்கீரன் அவர்களே ! உமது இந்த சுய விமர்சனத்துக்கு நமது பாராட்டுக்கள் ! நீர் உண்மையான தமிழன் என்பதை ஒத்துக்கொள்கிறோம் ! சோற்றுக்கும்
! பணத்திற்கும் ! தமிழன் அடிமையென்பதையும் ! தன் இனம் வாழ்வதை பொறுக்காதவன் தமிழன் ! என்று அழகாக அறிவு பூர்வமாக சுய சரிதையை ஒப்புவித்த தாங்கள் ! இன்னும் ஒன்றை சேர்த்துக்கொண்டிருந்தால் உமது விமர்சனம் அருமையாக இருந்திருக்கும் ! சுய மரியாதை யற்ற தமிழன் இதை விட கேவலமாக மல்லாக்க படுத்து கொண்டு சொந்த முகத்தில் எச்சில் உமிழமுடியாது ! தமிழனை தரம் குறைவாக மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ இல்லையோ ! தமிழன் தமிழனை கேவலமாக துப்புவதில் சளைத்தவனில்லை ! உமது விமர்சனம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ! குறைகளையே விமர்சித்து பழகி போன உம்மைப்போன்ற வர்களை திருத்தவும் ,மாற்றவும் முடியாது !
எப்பொழுதெல்லாம் விஷயங்கள் உணர்ச்சி வசப்பட்டு கூறுபடுகிறதோ , அப்பொழுதெல்லாம் அதனுடன் உள்ள உண்மை கேள்வி குறியாகிறது, சிந்தனையாளர்களின் மத்தியில் ! இதை புரிந்து கொள்ள வேண்டும் ! மகாதீர் அவர்கள் கெட்டவர் என்று அன்வர் அவர்கள் கூறிய பொழுதெல்லாம் நமக்கு சில அரசியல் சாணக்யத்தின் உண்மை தெரியவில்லை ! இன்று அவர்களின் கதையே வேறு . இதை வேறு விதமாகவும் கூறலாம் ! உதாரணத்திற்கு: சீமான் ஆட்சிக்கு வந்தால் மருத்துவம் மற்றும் கல்வி இலவசம் என்கிறார் ! இதை அவ்வளவு சுலபமாக செய்துவிட முடியாது காரணம் தமிழ் நாட்டின் கடன் அவ்வளவு உள்ளது ! 450 , 000 கோடி உள்ள கடனை யார் அடைப்பது ? 8 கோடி மக்கள் விகிதம் வைத்தாலும் , சராசரி 56 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டிட வேண்டும் ! செய்வார்களா ? ஒரு 5 பேர் கொண்ட குடும்பம் என்றால் , ஏறக்குறைய இரண்டரை லட்சம் ரூபாய் கட்டிட வேண்டும் ! பிறகுதான் சுத்திகரிக்க படட தண்ணீர் , தொலைத்தொடர்பு மற்றும் சுத்திகரிக்க பட்ட மின்சார பிரச்சனைக்கு தேவையான 100 000 கோடியை உலக நாடுகளிடம் கடன் வாங்க முடியும் (கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக தரும் ஒரு நாட்டிற்கு இது பொருந்தும்) . இந்த பொருளாதார பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும் ! இதற்கு வளர்ந்த நாடுகள் புத்தாக்க உற்பத்தியை பெருக்கும் கண்டு பிடிப்புகளில் முன்னேறும். அதில் கிடைக்கும் சந்தை வியாபாரத்தை வைத்து பிழைக்கும் ! வளர்ந்த நாடுகளை நாம் பகைத்து கொண்டால் , வல்லாதிக்கம் நாம் செய்யும் தொழில்களை திருட்டு VCD போட்டு விற்கும் ! அரிசியில் 22 000 வகைகளை வைத்திருந்த இந்தியா , இன்று சோற்றுக்கு திண்டாடுகிறது, அப்படி ! எனவே இந்த கால நேரங்களை சரி செய்து , அதனை புத்தாக்க முயற்சியில் நுழைக்கும் பொழுது அறிவியல் வளரும் , நாட்டின் மீது நம்பிக்கை பெருகும் , கல்வியின் தரம் உயரும் ! இஸ்லாமியர்கள் லூனார் காலண்டர் தான் பயன்படுத்துகிறார்கள் . சோலார் காலெண்டர் அல்ல ! ஆண்டு 2000 இரு முறை ஹரி ராய கொண்டாடினர் ! காரணம் அது அவர்களின் கால கணிதம் , மாதங்கள் 27 நாட்களை கொண்டவையும் உள்ளன , அது அவர்களின் குழந்தையும் கூட ! பாபியலோனியர்கள் லூனார் காலண்டரின் முன்னோடிகல் ! இப்படி தன் சொந்த பிள்ளைக்கு பெயர் வைத்து பெருமிதம் கொள்ள வேண்டுமே தவிர , அடுத்தவன் பிள்ளைக்கு initial என்பேரு போட்டாதான் நான் தமிழன் என்றால் , நகைக்காமல் என்ன செய்வார்கள் ?
தமிழர் குறைகளை மூடி மறைத்து மறப்பதை விட அவற்றை மக்கள் நடுவே எடுத்துப் போட்டு தீர்வு காண்பது நல்லது. அவ்வகையில் இக்கட்டுரை தமிழருக்கு ஒரு நல்ல தெளிவைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.