- கி.சீலதாஸ், மார்ச் 26, 2018.
மேற்கத்திய நாடுகளின் தத்துவத் தந்தை என போற்றப்படும் ஏதன்ஸின் சாக்ரடீஸ், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் ஜனநாயகத்தை வெறுத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கான காரணத்தைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். சாக்ரடீஸின் தலையாய நோக்கம் ஒரு நாட்டின் ஆட்சியாளர் தத்துவஞானியாக இருக்கவேண்டும். தத்துவஞானி பதுத்தறிவு கொண்டவராக இருப்பார், அவர் பொருள்வளத்தின்மீது கொண்டிருக்கும் கவனத்தைவிட அறிவு வளர்ச்சியில் மிகுந்த கவனம் கொண்டிருப்பார். பொதுவாக எடுத்துகொண்டால், ஆட்சியாளர் பொருள் ஈட்டுவதில் மட்டும் கவனத்தைச் செலுத்தினால் அத்தகையச் செயல் மக்களின் அறிவு வளர்ச்சியை முடக்கிவிடும். அதே வேளையில் நாட்டு வளத்தைப் பெருக்குவதில் காட்டப்படும் உற்சாகம் மக்களின் அறிவு வளர்ச்சியிலும் இருக்க வேண்டும்.
அறிவு சார்ந்த வளர்ச்சியானது ஆட்சியாளர்களிடமும், வாக்காளர்களிடமும் இருந்தால்தான் ஜனநாயகத்தின் மகிமை ஓங்கி நிற்கும். வெறும் வாக்களிக்கும் உரிமையை மக்களுக்குக் கொடுப்பதால் மட்டும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட மாட்டாது. ஆளுபவர்தான் தத்துவஞானியாக இருக்கவேண்டும் என்கின்றபோது ஜனநாயக கோட்பாட்டின்படி ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பவர்களும் தத்துவஞானிகளாக இருக்கவேண்டும் என்றால் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அது சாத்தியமில்லைதான். அதே சமயத்தில் தத்துவஞானி ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் தெரிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். வாக்களர்களின் வாக்குகளைப் பெற திட்டமிடுபவர்கள் வாக்காளர்களின் சிந்திக்கும் ஆற்றலை மதிக்கவேண்டும் : கீழ்த்தரமான ஊழல் வழியில் இறங்கக்கூடாது. ஜனநாயகம் வலிமையாகச் செயல்பட வாக்காளர்களின் தீர ஆராய்ந்து பார்க்கும் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.
நம் நாட்டு ஜனநாயக முறை நாடாளுமன்ற ஜனநாயகமாகும். வாக்காளர்கள், ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்கும் தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் முறையைப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. இதே கேள்வியைத்தான் சாக்ரடீஸூம் எழுப்பினார். என்ன அந்தக் கேள்வி? நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு சாராரிடம் ஒப்படைக்கும்போது அந்தப் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? வாக்குரிமை என்பது பிறப்புரிமையா? அல்லது அறிவு சார்ந்த உரிமையா? பொதுவாகவே எல்லா ஜனநாயக நாடுகளும் அந்தந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்ப வாக்குரிமையை தம் குடிமக்களுக்கு வழங்குகின்றன. என்பது பொதுவான நிலை. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்துவோர் எப்படிப்பட்ட தகுதியைப் பெற்றிருக்கவேண்டும்? பிறப்புரிமை என்பதோடு அந்த குடிமகனின் (குடிமகளின்) கடமை தீர்ந்துவிடுமா? இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் எப்படிப்பட்ட விளக்கத்தை முன் வைத்தார்? வாக்களிக்கும் உரிமை மற்றும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பிறப்புரிமையாக இருக்கலாம் ஆனால் அந்த உரிமையை நல்ல முறையில் பயன்படுத்தும் தகுதியை வாக்காளர்கள் பெற்றிருக்கிறார்களா? அவ்வாறு கிடைக்கப்பெற்ற பிறப்புரிமையைக் கொண்டவர்கள் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்களா? என்பது தொடர்ந்துவரும் கேள்விகளாகும். சிந்திக்கும் ஆற்றலுக்கு உதவியாக இருப்பது கல்வி. அப்படிப்பட்ட அற்புதமான கல்வி கொடுக்கப்படுகிறதா? அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி நன்கு சிந்தித்து வாக்களிக்கும் தராதரத்தைப் பெற்றுவிடுவார்கள். அது நடக்கிறதா?, என்று சாக்ரடீஸ் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார். அதைத்தான் நாம் கேட்க வேண்டும்.
தமது பேச்சால் மற்றும் கேள்விகளால் உண்ணி போல் பல வினாக்களை எழுப்பிய சாக்ரடீஸ் இளைஞர்களைக் கெடுத்தார், அவர் ஒரு நாஸ்திகர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார். உண்ணி என்று அவர் வர்ணிக்கப்பட்டதன் காரணம் என்ன? சமுதாயப் பிரச்சனைகளை விடாமல் கிளப்பி எல்லோரையும் சிந்திக்க வைத்தார். அவருடைய அறிவுத்திறமையால் அநீதியாக நடந்துகொள்பவருக்கு எரிச்சல் ஊட்டும் தன்மையோடு நடந்துகொண்டார். வாக்காளர்களும் உண்ணிபோல் இருக்கவேண்டுமெனின் தவறாகாதே!
சாக்ரடீஸின் வாக்காளர் மக்களைக் குறித்த ஓர் ஒப்பீடு எக்காலத்திற்கும் ஜனநாயகத்திற்குத் தேவையானதாகும். பலகேள்விகளை எழுப்பிய சாக்ரடீஸ் தம்மை ஒரு மருத்துவர்போல் கருதினார். அதாவது சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பல சமுதாய நோய்களைக் களையும் பொருட்டு மருந்து நல்க வந்தவர். தம்மை எதிர்த்து குற்றம் சாட்டுபவர்கள் இனிப்புவகை பலகாரங்களை விற்கும் வியாபாரிகள்: அவர்கள் மருத்துவரைக் காட்டி, இவர் உங்கள் உடம்பை கெடுத்துவிடுவார். இல்லாததை இருப்பதாகச் சொல்லி நீங்கள் சாப்பிடுவதை தடுக்கிறார். நான் விற்கும் மிட்டாய் நல்லது. சாப்பிடலாம் இனிப்பான உணவு என்றெல்லாம் சொல்கிறார்கள். இதில்தான் வித்தியாசம் காணப்படுகிறது. கசப்பான மருந்து உடலுக்கு நல்லது. உடலில் உள்ள நோயைப் போக்கும். இனிப்பு பலகாரங்கள் , இனிப்பான ருசியைத் தந்துவிட்டு பிறகு பலவிதமான நோய்களுக்குக் காரணமாகிவிடுகிறது.
எனவே ஜனநாயகத்தில் இனிப்பு பலகாரங்களை விற்கும் வியாபாரிகள் அதிகரித்துவிட்டனர், சமுதாய நோயைக் குணப்படுத்தும் மருத்துவர்கள் வளர்க்கப்படவில்லை. இந்த ஒப்பீட்டைச் சற்று ஆழமாக சிந்திக்கும்போது ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களும், இருக்கும் ஆட்சியைத் தற்காத்து கொள்ள நினைப்பவர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். நமக்கு இனிப்புப் பலகாரங்களை வழங்குபவர்கள் வேண்டாம். சமுதாய நோய்களை நீக்கும் சமுதாய மருத்துவர் தேவை என்று நினைத்தால் சாக்ரடீஸ் சொன்னது நியாயமாகத் தெரியும் – காரணம், இருதரப்பினரையும், இனிப்பு விற்பவரையும் மருத்துவரையும், நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் திறன் வாக்காளர்களுக்குத் தேவை. அந்தத் தேவை பூரணம் பெறும்பொழுது ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம்.
அருமையான பதிவு. மேலும், அறிவியல் சார்ந்த கட்டுரைகளுக்கு பாருங்கள் http://thescienceway.com