படை பலமும் பொருள் வலிமையும் கொண்டிருக்கும் ஈஸ்வரன் நடத்திய நம் நாடு நாளேட்டின் நிலையை தாய்மொழி நாளிதழும் எட்டும்போலத் தெரிகிறது. நம் நாடு இதழுக்கு நஜிப்பின் அரவணைப்பு எந்த அளவிற்கு இருந்ததோ, ஏறக்குறைய அதே அளவு நஜிப் ஆதரவில் வெளிவந்து கொண்டிருந்த தாய்மொழி நாளிதழ், கேவியஸின் அரசியல் பயணம் நிலைகுத்திவிட்ட நிலையில், அவரின் பராமரிப்பில் வெளிவந்து கொண்டிருந்த அந்த நாளிதழும் நிலைகுத்தும் நிலையை அடையலாம்.
பொது விற்பனையைப் பற்றியோ வாசகர் விருப்பத்தைப் பற்றியோ சற்றும் கருதாமல் தன்னைப் பற்றிய விளம்பரத்திற்கும் அப்படியே போகிற போக்கில் நஜிப்பைப் பற்றிய பிரச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட தாய்மொழி நாளிதழை தமிழ்ப்பள்ளிகளுக்கு கொத்தாக அனுப்பி வைப்பதன்வழி அவ்வேடு இத்தனைக் காலமும் நிலைபெற்று வந்தது.
இந்த அளவுக்கு ஒரு செல்வாக்கு பெற்றிருந்த கேவியஸைப் பற்றி தேசிய முன்னணியின் தலைமைச் செயலரும் அதன் ஒருங்கிணைப்பாளருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோரும் நன்கு அறிந்திருந்தார். அப்படிப்பட்டவரை, சிகாம்புட் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று கேவியஸ் காட்டமாகக் குறிப்பிட்டது, அவரின் அரசியல் தைரியத்தை காட்டுவதாக கொள்ளலாம்!
கடந்த இரு பொதுத் தேர்தலிகளிலும் தோல்வியைத் தழுவிய அவர், இந்த முறை எப்படியாவது தேர்தலில் வென்றாக வேண் டும் என்னும் வேட்கையில் இருந்தார். அதற்காக, அவர் கையாண்ட விதமும் மேற்கொண்ட முயற்சியும் தெங்கு அட்னானின் கடிதத்தால் அழிந்தது.
மொத்தத்தில் ஒரு விமானியான அவர் செலுத்த விரும்பிய ‘அரசியல் விமானம்’, அவரின் ஓடுபாதையிலேயே தரைதட்டி நிற்கிறது, தப்பித்தார் விமானி என்றும் பொருள் கொள்ளலாம்!
கேவியஸின் தடாலடி அறிவிப்புகளும் கருத்துகளும் நடவடிக்கைகளும் ஊரும் உலகமும் அறிந்ததுதான். அந்த தைரியம் அவருக்கே உரித்தானாது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்காக இந்த அளவிற்கு மல்லுக் கட்டி, தன்னுடைய அரசியல் பயணத்திற்கு தனக்குத் தானே ஒரு கேள்விக் குறியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம், தற்போது இல்லை என்பதில், வருந்த வேண்டியது தேசிய முன்னணியாகும்!
சாத்தியமான வழிமுறைகள் எத்தனையோ இருந்தும், அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு, மன உறுதியுடன் அரசியலில் ஈடுபட்டது, தேசிய முன்னணியின் தலைமை, மஇகா தலைமையை மட்டுமல்ல; அந்த பாரம்பரிய முன்னணியின் மற்ற உறுப்புக் கட்சிகளின் தலைவர்களைக் கூட நெருடச் செய்துவிட்டது.
தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், கேமரன் மலை தொகுதி கிடைக்காததால், அவர் வெளிப்படுத்திய கருத்துகளை ஏற்கும் மனப்பக்குவம் தேசிய முன்னணியின் தலைமையை இல்லை என்பது, அதன் பலவீனத்தை மட்டுமே காட்டுகிறது!
தேசிய முன்னணியை விட்டு மைபிபிபி விலகப் போகிறது; நம்பிக்கைக் கூட்டணியில் மைபிபிபி இணையப் போகிறது; கேவியஸ் சுயேச்சையாக போட்டியிடப் போகிறார் என்றெல்லாம் பரவிய செய்திகள் கண்டு, துணைப் பிரதமரே எச்சரிக்கும் நிலை ஏற்பட்டது, கேவியஸின் பலத்திற்கான அறிகுறியாகும்!
ஜசெக வலுவாக இருக்கும் சிகாம்புட் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக லோக பால மோகனை முன்னிறுத்தியது தேசிய முன்னணிதான். இவருக்குத்தான் போட்டியிட விருப்பமில்லை; அப்படியே போட்டியிட்டாலும் வெல்ல முடியாது என்றும் சொல்லிவிட்டார். நிலைமை அப்படியிருக்க, இன்னொருவரை நிறுத்த முனைந்த தேசிய முன்னணியின் நிலையை இவர் ஏற்காததில் வியூகம் இருந்தது விவேகமும் இருந்தது.
இப்படி வரிசையாக தொடர்ந்த கேவியஸை அடக்க ஒரே வழி, அவரின் கட்சித் தலைவர் பதவியைப் பிடுங்குவதுதான் என்ற நிலைக்கு தேசிய முன்னணி தலைமை வந்துவிட்டது.
காலமெல்லாம் அவரின் காலடிக்கு கீழேயே இருந்த அவரின் மூன்றாம், நான்காம் கட்டத் தலைவர்கள் அவருக்கு எதிராக, இப்படி ஒரு அதிரடி முடிவு எடுப்பதைத் தடுக்க முடியாது என்ற நிலை உறுதியாகத் தெரிந்தவுடன், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர், கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர், பேராக் மாநில ஆலோசகர் ஆகிய பொறுப்புகளில் விலகி விட்டதாக அறிவித்தார்.
கேவியஸ், ஒவ்வாத அரசியலில் முரண்பாடு கொண்ட வகையில்தான் இருந்தார். அவர் தனக்கு வாய்த்த பொய்யான அரசியல் – பொது வாழ்க்கையை தானே முடித்துக் கொண்டது ஒருவகையில் நல்லதுதான்! அவலமான அரசியலில் இருந்து அவருக்கு கிடைத்தது ஒரு விடுதலையாகும்!
‘ஞாயிறு’ நக்கீரன்
சபாஷ் கேவியஸ்
தவறு கேவி எஸ் மீது தான். அது ம.இ.கா.வின் தொகுதி என்று தெரிந்தும் அது தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது அவர் ம.இ.கா. வை மதிக்கவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. அவர் யாரையும் மதிக்கவில்லை. தமிழரையும் மதிக்கவில்லை. தமிழ் மொழியையும் மதிக்கவில்லை. அவர் போவதே நல்லது. பெரும் சுயநலவாதி! தமிழருக்கு இவரால் எந்தப் பயனும் இல்லை!