‘ஞாயிறு’ நக்கீரன் – கோலாலம்பூர், மே 02: எரிநெய் எனப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று இரவு கட்டாயம் குறைக்கப்படுகிறது. அடுத்த வாரம் இதே நாளில் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மக்களின் நலனில் நாட்டமும் கரிசனமும் கொண்ட இன்றைய இடைக்கால இந்தச் சலுகையை அளிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
பெட்ரோல், டீசல் விலையை வாரத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறையைப் பின்வற்றி வரும் மத்தியக் கூட்டரசு கடந்த ஆறு வாரங்களாக ஏற்றாமல் அதே விலையை நிலை நிறுத்தி இருப்பதே, இந்த அரசு மக்களுக்கான, குறிப்பாக வாக்காளப் பெருமக்களுக்கான அரசு என்பதை மெய்ப்பிக்கிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓரளவு ஏற்றம் கண்டு வந்த நிலையிலும் சுமார் ஒன்றரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை அப்படியே நிலைநிறுத்தி இருப்பது வாகன உரிமையாளர்களின், குறிப்பாக வாக்காளர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
ஒருவேளை அடுத்த வார(மு)ம் புதன்கிழமை, மே 9-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தாலும் அதன் பயன்பாடு அமலுக்கு வரும் நள்ளிரவு 12.00 மணிக்கெல்லாம் பொதுத் தேர்தல் முடிவுகள் அத்தனையும் அனேகமாக அறிவிக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களின் மனம் குறிப்பாக வாக்காளர்களின் மனம் குளிர்ந்தாலும் அதன் பயன் அரசுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
அதேவேளை, இப்படியும் நடக்கக்கூடும்; வழக்கமாக டீசல்-பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்படும் புதன்கிழமேயே பொதுத் தேர்தலும் நடைபெற இருப்பதால், அன்றைய நாளில் எரிநெய் விலை குறைக்கப்படுவதாக செய்யப்படும் அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படலாம்; வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்களின் கவனத்திற்கு எட்டும் வகையில் புதன்கிழமைதோறும் மாலை 5.00 மணி அளவில் செய்யப்படும் இந்த அறிவிப்பு இன்னும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு மக்களுக்கு, குறிப்பாக வாக்களர்களுக்கு இந்த அரசாங்கம் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எது எவ்வாறாயினும் இன்னும் ஆறு நாட்கள் கழித்து பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இன்று மாலை அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் மலேசிய மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் விலைக் குறைப்பை எதிர்பார்க்கலாம்.
அப்படியே பெட்ரோல், டீசல் குறைக்கப்படாவிட்டாலும்கூட, மக்களுக்கு எப்போதும் நன்மையை அளித்துவரும் மலேசிய மத்தியக் கூட்டரசாங்கத்தால் ஒரு சென் கூட இன்று உயர்த்தப்படாது என்பதையும் மலேசியர்கள், குறிப்பாக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ளலாம்; நம்பிக்கை வைக்கலாம்; ஆறுதல் பெறலாம்.