‘ஞாயிறு’ நக்கீரன், நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு முதல் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். நாட்டின் தென் கோடி மாநிலமான ஜோகூரின் வடபகுதியில் உள்ள கம்பீர் சட்டமன்றத் தொகுதியில்தான் நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
அத்தகையை வெற்றிக்கு உரியவராக இப்பொழுதே காட்சி தருபவர் அங்கு போட்டியிட இருக்கும் டான்ஸ்ரீ முகைதின் யாசின்தான். அந்தத் தொகுதியில் 2004 முதல் வெற்றிக் கொடி நாட்டிவரும் அசோகன், இம்முறை அங்கு வெற்றி பெறுவது கேள்விக் குறிதான்.
2008-இல் மலேசிய அரசியலில் சுழன்று அடித்த ஆழிப் பேரலையிலேயே கரை சேர்ந்த அவர், கடந்த பதின்மூன்றாவது பொதுத் தேர்தலில்குட தோல்வியின் விளிம்புவரை சென்றபின்னர்தான் ஒருவழியாக அவர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் கரை சேர்ந்தார். அப்போது, மக்கள் கூட்டணி சார்பில் பாஸ் கட்சி வேட்பாளரான டத்தோ டாக்டர் மாஃபுஸ் முகமட் போட்டியிட்டடார்.
அந்தத் தேர்தலில் பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தைப் பற்றி அதிகமாக குரல் எழுப்பியதால், ஜசெக பாஸ் கட்சி மீதான தன் அக்கறையைக் குறைத்துக் கொண்டது. அத்துடன், முஸ்லிம் வாக்காளர்களில்கூட நடுநில சிந்தனைப் படைத்தவர்கள் பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டத்தைப் பற்றி கண்டு கொள்ளவில்லை; அத்துடன் புறக்கணிக்கவும் செய்தனர்.
ஆனாலும் மஇகா-வின் ஒரு சில நல்ல தலைவர்களில் அவரும் ஒருவர். மஇகா-வின் ஜோகூர் மாநிலத் தலைவராக தற்பொழுது பொறுப்பு வகித்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் சமூகத் தொண்டாற்றும் நல்ல மக்கள் பிரதிநிதி அவர்.
புக்கிட் காம்பீர் – ஜோகூர் மாநில மஇகா தலைவர் டத்தோ எம்.அசோஜன் கடந்த மூன்று தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதை பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜோகூர் மாநிலத்தின் லெடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தொகுதி காம்பீர்.
சனிக்கிழமை புக்கிட் காம்பீர் நகருக்கு வருகை தந்த மொகிதின் யாசின் அங்கு உணவகம் ஒன்றில் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தான் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார்.
ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இந்தத் தகவலை மொகிதின் யாசின் மறு உறுதிப்படுத்தினார்.
“எனக்கு இங்கே நிறைய ஆதரவு இருப்பதாக உணர்கிறேன். எனவே, இங்கே ஆதரவாளர்களைக் கலந்து பேசிய பின்னர், இங்கு வருகை தந்து நிலைமைகளை கண்டறிந்த பின்னர், எனது போட்டியை உறுதிப்படுத்துகிறேன்” என மொகிதின் யாசின் கூறினார்.
எனினும் தான் போட்டியிடப் போகும் நாடாளுமன்றத் தொகுதி எது என்பதை மொகிதின் யாசின் இன்னும் அறிவிக்கவில்லை.
அநேகமாக அவர் தனது முந்தைய தொகுதியான பாகோ தொகுதியிலேயே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதன் மூலம் ஜோகூர் மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றினால் மாநில மந்திரி பெசாராக மொகிதின் நியமிக்கப்படக் கூடும்.
2013 பொதுத் தேர்தலில் காம்பீர் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட அசோஜன் 310 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.
ஏறத்தாழ 53 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் 40 விழுக்காடு சீன வாக்காளர்கள் இருக்கின்றனர்.
20,975 வாக்காளர்களைக் கொண்ட காம்பீர் தொகுதியில் 1.5 (ஒன்றரை) விழுக்காடு மட்டுமே இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். ஏறத்தாழ 1 விழுக்காடு பூர்வ குடியினர் போன்ற மற்றவர்கள் இருக்கின்றனர்.
ஜோகூரின் வட பகுதியில், தங்காக் நகரை உள்ளடக்கிய லெடாங் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் காம்பீர் ஒன்றாகும். தங்காக், செரோம் ஆகியவை மற்ற இரண்டாகும்.